காரைக்குடி புத்தகத் திருவிழா 2026…
கல்விப் பணிக்கு கலங்கரை விளக்கு வெளிச்சப் பாய்ச்சலாக திகழும் காரைக்குடி நகரில் தொடர்ந்து இருபத்தி நான்காவது ஆண்டாக “காரைக்குடி புத்தகத் திருவிழா 2௦26” சிறப்பாக நடந்தேறியது. நடப்பு ஜூலை ௦3 முதல் 12ம் தேதி வரை காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவச் செல்வங்கள், மிக ஆர்வமுடன் வாசிக்கும் புத்தக நேயர்களின் நல்லாதரவும் பெற்று மேன்மையுடன் நிறைவு பெற்றுள்ளது.
வருகிற “2௦27” காரைக்குடி புத்தகத் திருவிழாவுக்கு வெள்ளி விழா ஆண்டாகும்.
புத்தகத் திருவிழா அமைப்பின் தலைவர் சுவாமி. மிகுந்த ஆர்வமுடன் தொடர்ந்து செயலாற்றுபவர். அதன் செயலாளர் நீ. இரவிச்சந்திரன், தொய்வின்றி துடிப்புடன் இயங்குபவர்.
புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் மத்தியில் தனித்திறன் போட்டிகளும் ஆண்டுதோறும் நடத்தி வருகிறார்கள். அவர்கள் மத்தியில் கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி எனத் தனித்திறன் போட்டிகளையும் நடத்தி வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்குகிறார்கள்.
மாநில அளவில் சிறுகதைப் போட்டியையும் நடத்துகிறார்கள். பேராசிரியர் முனைவர் அய்க்கண் – அருளரசி வசந்தா நினைவுச் சிறுகதைப் போட்டியாக அதனைச் செம்மையுடன் நடத்தி வருகின்றனர். சிறுகதைப் போட்டியில் தேர்வாகிப் பரிசு பெறுபவர்களுக்கு, முனைவர் அய்க்கண் – அருளரசி வசந்தா ஆகியோரின் மகள் அருணாதேவி அய்க்கண், பணப் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தார். அதே புத்தகத் திருவிழாவில் “பேராசிரியர் முனைவர் அய்க்கண் இலக்கிய விருது” வழங்குகின்ற நிகழ்வும் நடந்தேறியது.
எழுத்தாளர்கள் துரை. அறிவழகன், முனைவர் க. மோகன் ஆகிய இருவருக்கும் மேற்கண்ட இலக்கிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

காரைக்குடி புத்தகத் திருவிழா 2௦26ன் நிறைவானது 12.௦7.2௦26 ஞாயிற்றுக்கிழமை மாலைப் பொழுதினில் மலர்ந்து மணம் வீசியது. விழாவினில் காரைக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, வித்யாகிரி கல்வி நிறுவனங்களின் தாளாளர் முனைவர் சுவாமிநாதன், காரைக்குடி புத்தகத் திருவிழா அமைப்பின் தலைவர் சுவாமி ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தனர்.
பேராசிரியர் முனைவர் அய்க்கன் – அருளரசி வசந்தா நினைவு மாநில அளவிலான சிறுகதைப் போட்டியில் தேர்வான சிறுகதைகளுக்கு மொத்தம் மூன்று பரிசுகள்
“அவனுக்குள் அவள்” எனும் சிறுகதைக்காக செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் இரா. கலைச்செல்வி என்பவர்க்கு முதல் பரிசும் அதற்கான ரூபாய் பத்தாயிரமும் (ரூ. 1௦,௦௦௦) வழங்கப்பட்டது.

“வாழாமல் ஒரு வாழ்வும் சாகாமல் ஒரு சாவும்” என்கிற சிறுகதைக்காக மணப்பாறை அறிவுச்செல்வன் என்பவர்க்கு இரண்டாம் பரிசாக ரூபாய் ஏழாயிரத்து ஐந்நூறும் (ரூ. 7,5௦௦) வழங்கினார்கள்.
“எச்சில்” எனும் சிறுகதைக்காக மூத்த பத்திரிகையாளர் ஆன ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு என்பவர்க்கு மூன்றாம் பரிசாக ரூபாய் ஐந்தாயிரமும் (ரூ. 5,௦௦௦) வழங்கிச் சிறப்பித்தார்கள்.

“இருபத்தி நான்கு ஆண்டுகளாக காரைக்குடி நகரில் புத்தகத் திருவிழாவினைச் சீரும் சிறப்புமாகத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். காரைக்குடி கல்வி, வணிக நிறுவனங்களும், நகரப் பெருமக்களும் நமக்கு நல்லாதரவு நல்கிப் பேருதவி புரிந்து வருகின்றனர். வருகின்ற 2௦27 ஆனது காரைக்குடி புத்தகத் திருவிழாவுக்கு வெள்ளி விழா ஆண்டாகும். அதனை மேலும் சிறப்பாக நடத்திடுவோம் என்று இந்த ஆண்டிலேயே உறுதியுடன் செயல்படத் தொடங்குவோம்.” எனக் கூறுகிறார் காரைக்குடி புத்தகத் திருவிழா அமைப்பின் தலைவர் சுவாமி.







Comments are closed, but trackbacks and pingbacks are open.