அங்குசம் பார்வையில் ‘அதோ முகம் படம் எப்படி இருக்கு ! ..
அங்குசம் பார்வையில் ‘அதோ முகம் ‘. தயாரிப்பு: ரீல் பெட்டி & தாரிகோ பிலிம் ஒர்க்ஸ். டைரக்டர்: சுனில் தேவ். ஆர்ட்டிஸ்ட்ஸ்: எஸ்.பி.சித்தார்த்( இவர் புது சித்தார்த்), சைதன்யா பிரதாப்,( இருவரும் புதுமுகங்கள்) அருண் பாண்டியன், மாத்யூ வர்கீஸ், அனந்த் நாக், பிபின் குமார், ஜே.எஸ்.ரவி, சரித்திரன். டெக்னீஷியன்கள்: பின்னணி இசை: சரண் ராகவன், ஒளிப்பதிவு: அருண் விஜயகுமார், பாடல்கள் இசை: மணிகண்டன் முரளி, எடிட்டிங்: விஷ்ணு விஜயன் ஒலிக்கலவை: டி.உதயகுமார், மேக்கப்: நரசிம்மா & அம்மு பி.ராஜ். பிஆர்ஓ: இரா.குமரேசன்.
அஸ்ஸாமில் மூவாயிரம் ஏக்கர் டீ எஸ்டேட்டுக் சொந்தக்காரர் அனந்த் நாக். இவருக்கு ஊட்டியில் இருக்கும் 150 ஏக்கர் டீ எஸ்டேட்டின் மேனேஜராக இருக்கிறார் அனந்த் நாக்கின் உயிர் நண்பன் மார்ட்டின் ( புதுமுக ஹீரோ எஸ்.பி.சித்தார்த்) . தனது காதல் மனைவி லீனா( புதுமுக ஹீரோயின் சைதன்யா பிரதாப்) வுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். மனைவிக்கு பிறந்த நாள் பரிசாக ‘சர்ப்ரைஸ் கிஃப்ட் ‘ கொடுக்க ஆசைப்படுகிறார் மார்ட்டின். இதற்காக மனைவியின்செல் போனில் , அவருக்குத் தெரியாமலேயே Hidden Face என்ற App – ஐ டவுன்லோட் பண்ணி, எஸ்டேட் ஆபீஸில் இருந்தபடி லேப் டாப்பில் வீட்டில் இருக்கும் மனைவியின் ஆக்ட்டிவிட்டிசை ரெக்கார்ட் பண்ணி, அதை மனைவியிடமே கொடுத்து சர்ப்ரைஸ் பண்ண வேண்டும் என்று செயலியை செயல்படுத்துகிறார். அதன் பின் லேப் டாப்பில் மார்ட்டின் பார்க்கும் லீனாவின் ஆக்ட்டிவிட்டிஸ் இல்லீகலாக தெரிகிறது.
இதனால் பயத்திலும் சந்தேகத்திலும் உறைந்து போய் லீனாவை ‘ வாட்ச் ‘ பண்ண ஆரம்பிக்கிறார் மார்ட்டின். அதன் பிறகு நடக்கும் சூப்பர் சஸ்பென்ஸ் த்ரில்லர் சினிமா தான் இந்த ‘அதோ முகம் ‘ . பண்டைக் கால தமிழில் அதோ முகம் என்றால் மனிதர்களுக்குள் மறைந்திருக்கும் இன்னொரு முகம் என்று அர்த்தம். இந்த தமிழ் வார்த்தையை தலைப்பாக வைத்ததற்காகவே இயக்குனர் சுனில் தேவ் பாராட்டுக்குரியவர், வாழ்த்துவதற்கு தகுதியானவர். இந்த தலைப்புக்கு ஏற்றார் போல Hidden Face App – ஐ கனகச்சிதமாக பொருத்தியிருக்கிறார்.
படம் ஆரம்பித்து பதினைந்தாவது நிமிடத்திலேயே ‘ஹைடன் ஃபேஸ்’ ஆக்டிவேட் ஆகிவிடுவதால் பார்வையாளனும் ஆக்டிவேட்டாகிவிடுவான் என்பதில் ஐயமில்லை. பத்து நிமிடங்களுக்கு ஒரு ட்விஸ்ட். அந்த ட்விஸ்டுக்கு ஒரு ரிசல்ட். அந்த ரிசல்ட்டுக்கு ஒரு ட்விஸ்ட் என ஸ்கிரீன் ப்ளேவில் செமத்தியான த்ரில்லிங் கேம் ஆடி ரசிகனை மெய் சிலிர்க்க வைத்த சுனில் தேவ், சூப்பர் தேவ். இந்தளவுக்கு மிக மிக நேர்த்தியான திரைக்கதை, Wonderful சீன் பெர்ஃபெக்சன், கேரக்டர்களிட ம் கேட்டு வாங்கிய பெர்ஃபாமென்ஸ் இதெல்லாம் ஒருங்கே அமைந்த க்ரைம், த்ரில்லர், சஸ்பென்ஸ் சினிமா,இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத முகம் தான் இந்த ‘அதோ முகம் ‘ என்று அடித்துச் சொல்லலாம். ஹீரோ சித்தார்த் கனகச்சிதமாக கதையைப் பிடித்து, இந்தக் கதை எந்த சீனில் எப்படிப்பட்ட நடிப்பைக் கேட்கிறதோ, அதை கரெக்டாக கொடுத்து அசத்திவிட்டார்.
இவருக்கு சரிக்குச் சமமாக களம் இறங்கி பலப்பல எக்ஸ்பிரஸன்களால் நம் மனசில் நிற்கிறார் ஹீரோயின் சைதன்யா பிரதாப். அதிலும் க்ளைமாக்ஸில் ” என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கவே உனக்கு இருபத்தஞ்சு வருசம் ஆகிருக்கு மார்ட்டின். ஆனால் நாங்க இருபத்தஞ்சு வருசத்துக்கு முன்னாடியே ஆரம்பிச்சுட்டோம் ” என வில்லி முகம் காட்டுவது அபாரம். சைதன்யா வின் அப்பாவாக வரும் மாத்யூ வர்கீஸ், சித்தார்த்தின் நண்பர்கள், இன்னொரு எஸ்டேட் ஓனராக வரும் நடிகர் என அனைவருமே அருமையான தேர்வுகள். க்ளைமாக்ஸில் செம மாஸாக எண்ட்ரி ஆகிறார் அருண் பாண்டியன்.
படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் அவருடைய வேட்டை ஆரம்பிக்கும் போல. இவர்கள் தவிர, மற்ற இரண்டு ஹீரோக்கள் என்றால் அது கேமரா மேன் அருண் விஜயகுமாரும் பின்னணி இசைத்த சரண் ராகவனும் தான். திரைக்குள் லேப் டாப் திரையையும் அதன் காட்சிகளையும் தெளிவாக காட்டியது, ஊட்டியின் அழகிய பகுதிகளையும் திரைக்கதை திகிலையும் நமக்கு ஏற்படுத்திய வித்தைக்கான் அருண் விஜயகுமார்.
இதயத்தை பலவீனமாக்கும் இடி ஓசை இல்லை, காது ஜவ்வு கிழியும் காட்டுக்கத்தல் இல்லை. ஆனால் நம் காதுகளுக்குள் இதமாக நுழைந்து இதயம் நிறைக்கிறது சரண் ராகவனின் பின்னணி இசை. அதேபோல் ஒலிக்கலவையில் ஜாலம் புரிந்திருக்கும் உதயகுமார் உழைப்பும் உன்னதம். பொதுவாக சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களை ஒரு முறை தான் பார்க்க முடியும். ஆனால் இந்த ‘அதோ முக’த்தை காட்சி அழகியல், திறன் மிக்க திரைக்கதைக்காக இரண்டாவது முறை பார்க்கலாம், பார்த்தே தீர வேண்டும்.
– மதுரை மாறன்