கவியாட்டம்…
கவியாட்டம்…
நிகரில்லா கவிஞன்
குறுகுறுக்கும் மனட்சாட்சியை
குப்புறக் கிடத்தி விட்டு
சமரசம் பேசும் எண்ணங்களை
எழுத்துக்களாக்கி
எனக்கொன்றும் இல்லையென
இயல்பாய் காட்டிக்கொள்வதில்
முரணான கவிஞனுக்கு நிகரில்லை
யாரும் இங்கு…
-பரமேஸ்வரி சண்முகம்
இன்னும் சிலகாலம்
மாற்றங்கள் நிகழும் மனமும் களிப்படையும்,
மாறாதது ஏதுமில்லை மனதுக்குத் தெரியும்,
வறுமை வந்தாலும் வேதனை வேண்டாம்,
பொறுமை காப்போம் பொங்கியெழ வேண்டாம்,
இன்னும் சிலகாலம் இருந்திட்டால் போதும்!
இது என் தாத்தா எழுதியது,
என் பேரனும் இதுபோல எழுதுவானோ?!
-கவிஞர் ஒப்பில்லான் பாலு
காலத்தின் கணக்கு
தோற்றுப்போகும் நொடிப்பொழுதேனும்
சிறகுவிரித்திட பிணைப்பாய் இருக்கிறாய்
பிழையில்லை பிணக்கென்ன
எனக்கென்ன உனக்கென்ன
என்றே கடந்துவிடும் காலத்திடம்
கணக்குகேட்டு வம்பிழுப்பது ஏனோ???
அறியாமை தானே
-கவிஞர் சுதாநாதன், முத்துப்பேட்டை
காதல்
நீ அழைப்பாயென நானும்
நான் அழைப்பேன் என
நீயும் காத்திருக்க
காலத்தின் மீது கல்லெறிவதை கண்டு
அழுது கொண்டு
கடந்து செல்கிறது காலம்!
ஆனால் நம்மை கடந்து போகாமல்
தனித்து விடப்பட்டு
காத்திருக்கிறது நம் காதல்!
-கவிஞர் மாரி கார்த்தி, கழுகு மலை
எதிர்பாலின பட்டம்
போகிறபோக்கில்
பேசி விடுகிறீர்கள்
‘வேசி’ என்ற வார்த்தையை
தூசித் தட்டிப் பார்க்கிறேன்
கிடைக்கவேயில்லை..
ஆகச் சிறந்த அகராதியெங்கும்
‘வேசன்’ என்ற
எதிர்பாலின வார்த்தையை..!
-சூரியா, திருச்சி