‘அங்குசம் பார்வையில் ‘ஜென்ம நட்சத்திரம்’
தயாரிப்பு : ‘அமோகம் ஸ்டுடியோஸ்’ & ஒயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே.சுபாஷினி, ரிலீஸ் : ரோமியோ பிக்சர்ஸ் ராகுல். டைரக்ஷன்: பி.மணிவர்மன். ஆர்ட்டிஸ்ட் : தமன் அக்ஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்ஷா செரின், சிவம், காளி வெங்கட், முனீஸ்காந்த், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சந்தானபாரதி, நக்கலைட்ஸ் நிவேதிதா. ஒளிப்பதிவு : கே.ஜி., இசை : சஞ்சய மாணிக்கம், ஆர்ட் டைரக்டர் : எஸ்.ஜே.ராம், எடிட்டிங் : எஸ்.குரு சூர்யா, பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா & ஏ.அப்துல்நாசர்.
இந்த பூமியில் சாத்தானின் குழந்தை பிறந்தால் என்ன நடக்கும்? என்ற பத்தாம் பசலித்தனமான கதைகள், உலக சினிமாவில் இதுவரை பத்தாயிரத்திற்கும் மேல் வந்துவிட்டன. இந்த ‘ஜென்ம நட்சத்திரம்’ பத்தாயிரத்தில் ஒண்ணு. தமிழ் சினிமாவின் பெர்மனெட்ண்ட் பேய் ஸ்கிரிப்ட்படி கோரமான முகம் ஒண்ணு ஹீரோயின் கனவில் வரும், அலறியடித்துக் கொண்டு எழுவார் ஹீரோயின். “என்னாச்சு?” என கேட்பார் ஹீரோ. அது அப்படியே இந்தப் படத்திலும் ஹீரோயின் மாலவி மல்ஹோத்ராவுக்கு நடக்குது.
சினிமா டைரக்டராகும் ஆசையில் கையில் கதைகளை வைத்துக் கொண்டு ஹீரோ சுற்றுவார். இதிலும் தமன் அக்ஷன் அப்படித்தான் சுத்துகிறார். தயாரிப்பாளர் சந்தானபாரதியிடம் கதை சொல்லி, அது ஃபெயிலியரில் முடிகிறது. ஹீரோயின் ஃப்ரெண்ட் மைத்ரேயா, அவரது லவ்வர் ரக்ஷா, ஹீரோ அக்ஷன், ஹீரோயின் மால்வி ஆகிய நால்வரும் ஒரே பங்காளவில் தங்குகிறார்கள்.
ஒரு நாள் இரவு எம்.எல்.ஏ.வேலராமமூர்த்தியின் உதவியாளர் காளி வெங்கட் ரத்தக் காயங்களுடன் அந்த பங்களாவுக்குள் வந்து விழுகிறார். எம்.எல்.ஏ.விடம் தனது குழந்தையின் ஆபரேஷனுக்காக பதினைந்து லட்சம் கேட்டதாகவும் அவர் கொடுக்காமல் அவமானப்படுத்தியதால், தேர்தல் பட்டுவாடாவுக்காக அவர் கொடுத்த 57 கோடியை ஒரு இடத்தில் பதுக்கி வைத்திருப்பதாகவும் சொல்லிவிட்டுச் சாகிறார். அந்த 57 கோடியைத் தேடி மேற்படி நால்வருடன் சிவம் என்பவரும் சேர்ந்து அந்த பணமிருக்கும் பாழடைந்த பங்களாவைத் தேடி போகிறார்கள்.
அதன் பின் நடக்கும் திகில் ஆட்டம் தான் இந்த ‘ஜென்ம நட்சத்திரம்’. பாழடைந்த பங்களா, பழைய மிஷின்கள் இருக்கும் ஃபேக்டரி செட் போட்ட ஆர்ட் டைரக்டர் எஸ்.ஜே.ராம், மியூசிக் டைரக்டர் சஞ்சய் மாணிக்கம் இவர்களால் தான் இப்படத்திற்கு ஓரளவு திகில் எஃபெக்ட் கிடைக்குது. மற்றபடி பாழடைந்த பங்களாவின் முன்பக்கமிருந்தும் பின்பக்கமிருந்தும் திமுதிமுவென ஓடிவருகிறார்கள். திடீர் திடீரென அலறுகிறார்கள். அப்பப்ப சாத்தான் குழந்தை.. சாத்தான் குழந்தை என கரகர குரலில் எஃபெக்ட் கொடுக்கிறார்கள்.
டைரக்டர் மணிவர்மனின் இதற்கு முந்தைய படமான ‘ஒரு நொடி’யில் க்ளைமாக்ஸின் கடைசி நொடி வரை சஸ்பென்சை பக்காவாக மெயிண்டெய்ன் பண்ணி சபாஷ் வாங்கியிருப்பார். ஆனால் இந்த ;ஜென்ம நட்சத்திரம்’ மொத்தமும் சொதப்பிவிட்டது.
— மதுரை மாறன்