பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ சட்டத்தில் கைதான ஆசிரியை நித்யா !
பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ சட்டத்தில் கைதான ஆசிரியை நித்யா !
பள்ளி மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
,
ஆரணியை அடுத்த பையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் உமேஷ்குமார் (வயது 45), ஆசிரியர். இவரது மனைவி நித்யா (30). வேலூர் மாவட்டம் மாமண்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். நித்யா, பையூர் பகுதியை சேர்ந்த ஐ.டி.ஐ. பயிலும் 17 வயது மாணவருடன் தகாத உறவில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதுதொடர்பாக உமேஷ்குமார், மனைவியை பலமுறை எச்சரித்துள்ளார். மேலும் நித்யா இதற்கு முன்பு செங்கம் புதுப்பாளையம் பகுதியில் பணிபுரியும் போது பள்ளி மாணவர்களிடமும் தகாத உறவில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து உமேஷ்குமார் ஆரணி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அவர் கலெக்டர் கந்தசாமியிடம் புகார் அளித்தார்.
இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட நன்னடத்தை அலுவலரும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலருமான சித்ரபிரியா விசாரணை நடத்தினார். அதில் சம்பவம் உண்மை என்பது தெரியவரவே ஆரணி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மைதிலி போக்சோ சட்டத்தின் கீழ் நித்யாவை கைது செய்து, ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.
பின்னர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதியும், மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதியுமான (பொறுப்பு) எஸ்.தேவநாதன் வழக்கை விசாரித்து, ஆசிரியை நித்யாவை ஏப்ரல் 4-ந் தேதிவரை வேலூர் மத்திய பெண்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார், பள்ளி மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ஆசிரியை நித்யாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பாக ஆரணி மாவட்ட கல்வி அலுவலர் டி.சம்பத் மாமண்டூர் அரசு பள்ளியில் தொடர்ந்து துறை ரீதியான விசாரணை நடத்தி வருகிறார்.