கலை காவிரி விருது 2024 மற்றும் 19 வது பட்டமளிப்பு விழா
கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் 19 ஆம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பட்டங்களை வழங்கினார். குரலிசை, கருவி இசை, வயலின், வீணை, மிருதங்கம் ஆகிய துறைகளில் இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர் முனைவர் பட்டம் என 291 மாணவர்கள் பட்டம் பெற்றனர். அதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் கிறிஸ்தவ அறிஞர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. இதன் மகத்துவம் அறியாதவர்கள் இழிவாகப் பேசி வருகின்றனர். கால்டுவெல் பல்கலைக் கழக பட்டம் பெற்றவர். ஜி.யு.போப் ஆக்ஸ்போர்டு பல்கலையில் பணியாற்றியவர். கடந்த நூற்றாண்டின் தொடகத்தில் 100 பேருக்கு ஆறு பேர் மட்டுமே கல்வி கற்றவர்களாக இருந்தனர். இந்த நூற்றாண்டு கல்வி கற்க வாய்ப்பளித்திருக்கிறது. தற்போது 93% கல்வி கற்ற பெண்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். சுயமரியாதை தன்னம்பிக்கை கொண்டு சுயமாய் சிந்தித்து தன் காலில் நிற்பதற்கு கிறித்தவ மிஷனரிகள் பெரும் பங்காற்றியுள்ளன. சமஸ்கிருதத்திற்கும் மூத்தது தமிழ் மொழி, பிற மொழியின் துணையின்றி தனித்து இயங்கக் கூடியது தமிழ் என்பதை கால்டுவெல் ஆய்வு செய்து குறிப்பிட்டார். இசை, நடனம் பயில்பவர்கள் சவால்களை கடந்து சாதனை படைத்திட வேண்டும் என்றார். இசை என்பதை அடையாளப் படுத்த இணைக்க, பல்வேறு மொழிகள் இருந்தாலும் நேர்கோட்டில் சிந்திக்க வைக்க உதவுகிறது. கலை என்பது வேறுபாடுகள் கடந்து கரங்கள் கோர்ப்பதற்கு அருமையான வாய்ப்புகளை உருவாக்கிட வெறுப்புகளை உருவாக்குவோர் மத்தியில் அமைதியை அன்பை சமத்துவத்தை கொண்டு அமைதியின் தூதர்களாய் உலகத்தை இணைப்பதற்கு துணை புரிகிறது. இத்துறை மாணவர்கள் கலைகளால் உலகத்தை இணைத்திட வேண்டும் என்றார். முன்னதாக கல்லூரியின் செயலர் லூயிஸ் பிரிட்டோ முதல்வர் முனைவர் ப.நடராஜன் , கல்லூரிக் குழு தலைவர் அந்துவான், மறைமாவட்ட ஆயர் ஆரோக்கிய ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து ஆசிரியர்களின் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நடனத்துறை பேராசிரியர் முனைவர் சாராள் அவர்களின் ” நாட்டிய நோக்கில் விவிலிய நற்செய்திகள்” எனும் நூல் மற்றும் முனைவர் ஆக்னஸ் ஷர்மிலீயின் ” தமிழ் இஸ்லாமிய பக்கீர்களின் இசை ” எனும் நூலும், முனைவர் சுனிதா அவர்களின் ” பாரதியார் பாடல்களில் காணப்படும் சுவைக் கோட்பாடுகள் ” எனும் நூலும், முனைவர் சகாயராணி அவர்களின் நடனத்துறையில் ஆய்வு, மற்றும் ஆய்வு நெறிமுறைகள்” எனும் ஆங்கில நூலும், முனைவர் ராஜேஷ் பாபு அவர்களின் “கிறிஸ்தவ செவ்விசைப் பாமாலை ” நூலும் செல்வன் ராஜ்கமல் எழுதிய “108 தாளங்களும் தத்தகாரங்களும் ” என்ற நூலையும் மறைமாவட்ட ஆயர் வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து கலைக் காவிரி விருது 2024 மூவருக்கு வழங்கப்பட்டது. தமிழிசை அறிஞர் நா. மம்மது, கவிஞர் நந்தலாலா மற்றும் திரு. ஞானப் பிரகாசம் ஆகியோருக்கு விருது மற்றும் விருதுச் சான்றிதழ் , பொற்கிழி வழங்கப்பட்டது.
செயலர் நன்றியுரை வழங்கினார். விருது பெற்றோரை தமிழ்த்துறை கி. சதீஷ் குமார் அறிமுகம் செய்தார். கவிஞர் நந்தலாலா ஏற்புரை வழங்கினார்.