திருச்சி சாரதாஸ் ஜவுளி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை
திருச்சி என்எஸ்பி ரோட்டில் இயங்கி வருகிறது சாரதாஸ் ஜவுளிகடை. மிகப்பிரம்மாண்டமான கட்டிடத்தில் இயங்கி வரும் இக்கடையில் எந்நேரமும் வாடிக்கையாளர்கள் கூட்டம் இருக்கும். புதிதாக இந்த கடைக்கு வருபவர்கள் வியந்து போகும் அளவுக்கு இதன்பிரமாண்டம் இருக்கும். தினமும் பல லட்சக்கணக்கில் வியாபாரம் நடக்கும்.
இந்த கடையில் வருமான வரி ஏய்ப்பு நடப்பதாக சமீபகாலமாக வருமான வரித்துறைக்கு அதிக அளவில் புகார்கள் வந்தது. இந்நிலையில் இன்று காலை 11.30 மணியளவில் திடீரென 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக கடைக்குள் புகுந்தனர். பின்னர் அனைத்து பிரிவுகளுக்கும் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் கோடிக்கணக்கில் வருமான வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. வருமான வரித்துறையின் இந்த அதிரடி சோதனை திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இந்த கடையில் தடை செய்யப்பட்ட 2 டன் எடை கொண்ட பிளாஸ்டிக் பைகளை சப் கலெக்டர் ஆதித்யா செந்தில்குமார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது