பொறுத்தருள்க, மதுரை எம்பி-யிடம் கே.என். நேரு மன்னிப்பு!
நேற்று முன்தினம் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு மதுரையில் ஆய்வுப் பணிக்காக சென்றிருந்தார். அப்போது மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அதற்கு விளக்கம் அளிததார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை பற்றியும் விமானநிலையம் குறித்தும் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு, “இந்தக் கேள்வியை சம்பந்தப் பட்டவர்களிடம் கேளுங்கள், மதுரையில் வெங்கடேசன்னு ஒரு ஆள் இருக்கான், அந்த ஆள் கிட்ட கேளு” என்று பதிலளித்தார்.
இது குறித்த செய்தி சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு விற்கு கண்டனத்தை தெரிவித்து இருந்தது.
மேலும் சிபிஎம்-யின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவு. “அரசியல் நாகரீகமற்ற பேச்சு!
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான ஊடகங்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு அவர்கள், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் எம்.பி. குறித்து ஒருமையில் பேசியிருப்பது அரசியல் நாகரீகமற்றது. பொதுவாழ்வில் இருப்போர் நிதானத்துடன் பேசுவதையே மக்கள் விரும்புவார்கள், ஏற்பார்கள்.
#TNCPIM Su Venkatesan MP”
இவ்வாறு பதிவு செய்து இருந்தார்.
இந்த நிலையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வருத்தத்தை பதிவு செய்துள்ளார். இவ்வாறு “பாராளுமன்ற உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன் அவர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலர் திரு. பாலகிருஷ்ணன் அவர்களுக்கும்; பாராளுமன்ற உறுப்பினர் அவர்களை ஒருமையில் குறிப்பிட்டது மனவருத்தப் படுத்தியிருந்தால் பொறுத்தருள்க. இனிமேல் இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்”. என்று குறிப்பிட்டுள்ளார்.