கள்ள சந்தையை மிரட்டும் கம்போடியா ! பார்வையில் சிக்கி தவிக்கும் தமிழக இளைஞர்கள்! நேரடி எச்சரிக்கை ரிப்போர்ட் 😱🧐

0

வேலை  -ஆன்லைன் மோசடி சம்பளம் -ஆயிரம் டாலர்.. அதிர வைக்கும் கம்போடியா..!

 

“கப்பல்ல வேலை மாசம் பத்தாயிரம் சம்பளம்” என்றதும் இருக்கும் வேலையை விட்டுவிட்டு, செல்லும் கவுண்டமணியிடம் செந்தில், “நடுக்கடல்ல கப்பல் நின்னு போனா தண்ணியில இறங்கி தள்ளனும்” என சொல்கிற காமெடி பிரசித்தம். ஒருபுறம் இது காமெடியாக இருந்தாலும் நிஜத்திலும் இது போல் ஏமாற்றப்படுவதும், ஏமாறுவதும் நடந்த வண்ணமே உள்ளன. அப்படியான ஒரு ஏமாற்று கதை மட்டுமல்ல பாதிக்கப்பட்டவர், பிறர் ஏமாறக் கூடாது என்ன எண்ணத்தில் கூறும் ஒரு எச்சரிக்கை கதையும் கூட.

தென்கிழக்கு ஆசியாவில் தாய்லாந்து, வியட்நாம், லாவோஸ் ஆகிய நாடுகளுக்கு நடுவில், ஒண்ணரை கோடி மக்கள் வாழும் நாடு. விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாக கொண்ட இந்நாட்டில், “டிஜிட்டல் மார்க்கெட்டிங் பணி மாதம் 1000 டாலர் சம்பளம் (இந்திய ரூபாயின் சமீபத்திய மதிப்பு 79 ஆயிரம்)” என்ற இணையதள விளம்பரத்தை கண்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த கணினி அறிவியல் படித்த இளைஞர் விண்ணப்பித்துள்ளார்.

வேலைக்கு தேர்வான நபருக்கு நயாபைசா செலவின்றி, இந்திய மதிப்பில் மாதம் ரூ.79 ஆயிரம் சம்பளத்தில் கம்போடியா செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. சென்றவர் 20 நாளில் தாயகம் திரும்பியிருக்கிறார். “1000 டாலர் சம்பளத்தை விட்டுவிட்டு ஏன் தாயகம் திரும்பினீர்கள்” என்ற நம் கேள்விக்கு, “சட்டவிரோதமான செயலை, கார்ப்ரேட் கட்டமைப்புடன் செய்யும் பணி அது” என அவர் கூறிய பதில் நம்மை அதிர்ச்சி அடைய வைத்தது.

 

 

- Advertisement -

- Advertisement -

ஆகஸ்ட் 25-செப் 9, 2022 அங்குசம் இதழில் வெளிவந்தது

 

 

“தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கம்போடியா நாட்டில் டிஜிட்டல் மார்க்கெட்டிங், பிபிஓ, வாய்ஸ் பிராசஸ் கால் பணிக்கு ஆட்கள் தேவை ஆயிரம் டாலர் சம்பளம் எனக் கூறி வெளியான ஆன்லைன் விளம்பரம் மூலம் தமிழகத்தின் பல இடங்களில் நேரடி ஆட்கள் தேர்வு நடைபெற்றது. கம்போடியாவில் உள்ள முன்னணி நிறுவனங்களின் பெயரில் அந்த விளம்பரம் வந்ததால் அந்நிறுவனம் குறித்து இணையதளத்தில் தேடிய போது நம்பத்தகுந்த தகவல்களே இருந்தன. இணையதளங்களின் மூலம் மோசடியாக பணம் சம்பாதிக்கும் பல்வேறு நாடுகளால் தேடப்படும் கொடூர கும்பல் தான் இந்த விளம்பரங்களின் மூலம் ஆட்கள் தேர்வு செய்கிறார்கள். என்பது எனக்கு அப்போது தெரியாது. இங்கு 20 ஆயிரம், 30 ஆயிரம் சம்பளத்திற்கு பதிலாக வெளிநாடுகளில் 60 ஆயிரம் 80 ஆயிரம் சம்பளம் என்னும் போது, அங்கு சென்று வேலை பார்த்து சம்பாதித்து வரவே பெரும்பாலோர் விரும்புவார்கள். அது போலவே நானும் அந்த வேலையில் சேர முயற்சித்தேன். 1000 டாலர் வருமானத்துடன், ஒரு ரூபாய் கூட செலவு இன்றி வெளிநாட்டில் வேலை என்ற சந்தோஷத்தில் புறப்பட்டேன்.

அந்த பணிக்கு ஏஜெண்டுகள் மூலம் தேர்வான பலர் 2 முதல் 5 லட்சம் வரை ஏஜெண்டுகளுக்கு பணம் கொடுத்திருக்கிறார்கள் என்பது எனக்கு பிறகே தெரிய வந்தது. மேலும் அந்த ஏஜெண்டுகளும் கம்போடியாவில் டிஜிட்டல் மார்க்கெட்டிங், பிபிஓ, வாய்ஸ் பிராசஸ் கால் பணிக்கு தான் ஆட்கள் தேர்வு செய்கிறார்கள் என்றே நினைத்துக் கொண்டனர்.

கம்போடியாவில் உள்ள ஃப்நாம் பெந் என்ற  விமானநிலையத்தில் இறங்கியதும் என்னுடன் வந்த 5 பேரினை மட்டும் அங்குள்ள விமானநிலைய அதிகாரி (இமிகிரேஷன் ஆபிஸர்) எங்களை விஐபி போல, வரிசையில் நிற்க விடாமல், தனியாக அழைத்துச் சென்று, ஆவணங்களை உடனடியாக பரீசிலித்து காரில் ஏற்றி அனுப்பிவைத்தார்.

155 கி.மீ. பயண தூரத்தில், வியட்நாம் நாட்டின் எல்லை அருகில் கடல் நடுவே உள்ள சிறிய பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். அது ‘கேசினோ’ என்ற விளையாட்டுக் கூடம். பல அடுக்கு பாதுகாப்புகளுடன் உள்ள அந்த Casino-விற்கு 3 கேட்டுகளை தாண்டி தான் செல்ல முடியும். அதை ‘கேம்ப்’ என்றே குறிப்பிட்டார்கள்.

 

உள்ளே சென்றவுடன் அனைத்து கதவுகளும் மூடப்பட்டது. பில்லி யர்ட்ஸ், சலூன், மசாஜ் சென்டர், சூப்பர் மார்க்கெட், பெரிய வராண்டா, ஏசி ரூம், சிகரெட், மது, போதை பொருட்கள் என சகல வசதிகள் கொண்ட இடமாக அந்த இடம் அமைந்திருந்தது. அந்த இடம் ஒரு Luxury jail என்றே கூறலாம். உள்ளே சைனீஸ், வியட்நாமீஸ் என பலரும் இருந்தார்கள்.

எங்களை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று சிம் கார்டு கொடுத்தார்கள். அங்குள்ள வசதிகளை பெரிமிதமாக குறிப்பிட்டார்கள். ‘1000 டாலர் சம்பளம் இனி உங்கள் வாழ்க்கையில் எந்த கஷ்டமும் இருக்காது’.. என்றெல்லாம் கூறினார்கள். பின்னர் தங்கும் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். ஏசி அறையில் உயர்தர கட்டில் மெத்தை, தலைணை, பேஸ்ட், பாடி லோஷன் என அனைத்து வசதிகள் இருந்தன. எங்களுக்கே பெரிய ஆச்சர்யம்.

எதற்கு இவ்வளவு வசதிகளும், சலுகைகளும் என விசாரித்த போது, “நீங்கள் இங்கே வந்து விட்டால் உங்கள் காண்ட்ராக்ட் பிரீயட் முடியும் வரை வெளியே போக முடியாது. அதனால் அனைத்து தேவை களையும் அவர்களே செய்து தந்துவிடுகிறார்கள்” எனக் கூறினார்கள். சரி நாம் ஊர் சுத்தவா வந்திருக்கிறோம் வேலை செய்யத் தானே வந்திருக்கிறோம் வெளியே போகாவிட்டால் என்ன இப்ப..” என மனதை தேற்றிக் கொண்டேன்.

4 bismi svs

மறுநாள் அலுவலகம் சென்று அமர்ந்த போது அங்கிருந்த போர்டில், “நீங்கள் எல்லாரும் ஸ்காமர்கள் (SCAMMERS-மோசடி பேர்வழிகள்) என்று எழுதி, அந்த பணிக்காகத் தான் உங்களை தேர்வு செய்தி ருக்கிறோம் என்று கூறினார்கள். எனக்கு ‘திக்’ என்றது. என்ன செய்வதென்றே தெரியவில்லை.

 

 

ஆன்லைன் தளத்தில் பணம் திருடுவது, ஏமாற்றுவது எப்படி என்பதை சொல்லித் தரத் தொடங்கினார்கள். இணையதளம் வாயிலாக ஆன்லைன் லாட்டரி உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இந்தியர்கள் பதிவேற்றம் செய்யும் பயோடேட்டாக்கள் மற்றும் புகைப்படங்கள் என லட்சக்கணக்கான இந்திய இளைஞர்கள், இளம்பெண்களின் புகைப்படங்கள், தகவல்களை அதிகளவில் டவுன்லோடு செய்து வைத்திருக்கிறார்கள். இந்தியாவில் இணையதளம் மூலம் மோசடியில் ஈடுபடும் போது இந்த புகைப்படங்கள் பயன்படும் என்பதே அவர்களின் திட்டம்.

 

மேலும் இந்தியாவில் உள்ள செல்போன் நம்பர்கள் சுமார் 300 நம்பர்களை அவர்கள் கைவசம் வைத்திருக்கிறார்கள். ஏன் என்றால் கம்போடியாவிலிருந்து நாங்கள் பேசும் போது, இந்தியாவிலிருந்து தான் பேசுகிறேன் என நம்ப வைக்க இந்த யுக்தியை கையாள்கிறார்கள். ஓடிபி முதற்கொண்டு இந்தியாவிலிருந்து எளிதாக செல்கிறது. இந்தியர்களுடையது மட்டுமின்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செல்போன் எண்களையும் ஏராளமாக வைத்திருக்கிறார்கள். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிம்கார்டுகள், அந்தந்த நாடுகளிலிருந்து வேலை செய்வது போல் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பது தான் தெரியவில்லை. இதற்கென தனியாக ஒரு டிவைஸ், சாப்ட்வேர் வைத்திருக்கிறார்கள் என்பது மட்டும் புரிந்தது.

நாம் இந்தியர்களிடம், இந்திய எண் கொண்டு பேசி, அவர்களிடம் ஏதாவது ஆசை வார்த்தை கூறி, பணம் பறிக்கும் வேலை செய்வதே எங்கள் வேலை என்பது தெரிந்தது. ஒருவரிடம் கூடிய மட்டில் ஏமாற்றி பணம் பறித்தப் பின் பாதிக்கப்பட்டவர்கள், அழுதாலோ, “நீங்கள் பணத்தை திரும்பி தராவிட்டால் நான் செத்துவிடுவேன்” எனக் கதறினாலோ, “நீ செத்துரு” என்று கூறிவிட்டு அவர்களுடன் உள்ள தொடர்புகள் அனைத்திலிருந்தும் வெளியே வந்துவிடுகிறார்கள். “நீ செத்துரு” எனக்கூறி இணைப்பை துண்டித்த பின் அவர்கள் சந்தோஷ மாக குதூகலிக்கிறார்கள். சிரிக்கிறார்கள். அந்தளவிற்கு மிகக் கொடூர அரக்கன்களை போல் செயல்படுகிறார்கள். பெரும்பாலும் சீனர்களே அதிகளவில் இந்த வேலையில் ஈடுபடுகிறார்கள்.

 

நாம் இந்த வேலை பிடிக்கவில்லை என்றால் உடனே வெளியே வர முடியாது. போனவுடன், பிசினஸ் விசா போடவேண்டும் எனக் கூறி பாஸ்போர்ட்டை வாங்கி விடுவார்கள். பிசினஸ் விசா இல்லையென்றால் டூரிஸ்ட் விசா போடுகிறார்கள. விசா தேதி முடிந்தவுடன் அருகில் உள்ள தாய் லாந்திற்கு அழைத்துச் சென்று மீண்டும் புதிய விசாவுடன் கம்போடி யாவிற்குள் அழைத்து வந்துவிடுகிறார்கள்.

பொதுவாக ஒரு ஐடி நிறுவனத்தில் 200லிருந்து 300 கம்ப்யூட்டர் வைத்திருப்பார்கள். ஆனால் அங்கு ஒவ்வொன்றும் 1 லட்சம் மதிப்புடைய 600க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் வைத்திருக்கிறார்கள். இங்கு நடக்கும் சட்டவிரோத செயல்கள் குறித்து ஏதேனும் ரெய்டு, விசாரணை என்றால் அங்குள்ள மொத்த கணினியையும் தூக்கிச் சென்று கடலில் வீசிவிடுகிறார்கள்.

தமிழகத்திலிருந்து பயிற்சி பெற்ற ஏராள மானோர் 2, 3 வருடங்களுக்கு மேல் அங்கு பணிபுரிகிறார்கள். இந்த மோசடி குறித்து அவர்களிடம் கேட்டால், “இது என்னுடைய ‘ப்ரொபஷன்” 3 லட்சம் பணம் கடன் வாங்கிக் கொடுத்து இந்த வேலையில் சேர்ந்திருக்கிறேன். அதனால் என்னால் திரும்பிப் போக முடியாது என்கிறார்கள். சிலர் சந்தோஷமாக பேசுகிறார்கள். சிலர் வருத்தமாக கஷ்டப்பட்டு புலம்புகிறார்கள். அதனால் யார் நல்லவர்கள் என்று அடையாளம் கண்டு பேசுவது சிரமம்.

எனக்கு இந்த வேலை சரிபட்டு வராது என்ற முடிவுடன், என் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை ஆபரேஷன் நடந்திருக்கிறது.. நான் உடனே ஊருக்கு போக வேண்டும் என தொடர்ந்து நான்கைந்து நாட்கள் அழுது, முகம் வீங்கச் செய்து, சாப்பிடாமல் இருந்து அவர்களை நம்ப வைத்தேன்.

‘இவனை வெளியே அனுப்பினால் நமக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது இவன் நம்மை என்ன செய்துவிடப் போகிறான்’ என்ற நம்பிக்கை அவர்களுக்கு வந்த பின்னே என்னை வெளியே அனுப்பினார்கள். அனுப்பும் போதே, “அப்பாவை பார்த்துவிட்டு உடனடியாக திரும்பி வா” என அறிவுறுத்தினார்கள்.  நான் வெளியேறிய போது என்னுடன் பணியாற்றியவர்கள், “என் கையை பிடித்து அழுதார்கள் என்னையும் வெளியே கூட்டிட்டு போக ஏதாவது செய்” என்றார்கள். கடந்த ஜூலை 27ம் தேதியன்று கம்போடியா சென்ற நான் ஆகஸ்ட் 16ம் தேதி இந்தியா திரும்பிவிட்டேன்.

1000 டாலர் சம்பளம் எனக் கூறி தான் அழைத்துச் செல்கிறார்கள். ஆனால் 400, 500 டாலர் தான் தருகிறார்கள். அதாவது மார்க்கெட்டிங் டார்க்கெட் போல, நாம் பிறரை ஏமாற்றி எவ்வளவு தூரம் சம்பாதித்துத் தருவோம் என்பதைப் பொறுத்தே சம்பளம் தருகிறார்கள். இதனால் கடன் வாங்கி பணம் கட்டி வேலையில் சேருகிறவர்கள், எதிர்பார்த்தபடி 1000 டாலர் சம்பளம் பெற கடுமையாக உழைக்கிறார்கள். அதாவது, குற்றஉணர்ச்சி இன்றி, பலரையும் ஏமாற்றி பணம் பறிப்பதில் குறியாக இருக்கிறார்கள். அந்த மனநிலைக்கு முழுமையாக அவர்கள் மாறிய பின், அவர்களுக்கு கிடைக்கும் வசதி, அபரிதமான பணம் எல்லாம் அவர்களை அங்கே விட்டு வெளியே அனுப்பினாலும், அதாவது கான்ட்ராக்ட் காலம் முடிந்தாலும், மீண்டும் அவர்கள் அங்கே சென்று வேலை செய்யவே விரும்புகிறார்கள். அந்த அளவிற்கு அவர்களின் மனநிலை மாற்றம் அடைகிறது. குற்ற உணர்ச்சியில் தப்பிக்க நினைத்தாலும் தப்ப முடியாத அவலநிலையில் தான் பலரும் அங்கே மனக்குமுறலுடனேயே பணியாற்றுகிறார்கள். நான் ஊர் திரும்பிய போது, என் ஊரிலிருந்தே, எனக்கு தெரிந்த சிலரும் கம்போடியா சென்றி ருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.  கம்போடியாவில் நான் வேலை செய்தது போல் ஏராளமான மோசடி நிறுவனங்கள் இருக்கிறது. கம்போடியா அரசாங்கத்தின் ஆதரவுடனேயே அந்த மோசடி கும்பல் அங்கே செயல்பட்டு வருவது தான் அதிர்ச்சிகரமான தகவலாக இருக்கிறது. கம்போடியாவில் இந்திய எம்பஸி கிடையாது. அதனால் அங்கிருந்து தப்பிச் சென்றாலும் நாம் யாரிடமும் சென்று முறையிட முடியாது.

எனவே கம்போடியாவில் பணி என்றால் தயவு செய்து யாரும் அங்கே சென்று மாட்டிக் கொள்ளாதீர்கள். அப்படி போக வேண்டியதிருந்தால் அந்த நிறுவனம் குறித்து முழுமையாக அறிந்த பின்னே செல்லுங்கள்” என்றார்.

 

அங்குசம் செய்தியாளர் குழு

 

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.