ஊருக்கு மட்டும் தான் உபதேசமா?

-இளங்கோவன் முத்தையா

0

ஊருக்கு மட்டும் தான் உபதேசமா?

கொஞ்ச நாட்களுக்கு முன்பு, எழுத்தாளர் ஜெயமோகனுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட இருந்ததாகவும், அதை அவர் மறுத்துவிட்டதாகவும் ஜெயமோகனே அவரது தளத்தில் எழுதி அது வழக்கம் போல சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகவும் ஆனது.  அந்த நேரத்தில் அவர் தனக்கு சாஹித்ய அகாதமி விருதை வாங்குவதிலும் ஏற்பில்லை என்ற கருத்தை முன்வைத்திருந்தார்.

அதற்கடுத்த முறை அவரிடம் உரையாட வாய்ப்பு கிடைத்த போது, பத்ம விருதுகள் வழங்கப்படும் முறை, அதற்கான லாபி உள்ளிட்ட பல தரவுகளை எனக்குச் சொன்னார். அதில் பல விஷயங்கள் நான் அவர் சொல்வதற்கு முன்பே கேள்விப்பட்டவைதான். ஆனால் அவர் அதைக் கொஞ்சம் நுணுக்கமாக விவரித்தார் என்று சொல்லலாம்.

அந்த உரையாடலின் போதே நான் அவரிடம் உங்களுக்கு “சாஹித்ய அகாடமி விருது கொடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா, மாட்டீர்களா?” என்று கேட்டேன். “சாஹித்ய அகாடமி என்றில்லை, எந்த ஒரு அமைப்பும் அளிக்கும் விருதை நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றார்.

- Advertisement -

- Advertisement -

 

அது குறித்து அவரது தளத்தில் அவரெழுதிய ஒரு கடிதத்தில் “அரசு அளிக்கும் விருதுகள், கௌரவங்களை ஏற்பதில் பிழையோ, குறைவோ ஏதுமில்லை. ஒட்டுமொத்தக் குடிமக்களின் பிரதிநிதியாக நின்றே அரசு அதை வழங்குகிறது. வழங்குபவர் மக்களின் பிரதிநிதி. அரசரோ, தலைவரோ அல்ல” என்றும் அதே சமயம்  “வெண்முரசு எழுதுவதற்கு முன்பு எனக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டிருந்தால் வாங்கியிருப்பேன், இப்போது நான் வேறொரு இடத்திலிருப்பதால் தன்னால் அரசு அளிக்கும் விருதுகளையும் ஏற்க இயலாது” என்றும் எழுதியிருக்கிறார்.

ஆனால் அதற்குக் காரணமாக அவர் சொல்லும் கருத்து மிக முக்கியமான ஒன்று. “ஒரு சாதகன், அவனுடைய குரு நிலையில் இருப்பவர்களிடம் அன்றி எவரிடமும் பணியலாகாது. அரசன் முன்னால் குறிப்பாக” என்று எழுதுகிறார் ஜெயமோகன். இதை நம்புகிறவர்கள் நம்பலாம், அல்லது அவரைக் குறித்த எதையும் வழக்கமான எள்ளலுடன் கடந்து போகிறவர்கள் போகலாம். ஆனால் என்னைச் சற்றே அசைத்துப்பார்த்த “இது உண்மையாக இருந்தால் இந்த ஆள் பெரிய ஆள்தான்” என்று என்னை ஜெயமோகன் குறித்து நினைக்க வைத்த வார்த்தைகள் அவை. ஒரு படைப்பாளன் தன் சுயமரியாதையோடு ஒரு வாசகன் முன் உயர்ந்து நிற்கும் இடம் அது. மிக முக்கியமாக, ஜெயமோகன் போல அல்லாது என்னுடைய அரசியல் நிலைப்பாடுகளோடு பொருந்திப்போகும் என் விருப்பத்திற்குரிய, மரியாதைக்குரிய எத்தனையோ எழுத்தாளர்கள், என் கண்முன்னே நிலைதடுமாறும் புள்ளியும் இதுவே.

வெண்முரசு நூலை ‘இது தன் வாழ்நாள் சாதனை’ என்று சொல்லும் ஜெயமோகன் அவரது வெண்முரசு நூல் வரிசையில் முதல் நூலான முதற்கனல் நூலைத் தன்னுடைய குருக்களில் ஒருவராக மதிக்கும் இளையராஜாவுக்கு சமர்ப்பித்திருக்கிறார். எனக்கு ரொம்பவே ஆச்சரியமளித்த விஷயங்களில் இதுவும் ஒன்று.

அப்படியானால், அரசன் தரும் விருதுகளை ஒரு சாதகன் வாங்கக்கூடாது என்றும், அரசன் முன் பணிய மாட்டேன் என்று சொல்லும் ஜெயமோகனே தனது குரு என்று சொல்லும் இளையராஜா எப்படி ஒரு ஆளுமை உள்ள ஆளாக நம் முன்னே வானளவு உயர்ந்து நின்றிருக்க வேண்டும்?  ஆனால் அவரோ இன்று மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்காக வாழ்த்துகளையும், வசவுகளை யும் ஒருசேரப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.

எனக்கு விவரம் தெரிந்த காலம் முதல் இளையராஜாவை எதிர்த்து ஒரே ஒரு வார்த்தை எழுதினால் கூட உயிரைக் கொடுத்து, அவருக்கு ஆதரவாகச் சண்டை போடும் நண்பர்கள்கூட இன்று அவருக்கு எதிரான கருத்து களை வருத்தத்தோடு பதிவு செய்கிறார்கள்.

இந்த மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி என்பது ஒரு வகையில் அறிஞர்களையும், ஒரு துறையில் சிறந்தவர்களையும் அரசதிகாரத்தில் பங்கு பெற வைப்பது என்ற பொருளி லேயே பாவிக்கப்படுகிறது என்றாலும், நடைமுறையில், எனக்கு விவரம் தெரிந்து, ஏதோ ஒரு துறையில் சாதித்து மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப் பட்டவர்கள், எந்த ஒரு விவாதத்திலும் அனல் பறக்கப் பேசியதோ, மக்களுக்கு எதிரான, அரசின் அறிவிப்புகளுக்கோ, சட்டங்களுக்கோ எதிராக ஒரு வார்த்தை கூறியதோ, மக்களுக் கான நல்ல திட்டங்களை, சட்டங்களை முன்னெடுத்துச் செய்தததோ என்று எதுவும் கிடையாது என்பதுதான் இவர்களுடைய வரலாறு என்பதால், அது ஒரு அலங்காரப் பதவியாகவே நீடிக்கிறது.

4 bismi svs

சரி ஒரு அலங்காரப் பதவியைப் பெற்றதற்காகவா இளையராஜா இவ்வளவு விமர்சிக்கப்படுகிறார் என்றால் உண்மை அதுவல்ல என்று தமிழ்நாட்டின் அரசியலை அரிச்சுவடியிலிருந்து படிக்க ஆரம்பித்திருக்கும் ஒருவர் கூட சொல்லிவிடுவார் “இந்த எதிர்ப்பு அதற்காக அல்ல, இதற்குப் பின்னால் இருக்கும் பாஜகவின் கொள்ளைப் புற அரசியலின் ஒரு பகுதிதான் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்தப் பதவி, அதற்கு இளையராஜா அறிந்தோ அறியாமலோ இரையாகிறார் என்பதாலேயே இத்தனை எதிர்ப்பு” என்று. சரி “மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கான தகுதி இளையராஜாவுக்கு இல்லையா” என்றால்… அதுவொரு அபத்தமான கேள்வி. அவர் ஒரு இசையமைப்பாளர் என்கிற இடத்தைத் தாண்டி தான் ஒரு பிறவிக்கலைஞன், ஜீனியஸ் என்பதை எப்போதோ நிரூபித்து விட்டார். ஒவ்வொரு தமிழனின் சுவாசத்திலும் அவரது இசை கலந்திருக்கிறது என்ற கூற்று மிகையான ஒன்றல்ல. பின் இளையராஜாவின் இடம்தான் என்ன?

என்னைப் பொறுத்தவரை இந்நேரம் இளையராஜாவுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் விருதுகளில் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டிருக்க வேண்டும். சச்சின் டெண்டுல்கர் எப்படி கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படுகிறாரோ, அதோ போல இங்கு இசைக்கடவுளாக,  இசைஞானியாகப் பல ஆண்டுகளாகக் கொண்டாடப்படுகிறவர்தான் இளையராஜா.

அவரது இசை மேதமை குறித்து இங்கு மாற்றுக்கருத்து என்பது கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம். சினிமா இசை தானே என்பவர்கள், பின்னணிப்பாடகியான லதா மங்கேஷ்கருக்கு ஏற்கனவே பாரத ரத்னா அளிக்கப்பட்டிருப்பதை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

என்னுடைய தனிப்பட்ட கருத்து என்பது இதுதான். இளையராஜா இது போன்ற மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி போன்றவற்றைத் துச்சமாக மதித்திருக்க வேண்டும். அவரது நிஜ உயரம் அவருக்கே தெரியவில்லை என்பது ஒரு வரலாற்றுச் சோகம் தான். கிட்டத்தட்ட ஒரு வகையான அரசியல் பொறியில் சிக்கி, வஞ்சிக்கப்பட்ட, விவரமற்ற ஒரு  மேதையாகவே நான் இப்போது அவரைப் பார்க்கிறேன்.

“இசையைத் தவிர இளையராஜாவுக்கு ஒரு கூரும் கிடையாது” என்பது இங்கு பலரால், பலகாலமாகச் சொல்லப்படுவதுதான். அது உண்மையும் கூட என்பதை அவர் மீண்டு மொருமுறை நமக்கு நிரூபித்திருக்கிறார்.

இதில் எனக்கு இன்னொரு வருத்தமும் உண்டு.

ஒரு ஆன்மீகவாதியாக, அனைத்தையும் துறந்த வனாக இளையராஜா தன்னை வெகுகாலமாக அடையாளப்படுத்திக்கொண்டிருந்தார். இசையைத் தவிர வேறெதன் மீதும் பற்றற்ற துறவு வாழ்க்கையில் அவரிருப்பது போல ஒரு பிம்பம் அவர் மீது தொடர்ந்து கட்டமைக்கப்பட்டிருந்தது. அதையே அவரும் பொதுவெளியில் பிரதிபலித்துக்கொண்டிருந்தார்.

நடிகர் ராஜ்கிரண் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் “நான் உடம்பு முழுக்க தங்க நகைகளை அணிந்து கொண்டு இளையராஜாவைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அப்போது அவர் ‘எதற்கு இத்தனை நகைகள்’ என்று கேட்டார். நான் ‘ஒரு ஆத்ம திருப்திக்காக’ என்று சொன்னேன்.

அதற்கு இளையராஜா சட்டென்று ‘ஆத்மாவுக்கு ஏதப்பா திருப்தி?’ என்று கேட்டார். அவரது பதில் என் முகத்தில் அறைந்தது போல இருந்தது. அவரைப் போல பற்றற்ற வாழ்க்கை வாழ்கிறேனோ இல்லையோ, ஆனால், அன்றே நான் அணிந்திருந்த அத்தனை நகைகளையும் கழற்றி வைத்துவிட்டேன்” என்று

நடந்த சம்பவம் உண்மையா இல்லையா என்று தெரியாது. ஆனால் இளையராஜா அப்படிச் சொல்லக்கூடியவர்தான் என்பது நமக்கு வெளிப்படையாகத் தெரிந்த ஒன்றுதானே. இப்போது இசைஞானி இளையராஜாவுக்கென என்னிடம் சில எளிய கேள்விகள் மட்டுமே மிச்சமிருக்கின்றன.

உங்கள் மேதமை என்ன, உங்கள் தகுதி என்ன, உங்களுடைய வாழ்நாள் ரசிகர்களில் பெரும் பாலோரே எதிர்க்கும் ஒரு கட்சியின் ஆதரவில், உங்களுக்கு இப்படி ஒரு அலங்காரப் பதவி அளிக்கப்பட்டதில் உள்ளபடியே உங்களுக்கு மகிழ்ச்சியா, இவ்வளவுதானா நீங்கள்,  ‘ஆத்மா வுக்கு ஏதப்பா திருப்தி?’ போன்ற எலைட் சாமியார்த் தனமான உங்கள் உபதேசங்களெல்லாம் ஊருக்கு மட்டும் தானா, உங்களுக்கில்லையா?

-இளங்கோவன் முத்தையா

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.