அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சாதனைகளும் பாகுபாடுகளும் !

ஐ.பி.எல். தொடர் (24)

திருச்சியில் அடகு நகையை விற்க

1983 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு நிலையான அழுத்தமான இடம் கிடைத்துவிட்டது. அதை வெள்ளை நிறத்தவர்களின் நாடுகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தியாவின் மதிப்பைக் குறைத்துவிட வேண்டும் என்கிற அவர்களின் எண்ணத்திற்கேற்ப ஒரு வாய்ப்பு அமைந்தது.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் ஐரோப்பியர்கள் குடியேறிய 150-ஆம் ஆண்டைக் கொண்டாடும் வகையில் 1985-ஆம் ஆண்டு பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் நிறுவனத்தின் ஸ்பான்சரில் உலகச் சாம்பியன் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்தது. அதுவரை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சாம்பியனாகியிருந்த அணிகளான வெஸ்ட் இன்டீஸ், இந்தியா ஆகியவற்றுக்கு மாற்றாக இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா இந்த சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்லும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பு. ஆஸ்திரேலியாவில் டோர்னமென்ட் நடந்ததால் அந்த எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இந்திய அணிக்கு இந்த முறை சுனில் கவாஸ்கர் கேப்டனாக இருந்தார். 1983 உலகக் கோப்பை போட்டியில் இடம்பெறாத புதிய வரவான மொகமத் அசாருதீனும், உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு கவனம் பெற்றிருந்த ரவி சாஸ்திரியும் சாம்பியன் கிரிக்கெட்டில் முக்கியத்துவம் பெற்றிருந்தார்கள். உலகக்கோப்பையை வென்ற அணியின் கேப்டனாக இருந்த ஆல்ரவுண்டர் கபில்தேவ் இந்த  டோர்னமென்ட்டிலும் அசத்தினார். வெள்ளை நிற நாடுகளின் எதிர்பார்ப்புக்கு மாறாக, இறுதிப்போட்டிக்கு வந்த அணிகள் இந்தியாவும் பாகிஸ்தானும்தான்.

ஐபிஎல் கிரிக்கெட்பங்காளிகள் இருவரும் ஆடியதால், ஆஸ்திரேலியா – இங்கிலாந்தைவிட இந்தியா – பாகிஸ்தான் நாடுகளில் ஆட்டம் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது. கபில்தேவ்வின் வேகப்பந்து வீச்சு பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியது. லெக் ஸ்பின்னரான சென்னையை சேர்ந்த எல்.சிவராமகிருஷ்ணன் சிறப்பாக வீசி பாகிஸ்தானின் முக்கிய பேட்ஸ்மென்களை திணறடித்தார். கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் வென்று, சாம்பியன் ஆனது. சாம்பியன் ஆஃப் சாம்பியன்ஸ் என்ற தொடர் நாயகன் பட்டத்தை ரவி சாஸ்திரி வென்றார். அவருக்கு ஆடி100 கார் பரிசளிக்கப்பட்டது. அதில் இந்திய அணி மொத்தமும் ஏறிக்கொண்டு மெல்போர்ன் கிரிக்கெட் கிரவுண்டை சுற்றி வந்தது. வெற்றிக் களிப்பில் ஷாம்பெய்ன் நுரை பொங்கியது. வெள்ளை நிறத்தின் ஆதிக்கத்திலிருந்து கிரிக்கெட் முற்றிலுமாகத் தகர்ந்துவிட்டது என்பதை இந்த சாம்பியன் கோப்பை டோர்னமென்ட் நிரூபித்ததுதான் குறிப்பிடத்தக்க வெற்றி.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

இந்திய அணி அதன்பின் உலகக் கோப்பையை வெல்வதற்கு 2011வரை காத்திருந்தபோதும், டெஸ்ட் மேட்ச், ஒன் டே, டி20 என எல்லா வகை கிரிக்கெட்டுக்கும் தகுதியானதாக உருவானது. அணி தோற்றாலும் இந்திய அணியின் தனிப்பட்ட ஆட்டக்காரர்களின் சாதனைகளால் இந்திய கிரிக்கெட் கவனம் பெற்றது. இந்தியாவில் ஒரு மதம் போல கிரிக்கெட் மாறியது என்பதைவிட மாற்றப்பட்டது என்பதே உண்மை.

டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமை கவாஸ்கருக்கு உண்டு. சதம் அடிப்பதில் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் சாதனையை கவாஸ்கர் மிஞ்சினார். விக்கெட்டுகளை வீழ்த்துவதில் நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹார்ட்லியின் உலக சாதனையை கபில்தேவ் விஞ்சினார். ஸ்ரீகாந்த்தின் அதிரடி ஆட்டம், ரவிசாஸ்திரி போட்ட போடு, அறிமுகமான முதல் ஆட்டத்திலிருந்து தொடர்ச்சியாக 4 சதம் அடித்த அசாருதீனின் அசத்தல் இவையெல்லாம் இந்திய கிரிக்கெட் அணியின் தரமான சம்பவங்கள். அதன் பிறகு வந்தவர்தான், சச்சின் டென்டுல்கர் சகாப்தம்.

1992 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா – நியூசிலாந்து நாடுகளில் நடந்தது. இந்திய அணியில் கபில்தேவ்வுக்கு அது கடைசி உலகக் கோப்பை போட்டி. சச்சின் டென்டுல்கருக்கு அது முதல் உலகக் கோப்பைப் போட்டி. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இருவரும் ஆடியதும், அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. அதன்பின், சச்சின் ஆட்டமெல்லாம் இந்திய ரசிகர்களுக்கு விருந்து. இளம் வீரர்களுக்கு பாடம். உலகக் கிரிக்கெட்டில் சாதனை.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

1998ஆம் ஆண்டு சார்ஜாவில் நடந்த கோக்கோ கோலா கோப்பை  முத்தரப்பு போட்டியில், இறுதி ஆட்டத்தில் இந்தியா இடம்பெற வேண்டுமென்றால் அரை இறுதியில் 276 ரன்கள் எடுத்தாக வேண்டும்  என்ற நிலை. அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொண்டது. குறிப்பிட்ட ரன்களை எடுக்காவிட்டால், நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு சென்று விடும். இந்தியாவின் ஒரே நம்பிக்கை சச்சின் டென்டுல்கர்.

அரை இறுதியில்  இந்தியா தோற்றாலும், இறுதிப் போட்டிக்கான ரன் ரேட் கிடைக்கச் செய்தார் டென்டுல்கர். இறுதிப்போட்டியில் அதே ஆஸ்திரேலியாவை அதே சச்சினின் பேட்டிங் வென்று காட்டியது. கோக்கோ கோலா கோப்பையை அசாருதீன் தலைமையிலான இந்திய அணி வென்றது. இப்படி பல ஆட்டங்கள் சச்சின் டென்டுல்கரின் தனிப்பட்ட திறமையால் இந்திய அணியைக் கவனிக்க வைத்திருக்கிறது. ஒரு நாள் போட்டிகளில் முதல் இரட்டை சதம், டெஸ்ட்-ஒன் டே இரண்டிலும் அதிக சதங்கள், பந்து வீச்சிலும் கெட்டிக்காரத்தனம் என ரசிகர்களின் இதயநாயகனானார் சச்சின் டென்டுல்கர்

கோவி.லெனின்
கோவி.லெனின்

மும்பையின் டென்டுல்கரைத் தொடர்ந்து கொல்கத்தாவின் சவுரவ் கங்குலி இந்திய அணிக்கு கிடைத்தார். டெல்லியின் வீரேந்திர ஷேவாக் இரண்டு முறை 300 ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். எனினும், இந்திய கிரிக்கெட் அணியில் மும்பையே ஆதிக்கம் செலுத்தி வந்தது. டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு ஆகியவை  அடுத்தடுத்த இடங்களுக்கு முட்டி மோதின. சென்னையைப் பொறுத்தவரை குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களாக இந்திய அணியில் இடம்பிடித்து வந்தனர். இவற்றுக்கு காரணம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ.யில் நிலவிய சாதி-மத-அரசியல் ஆதிக்கமும், அந்தந்த ஊர்களின் கிரிக்கெட் கிளப்களின் ஆதிக்கமும் ஆகும். சென்னையில் உள்ள எம்.சி.சி. கிளப்பில் நிலவும் ஆதிக்கமும் பாகுபாடுகளும் தனி ஆய்வுக்குரியவை. இவற்றைக் கடந்து இந்திய அணியில் இடம் பிடிக்கும் வீரர்களின் சாதனைகள் ஒட்டுமொத்த அணிக்கும் பெருமை சேர்ப்பவை.

ஆதிக்கத்தையும் பாகுபாட்டையும் கடந்து இந்திய அணியில் இடம்பெற்ற ஹரியானா ஹரிகேன் கபில்தேவ் கிரிக்கெட்டிலிருந்து ரிடையர்டாகி, 10 ஆண்டுகள் கழித்து, மலைசூழ் மாநிலமான ஜார்கண்டிலிருந்து ஒரு சூறாவளி இந்திய அணிக்குள் வந்தது. அந்த சூறாவளியின் பெயர், மகேந்திர சிங் தோனி.

(ஆட்டம் தொடரும்)

—  கோவி. லெனின், மூத்த பத்திரிகையாளா் 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.