உண்மையில் படம் எடுப்பது எளிது. ஆனால் அதை ரிலீஸ் செய்வது என்பது மிக மிக பிரம்ம பிரயத்தனம் ஏன் தெரியுமா ?
இன்றைய உலகம் வேறு மாதிரி மாறி இருக்கிறது. என்னிடம் ஒரு கதை இருக்கிறது. அதை வெறும் முப்பத்தைந்து லட்சம் ரூபாய்க்குள் எடுத்து விடலாம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. அதை ரிலீஸ் செய்ய முதலில் தியேட்டர் கிடைக்க வேண்டும்.
அப்படியே ஓண் ரிலீஸ் செய்தாலுமே தியேட்டர்காரர்கள் ஒத்துழைப்பு வேண்டும்.. அப்ப வேறு வழி இன்றி நான் ரெட் ஜெயண்ட்டை நாடித்தான் போக வேண்டி இருக்கிறது. சரி. தியேட்டர் காரர்களை நம்பி நாம் ஓண் ரிலீஸ் செய்யலாம் என்று பார்த்தால் அதற்கு இப்படி ஒரு படம் வெளி வருகிறது என்ற செய்தியை மக்களிடம் சென்று சேர்க்க வேண்டும்.. அதாவது சினிமாவில் minimum visibility என்று சொல்வார்கள்.
குறைந்த பட்சம் மக்களுக்கு இந்த மாதிரி ஒருபடம் இருக்கிறது என்பதை தெரியப் படுத்தவே விளம்பரங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை செலவழிக்க வேண்டும். எவ்வளவு..? ஒரு கோடி.. படத்தின் பட்ஜெட் முப்பத்தைந்து லட்சம்.. அதற்கு மேல் பிரிண்ட் எனப்படும் டிஜிட்டல் பிரிண்ட்களை தியேட்டருக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.
ஒரு பிரிண்ட் 10 ஆயிரம் என்றால் 100 தியேட்டர்களில் வெளியிடுகிறோம் என்றால் அதற்கு தனியாக பத்து ல ட்சம் வேண்டும். அதாவது தியேட்டர் கிடைத்தால். இவ்வளவையும் தாண்டி தியேட்டருக்கு படம் வந்தால் அதைப் பார்க்க மக்கள் வர வேண்டும். ஒரு வேளை மக்கள் வந்து படம் நன்றாக இருக்கிறது என்று mouth talk பரவி அவர்கள் நிதானமாக தியேட்டருக்கு வருவதற்குள் தியேட்டர் காரர்கள் ஷோக்களை குறைத்து மெல்ல படத்தையும் எடுத்து விடுவார்கள்.
உண்மையில் படம் எடுப்பது எளிது. ஆனால் அதை ரிலீஸ் செய்வது என்பது மிக மிக பிரம்ம பிரயத்தனம். இதைப் பற்றி எழுதணும்னா ஒரு பெரிய நூலே எழுதலாம். அந்தளவுக்கு சிக்கல்கள் இருக்கு..
-நந்தன் ஸ்ரீதரன்