ஆசை வார்த்தைகளைக்கூறி பணம் பறிப்பதையே நோக்கமாகக் கொண்டு பெரும் வசூல் வேட்டையை நடத்திவிட்டு தலைமறைவாகிவிடும் மோசடிக்கும்பல் போன்றதல்ல கலைமகள் சபா விவகாரம். சட்டப்படியான ஒரு சங்கமாக பதிவு செய்து, சங்க உறுப்பினர்களிடமிருந்து வசூலிக்கப்படும் சந்தா தொகையை கொண்டு நிலங்களை வாங்கிப்போட்டு, 20 ஆண்டுகளின் நிறைவில் அவர்களுக்கே திரும்ப வழங்குவது என்ற செயல்திட்டத்தின் அடிப்படையில் உருவானதுதான் கலைமகள் சபா என்கிறார்கள்.
1984 பிப்ரவரியில் பதிவான சங்கம், 1986 ஆம் ஆண்டு முதலாக முழுவீச்சில் உறுப்பினர்களை சேர்க்கத் தொடங்குகிறது. பத்தாண்டுகளின் நிறைவில், வணிகவரித்துறையின் விசாரணையிலிருந்து தொடங்குகிறது சர்ச்சை. கலைமகள் சபாவின் மேலாளராக இருந்து தமிழகம் முழுவதும் கலைமகள் சபாவுக்கான இடங்களை வாங்கிப்போட்ட, ஜான் – என்பவர் முறைகேடு செய்துவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் நாமக்கல் குற்றப்பிரிவு போலீசார் 1998 இல் வழக்குப்பதிவு செய்கிறார்கள். ஜான் கைது செய்யப்படுகிறார்.
கலைமகள் சபா, வழக்கில் சிக்கியபோதே 5 இலட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் இருந்திருக்கிறார்கள். தமிழகம் மட்டுமின்றி, கேரளம், ஆந்திரம், கர்நாடகா என மாநிலம் கடந்தும் சுமார் 13,500 ஏக்கருக்கும் மேலான சொத்துக்களை கொண்டிருக்கிறது. குறிப்பாக, அந்த காலத்திலேயே தலைநகர் தில்லியில் கலைமகள் சபாவுக்கு சொந்தமான தங்கும்விடுதி இருந்ததாக குறிப்பிடுகிறார்கள்.
இந்த பின்புலத்தில்தான், முதலில் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் ரிசீவர் கமிட்டி அமைக்கப்படுகிறது. அவர்கள் கலைமகள் சபாவுக்கு சொந்தமான சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டார்கள். இதன்மூலம், அவர்கள் தனிப்பட்ட முறையில் ஆதாயம் அடைந்துவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு எழுகிறது. ரிசீவர் கமிட்டி கலைக்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை மாற்றம் செய்யத்தக்க வகையில்,. பதிவுத்துறையின் உதவி தலைவர் அந்தஸ்துக்கு குறைவில்லாத அதிகாரியை சிறப்பு அலுவலராக நியமிக்க வேண்டுமென உத்தரவிடுகிறது நீதிமன்றம். அவ்வாறு நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலர்கள் அடுத்தடுத்து, பதவியிலிருந்து விலகிவிடுகிறார்கள்.
இறுதியாக, அப்போதைய பதிவுத்துறையின் தலைவராக இருந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சிறப்பு அலுவலராக நியமிக்கப்படுகிறார். புதியதாக நியமிக்கப்படும் அதிகாரி இந்த விவகாரத்தை புரிந்து கொள்வதற்கே ஓராண்டு பிடிக்கும் நிலையில், வருடத்திற்கு ஒருமுறை அதிகாரியை மாற்றும் நடைமுறை பலன்தராது என்ற நிலையில், அவரே நிரந்தர அதிகாரியாக செயல்படுமாறு நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இதனைதொடர்ந்து, ஓய்வுபெற்ற நீதியரசர் எஸ்.எஸ்.சுந்தர் தலைமையில் தனிநபர் ஆணையத்தை அமைத்தும் உத்தரவிட்டிருக்கிறது.
நீதிமன்றத்தை பொறுத்தமட்டில், கலைமகள் சபாவுக்கு சொந்தமான சொத்துக்கள் பெரும்பாலும் உரிமையியல் சிக்கலை எதிர்கொண்டிருக்கின்றன. மூன்றாம் நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது. இவற்றையெல்லாம் அடையாளம் கண்டு, வகைப்படுத்தி, அவற்றின் மீதான உரிமையியல் சிக்கல்களை களைந்து சொத்துக்களை முதலில் கலைமகள் சபாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது. பின்னர், அவற்றின் தற்போதைய மார்க்கெட் மதிப்பை நிபுணர்குழுவை கொண்டு மதிப்பிடுவது. பின்னர், உரிய சட்ட வழிமுறைகளை பின்பற்றி முறைகேடுகளுக்கு இடம் கொடுக்காமல் பொது ஏலத்திற்கு கொண்டு வந்து விற்று காசாக்குவது. பின்னர், விகிதாச்சார அடிப்படையில் கலைமகள் சபாவின் உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிப்பது – என்பதுதான் ஒருநபர் ஆணையம் மற்றும் சிறப்பு அலுவலருக்கு நீதிமன்றம் பணித்திருக்கும் கட்டளை – உத்தரவு.
இந்த பின்புலத்தில்தான், கலைமகள்சபாவின் உறுப்பினர்கள் பல்வேறு அமைப்புகள் பல்வேறு குழுக்கள் தனிநபர்களாக பிரிந்து மாறுபட்ட கோரிக்கைகளுடன் முரண்பட்டு நிற்கிறார்கள். ஒரு தரப்பினர் ஒரு அடி நிலமாக இருந்தாலும் பரவாயில்லை, நிலமாகவே தீர்வைத் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார்கள். மற்றொரு தரப்பில், நீதிமன்றத்தின் முடிவை ஆதரிக்கிறார்கள். அதிலும் இன்னொரு தரப்பினர், பொது ஏலத்தில் எவரும் எடுக்க முன்வரமாட்டார்கள். அதற்கு பதிலாக, உறுப்பினர்களை தகுதி வாரியாக வகைப்படுத்திவிட்டு, கலைமகள் சபாவின் சொத்துக்களை மதிப்பிட்டு யாருக்கு எவ்வளவு உரிமை என்பதை தீர்மானித்துவிட்டு, அதற்கேற்ப நிலமாகவே அவர்களுக்கு பதிவு செய்து கொடுத்துவிட வேண்டும். அதை அவர்கள் வெளி சந்தையில் விற்று காசாக்கிக் கொள்வார்கள் என்பதாக ஒரு வழிமுறையை முன்வைக்கிறார்கள்.
இதுபோன்ற, பல்வேறு கருத்துகளோடு இயங்கிவரும் கலைமகள் சபாவின் உறுப்பினர்கள் – சங்கம் – குழுவை சேர்ந்தவர்களை நேரில் சந்தித்து அவர்களை நேர்காணல் செய்திருக்கிறது, அங்குசம் புலனாய்வுக்குழு. அவர்களது நேர்காணல்கள் அங்குசம் அறம் சேனலில் அடுத்தடுத்து வெளியாகும். அவர்களின் கருத்துக்கள் அடுத்தடுத்து தொடராக அங்குசம் செய்தி இதழில் வெளியாகும்.
கலைமகள் சபா தொடக்கமும் வழக்கில் சிக்கிய கதையும் !
– அங்குசம் புலனாய்வுக்குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.