கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம் !
கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் “நிகழ்த்துக்கலைத் துறையில் ஆராயப்படாத புதிய ஆய்வுக் களங்கள் மற்றும் பரிமாணங்கள் ” எனும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் செயலர் அருள்பணி லூயிஸ் பிரிட்டோ தலைமை வகித்தார், முதல்வர் முனைவர் ப.நடராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக கலைமாமணி அரிமளம் பத்மனாபன், மற்றும் கலைமாமணி முனைவர் சே. ரகுராமன் பங்கேற்று குத்து விளக்கேற்றி நிகழ்வை தொடங்கி வைத்தனர்.
![கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரி](https://angusam.com/wp-content/uploads/2024/02/WhatsApp-Image-2024-02-28-at-5.35.32-PM-1.jpeg)
நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் ஆய்வறிஞர்கள் மாணவர்கள் பங்கேற்றனர். ஆய்வுக் கோவை நூல் வெளியிடப்பட்டது. 150 க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கினர். இலங்கை, சிங்கப்பூர், கனடா, ஆகிய நாடுகளில் இருந்து மெய்நிகரில் கட்டுரை அளித்தனர். மற்றும் 30 மேலை நாட்டு மாணவர்கள் ஜெர்மன், ஆஸ்திரியா, இத்தாலி நாடுகளைச் சேர்ந்தோர் கலந்து கொண்டனர். முன்னதாக தொடக்க விழாவில் சிறப்புரையாற்றிய அரிமளம் பத்மனாபன் அவர்கள் இன்றைய நவீன காலத்தில் நுண்கலைத் துறையில் ஆய்வுகள் நிறைய செய்யப்பட வேண்டும், மாணவர்கள் முன் வர வேண்டும், நாட்டார் மரபையும் செவ்வியல் மரபையும் கற்றுத் தெளியும் கலைஞர்கள் வரலாற்றையும் கற்றுத் தேர்ந்து ஆய்வில் ஈடுபடுதல் வேண்டும் என்றார்.
நிறைவு விழாவில் சிறப்புரையாற்றிய பேராசிரியர் முனைவர் ரகுராமன் தன் சிறப்புரையில் கல்வி என்பது முடிவற்ற தொடர் நிகழ்வு மறைவாக பழங்கதைகள் நமக்குள்ளே பேசிப் பயனில்லை திறமுள்ள கலைகள் எனில் வெளிநாட்டார் அதை வணங்குதல் வேண்டும் என்ற பாரதியின் வரியை மேற்கோள்காட்டி நமது கலைகளை மேலை நாட்டு கலைகளுடன் உலக நாடுகளுடன் ஒப்பிட்டு நமது கலைச் சிந்தனையை, உயர்ந்த அறக் கோட்டுபாடுகளை ஆய்வுகள் வழி நிறுவிட வேண்டும். ஆய்வு என்பது மூன்றாண்டுடன் முடிவுறுவது அல்ல வாழ்நாள் முழுதும் தொடர்வதே சிறந்த ஆய்வாகும்.
நிகழ் கலையிலுள்ள நுணுக்கங்கள், அதன் இன்றியமையாமை உலகிற்குத் தர வேண்டும். அவற்றை நோக்கி ஆய்வுகளை முடுக்கிவிட வேண்டும். ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது ஆயுத வளர்ச்சியோ அறிவியல் வளர்ச்சியோ அல்ல ஒரு இனத்தின் பண்பாடும் நாகரிகமும் கலை வழியாக எங்கே வளருகிறதோ அதுதான் வளர்ச்சி அது நம்முடைய கலைகளில் உள்ளது, மனித குலத்தின் முன்னேற்றத்திற்கான முன்னோடியான சிந்தனைகளைக் கொண்டது நமது கலைகள், எனவே அவற்றை துல்லியமாக ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். நம்முடைய கலைகளை மேலை நாட்டார் வணங்கிட வேண்டும் என்றார்.
![கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரி](https://angusam.com/wp-content/uploads/2024/02/கலைக்-காவிரி-நுண்கலைக்-கல்லூரி.jpeg)
கருத்தரங்கின் நோக்கவுரை மற்றும் அறிக்கையை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆக்னஸ் ஷர்மினி வழங்கினார். கட்டுரை வாசித்தளித்த ஆய்வளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. சான்றிதழை திருச்சி மறைமாவட்டத்தை சேர்ந்த அருள்பணி அந்தோணிசாமி மற்றும் அருள் சகோதரி எலிசபெத் சென்ஃடர் வழங்கினர். கலைக் காவிரி இசை, மிருதங்கம், நடனத்துறை முதுகலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
முன்னதாக வரவேற்புரையை முனைவர் வேங்கடலட்சுமி ஆற்றினார். ஆய்வாளரும் திரைப்பட பின்னணி பாடகருமான திருமதி.கல்பனா ராகவேந்தர் நன்றியுரையாற்றினார். அமர்வுத் தலைவர்களாக மொழித்துறை இசைத்துறை, நடனத்துறை மிருதங்கம், வீணைத்துறை பேராசிரியர்கள் பங்கேற்று செயலாற்றினர். இருபால் பேராசிரியர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர். நிகழ்வை ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர் திருமதி. முனைவர் லிண்டா தொகுத்து வழங்கினார்.
–