சீமானுக்கு ஆதரவாக ஏர்போர்ட் மூர்த்தி பேச்சு! பதிலடி கொடுத்த பி.எஸ்.பி. நிர்வாகி!
நேற்றைய பரப்புரை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக பேசிய ஏர்போர்ட் மூர்த்தி பேசும்பொழுது”தந்தை பெரியார் இல்லாத உத்தர பிரதேசத்தில் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த மாயாவதியை முதல்வராக கன்சிராம் நிறுத்தினார்’தந்தை பெரியார் அங்கு இல்லாததால் தான் இது நடந்ததாக கூறியுள்ளார். அவருக்காக இந்த பதிவு.
மதிப்பிற்குரிய அறிவு மிகுந்த ஏர்போர்ட் மூர்த்தி ஐயா அவர்களே. இந்தியாவிலேயே தந்தை பெரியாருக்காக அரசு விழா எடுத்து, அரசு சார்பில் சிலைகளை அமைத்து அதனால் தனது ஆட்சி அதிகாரத்தை இழந்த கட்சி பகுஜன் சமாஜ் கட்சி. கூட்டணியில் இருந்த பிஜேபி தந்தை பெரியாரைக் கொண்டு வந்தால் நாங்கள் ஆதரவை வாபஸ் பெறுகிறோம் என்று கூறிய போது”எனது தந்தைக்கு எனது ஆட்சிக்காலத்தில் அரசு விழா எடுத்து சிலைகளை அமைக்க முடியவில்லை எனில் அப்படிப்பட்ட ஆட்சி எங்களுக்கு தேவையில்லை. உங்கள் ஆதரவை நீங்கள் வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள் என கூறியவர் சகோதரி மாயாவதி அவர்கள் ஆட்சியை அதிகாரத்தை இழந்த கட்சி பகுஜன் சமாஜ் கட்சி.

திராவிடக் கழகத்தின் முன்னவரான வீரமணி ஐயா அவர்களை சிறப்பு அழைப்பாளராக அழைத்த போது நீங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளுங்கள் தந்தை பெரியார் அவர்களுக்கு அரசு விழா வேண்டாம் எனக் கூறிய போது”ஆட்சியை இழந்தாலும் பரவாயில்லை நீங்கள் இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ளுங்கள் அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என கொள்கை பிடிப்போடு பேசியவர் அரசியல் விஞ்ஞானி தாதா சாகிப் கன்சிராம் ஐயா அவர்கள்.

இன்று பார்ப்பனியத்தின் அடிவருடியாக இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக, மொழி ரீதியான பிரிவினைவாதத்தை தூண்டி அரசியல் செய்யும் பிஜேபி களின் கைக்கூலிகளாக செயல்படும் சீமான், ஏர்போர்ட் மூர்த்தி போன்ற உங்களைப் போன்றவர்கள் தந்தை பெரியாரை இவ்வளவு இழிவு படுத்தியும் தங்களது ஆட்சி அதிகாரத்திற்கு பங்கம் வரக்கூடாது என அன்று திராவிட கழகத்தின் தலைவர் வீரமணி சொன்ன அறிவுரையை கேட்டு நடக்கும் வலுவிழந்த திமுக அரசாக பகுஜன் சமாஜ் அரசை நீங்கள் நினைக்க வேண்டாம்.
உங்கள் அரசியல் ஆதாயத்திற்காக நீங்கள் யாரை , எந்தக் கட்சியையும் நீங்கள் குறை கூறுவது அது உங்களது அரசியல் லாபம்.
ஆனால் இந்தியாவில் ஊரும் சேரியும் பிரிந்து கிடப்பது, பெண்கள் பாடசாலைகளுக்கும், பணிக்கும் செல்ல முடியாமல் பார்ப்பனிய பிற்போக்கு மனநிலையில் வாழ்ந்து வந்த அன்றைய காங்கிரஸ்காரர்கள், திமுக காரர்கள் முதல் கொண்டு அனைவருக்கும் சுயமரியாதை, பெண்ணுரிமை கற்றுக்கொடுத்த ஒப்பற்ற மாமனிதர் தந்தை பெரியார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சென்னை மாகாணத்திற்கும், மொழிவாரிய மாநிலங்களும் பிரிக்கப்பட்ட 70 ஆண்டுகால வரலாறை கூட அறியாத உங்களுக்கு 2500 ஆண்டுகளுக்கு முந்தைய நாக வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
திராவிடம் என்ற சொல் உருவாக்கப்பட்ட பொழுது மொழிவாரியான மாநிலங்கள் இல்லை.
மொழிவாரியான மாநிலங்கள் என்பது ஆட்சி மொழிக்கு மட்டுமே.
ஒட்டுமொத்த மக்களையும் திராவிடன் என்றால் திருட்டுப் பையன் எனக் கூறுவதே சட்டப்படி நீங்கள் தண்டிக்க வேண்டிய நபர்கள்.
நீங்கள் மறைமுகமாக திராவிடத்திற்கு ஒரே கட்சி திமுக மட்டும் தான் உரிமை என்று மறைமுக பிரச்சாரம் தான் செய்து வருகிறீர்கள்.
அதேபோல பல்லாயிரம் ஆண்டு காலமாக தொன்மை வாய்ந்த தமிழ் மொழி, தமிழர்கள் உலகெங்கும் பரவி கிடக்கிறார்கள். உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது யார் தமிழர் என்று அடையாளப்படுத்த, அதே சமயம் தமிழ் மொழியில் இருந்து உருவான தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய குழந்தைகளை, தாய்க்கும் குழந்தைகளுக்கும் இடையே வேறுபாடை கற்பிக்கும் ஒரு மலிவான அரசியலை செய்து வருகிறீர்கள். தம் இனத்தின் விடுதலைக்காக பாடுபட்ட பிரபாகரனை நீங்கள் வழித்தோன்றலாக எடுத்தால் ஈழத்தில் சென்று அந்த மக்களுக்கான விடுதலையை நோக்கி பயணிக்காமல், அங்கு கொடுமையாக கொன்று குவிக்கப்பட்ட தமிழர்களை அவர்களின் பிணங்களைக் காட்டி அரசியல் செய்யும் மிக கேவலமான வாய்ச்சொல் ஆட்டக்காரர்கள் நீங்கள்.

தொடர்ச்சியாக தந்தை பெரியார் குறித்த உங்களது இழிவான சித்தரிப்புகளுக்கு, கொள்கை பிடிப்பு கொண்ட ஒரே கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி மட்டுமே விடை சொல்ல தகுதியுடையது.
சாதி , மதம் , இனம் , மொழி என எந்த அடிப்படையில் பிரிவினைவாதம் கொண்ட எந்த கட்சிக்காரர் ஆக இருந்தாலும் , உங்களுக்கு சமத்துவ அடிப்படையில் அரசமைப்புச் சட்டத்தை கற்றுக் கொடுக்கும் ஆசான்களாக யானைப்படை வளர்ந்து வருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
என்றென்றும் சமத்துவ தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் வழியில்….
ஜெய் பீம் !
— எடின்பரோ BABL, வழக்கறிஞர்.