சீமானை கண்டு அஞ்சுகிறதா, கரூர் காவல்துறை ? கேள்வி எழுப்பும் தமிழ் இராஜேந்திரன்.
நீதிமன்றம் உத்தரவிட்டும் வழக்கு பதிவு செய்ய மறுப்பது ஏன் ?
”தவளை தன் வாயால் கெடும்” என்ற பழமொழியை நினைவுபடுத்துவது போலவே, எதைப்பற்றியும் எள்ளளவும் கவலை கொள்ளாமல் அதிரடியாக கருத்துக்களை வெளியிடுவதில் சளைக்காமல் பேசி வருகிறார் சீமான். நாம் தமிழர் கட்சி என்றொரு அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்துவரும் சீமான், முதிர்ச்சியான அணுகுமுறையை எப்போதும் கொண்டதில்லை என்பதையே அவரது கடந்த கால செயல்பாடுகள் தொடர்ந்து நிரூபித்து வருகின்றன.
அதன் வரிசையில், கடந்த 11.07.2024 இல் விக்கிரவாண்டி சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சாட்டை துரைமுருகன் முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து அவதூறான பாடல் ஒன்றை பாடியிருந்தார்.
அவரே பாட்டெழுதி மெட்டமைத்து பாடவில்லை என்ற போதிலும், அப்பொதுக்கூட்ட மேடையில் அவர் பாடிய பாடலில், “கலைஞரை காதகன் என்றும்; கருநாகம் என்றும்; சதிகாரன் என்றும்; சனிக்காரன் என்றும்; சண்டாளன் என்றும்” இழிவுபடுத்தும் வரிகளை பாடியிருந்தார், சாட்டை துரைமுருகன்.
இதனைத்தொடர்ந்து 04.08.2024 அன்று, “சாட்டை துரைமுருகன் பாடிய அதே பாடலை நானும் பாடுகிறேன். காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று பார்க்கிறேன். ” என்று பகிரங்கமாக சவால் விட்டிருந்தார் சீமான்.
இந்நிலையில், இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பொதுவெளியில் போலீசாருக்கு சவால் விடுக்கும் வகையிலும் முன்னாள் முதல்வர் கலைஞரை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தும் வகையில் பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் இராஜேந்திரன் கரூர்-தாந்தோணி மலை போலீசு நிலையத்தில் புகாரளித்திருந்தார்.
வழக்கறிஞர் தமிழ் இராஜேந்திரன் அளித்த புகார் மீது தாந்தோணிமலை போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில், தன் புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கரூர் மாவட்ட கண்காணிப்பாளருக்கும் கோரிக்கை விடுத்திருந்தார். இரு தரப்பிலும் நடவடிக்கை எடுக்காத நிலையில், நடந்த சம்பவத்தை எடுத்துசொல்லி, தனது புகார் மீது நடவடிக்கை எடுக்க உரிய உத்தரவுகள் பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “சீமானின் வலைத்தள பதிவுகள் பாரதிய நியாய சன்கிதா 2023 பிரிவு 352 மற்றும் 356 ன் கீழ் தண்டிக்கத்தக்க குற்றமாகும். இது குறித்து தாந்தோணிமலை காவல்துறை ஆய்வாளருக்கு புகார் மனு அனுப்பப்பட்டும் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தாந்தோணிமலை காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட” கோரியிருந்தார், வழக்கறிஞர் தமிழ் இராஜேந்திரன்.
கரூர், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.பி.பரத்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை நிறைவில், “மனுதாரரின் புகார் மனுவில் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் புலன் கொள்ளக்கூடியவை என்பதால், மனுதார்ரஃ கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு அனுப்பிய புகாரின் அடிப்படையில், தாந்தோணிமலை காவல் ஆய்வாளர் 1-ஆம் எதிர்மனுதாரர் மீது (சீமான்) பாரதிய நியாய சன்கிதா 2023 பிரிவு 352 மற்றும் 356 பிரிவுகளின்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க தாந்தோணி காவல் ஆய்வாளருக்கு பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023 பிரிவு 175ன் கீழ் உத்தரவிட்டும், தாந்தோணிமலை காவல் ஆய்வாளர் பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதாவில் கூறியுள்ள நடைமுறைகளின்படி புலன்விசாரணை செய்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் குற்ற இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.” என்று கடந்த அக்டோபர் – 14 அன்று உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
”நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுநாள் வரையில் வழக்குப் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்துகிறார்கள். கேட்டால், மேலிடத்தில் கேட்கனும். இங்கே கேட்கனும். அங்கே கேட்கனும் என்கிறார்கள். சீமானை கண்டு அஞ்சுகிறதா, கரூர் காவல்துறை?” என கேள்வி எழுப்புகிறார், வழக்கு தொடுத்த தமிழ் இராஜேந்திரன்.
இந்த விவகாரம் தொடர்பாக, விளக்கம் அறிய கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லாவை அங்குசம் சார்பில் தொடர்பு கொண்டோம். விசயத்தை கேட்டுக் கொண்டவர், “சரி நான் விசாரித்து சொல்கிறேன்” என்றார்.
– ஆதிரன்.