மந்தையில் சேரும் பக்திமான்கள் !
கடந்த ஆண்டு திருப்பரங்குன்றத்தில் தர்காவுக்கு அருகே கார்த்திகை தீபம் ஏற்றவது எனும் ஒரு தேவையில்லாத பிரச்சனையை ஒட்டி இணையம் முழுக்க முருகனின் பாடல்கள் நிறைந்தன. சட்டென ஒரு கடவுள் இணையத்தின் சிமுலேஷனலில் சிக்கி எங்கும் மிதப்பது வாடிக்கை ஆகியிருக்கிறது. ஏதோ ஒரு தெலுங்கு சாமியார் திருவண்ணாமலையை யுடியூபில் சொல்ல, தெலுங்குக்காரர்கள் படை எடுத்தார்கள். திருச்செந்தூர் கோவில் உட்பட எல்லாக் கோவில்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. எல்லோரும் எந்நேரமும் ஏதாவது ஒரு கோயில், கடவுள், நாள் கிழமை என்று தேடிக் கொண்டே இருக்கிறார்கள். இங்கே அருகே செஞ்சேரிமலை என்ற மலையில் சுமாராக அருள் தரும் முருகன் இருந்தார். யார் சொன்னதோ, செவ்வாய்கிழமை அன்று போனால் நினைத்த காரியம் நடக்கும் என, சட்டென அவருக்கு புகழ் கூடி விட்டது.
விஸ்வநாதன் & சன்ஸ் படத்தின் நாயகனின் வீட்டில் பெரிய முருகன் படம் இருக்கும். குழந்தை பிறந்தநாளின் போது ஒரு தட்டில் பகவத் கீதையும் முருகன் படமும் இருக்க, குழந்தை முருகன் படத்தைத் தொடுவதைப் பார்த்து எல்லோரும் மகிழ்வார்கள். ஸ்ரீரங்கம் செல்லும் நாயகன் முருகன் தேநீர் கடையில் தான் நாசருக்காக அமர்ந்து இருப்பார். நாத்திகரான கமல் இதனை நன்கு உணர்ந்து ‘சேயோன்’ எனும் படத்தை தயாரிக்கிறார். தனுஷ் ‘தமிழ் முருகனில்’ நடிக்கிறார்.
சமீபத்தில் ஒரு சோதிடர் சொல்கிறார், கடன் இருப்பவர்கள் காலண்டரைப் பார்த்து கும்பிட வேண்டும் என்று. இப்படி கணக்கே இல்லாமல் ஜிகாபைட் ஜிகாபைட்டாக பலவிதமான கடவுள்களை, சடங்குகளை எந்நேரமும் ஏக்கத்திலும், சோகத்திலும், ஏமாற்றத்திலும் இருப்பவர்கள் நுகர்ந்து கொண்டே இருக்கிறார்கள். எனது நண்பரிடம் மிகுந்த மனக் குழப்பத்தில் இருக்கும் போது ஆருடம் கேட்பேன். அவர் எதெல்லாம் நடக்காது என்று சொல்வாரோ அது நடக்காது என்பதால் எனது குழப்பம் தீரும். நமது குழப்பமே நடக்காததை, நடத்த முடியாததை, நடத்தத் தேவையில்லாததைப் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதால் எழுவது என்பதால் நான் கைவிட வேண்டியது என்று நான் கருதுவதை சரியாக சொல்லி விடுவார் என்பதால் அவர் மீது எனக்கு நம்பிக்கை உண்டு.
இதெல்லாம் நம்பாமல் இருந்த காலத்தில் தான் நான் தைரியமாக வாழ்ந்தேன். ஒரு திருடன், ஒரு பாலியல் தொழிலாளியிடம் சிகரெட் கடன் கேட்கும் போது, அவள் தர மறுத்து விடுவாள். அது அவளது ராசியான சிகரெட். அந்தக் காட்சியில் ஜெனே எழுதிய வரி தான் மேலே உள்ளது. அப்படி ஒரு ராசியான சிகரெட்டைத் தான் நான் தேடி வருகிறேன்.
ஒரு சிக்கன் லெக் பீஸ் அளவுக்கு அல்லது போர்னோகிராபி போன்று கடவுள் ஒன்றும் சுவாரசியமானவர் இல்லை என்று ஒரு கதையில் எழுதி இருக்கிறேன். சற்று இப்போது மேம்பட்டு இருக்கிறது. எந்தக் கோயிலில் வரிசையில் நின்றாலும் கூட்டமான ஒரு பிரியாணிக் கடையில் நிற்கிற உணர்வுதான் வருகிறது. மற்றொரு கதையில் எழுதியது போல வேண்டும் போது பணம் தராவிட்டால் கடவுளின் மதிப்பு தான் என்ன?. இப்படி ஒரு anthropocene இல் சிக்கிக் கொண்டதற்காக கடவுள் வருத்தப்படத் தான் வேண்டும்.
ஒரு மனிதன் கும்பலில் சேரும் போது தான் பைத்தியம் ஆகிறான் என்பார் நீட்ஷே. அவ்வாறே மந்தையில் சேரும் போதுதான் அவன் பக்திமானே ஆகிறான்.
மற்றொரு கார்த்திகை வருகிறது. திருப்பரங்குன்றம் என்ன ஆகுமோ. நம்பிக்கை அற்றவர்கள் தான் எத்தனை விடுதலையானவர்கள். அவர்கள் தான் அதீத உழைப்பில் இருந்து கடவுளுக்கும் சற்று ஓய்வு அளிக்கிறார்கள்.
நாம் எளிமையான அதிநம்பிக்கையில் தொடங்கி இறுதியாக கடவுளிடம் சரண் அடைகிறோம் – ழான் ஜெனே .
— பாலசுப்ரமணியன் பொன்ராஜ்






Comments are closed, but trackbacks and pingbacks are open.