அங்குசம் பார்வையில் ‘கிங்டம்’ – திரை விமர்சனம் !
தயாரிப்பு ; சித்தாரா எண்டெர்டெய்ன்மெண்ட்ஸ், ஃபார்ச்சூன் சினிமாஸ், ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் நாகவம்சி, சாய் செளஜன்யா. டைரக்ஷன் : கெளதம் தின்னனுரி, ஆர்ட்டிஸ்ட் : விஜய்தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ், ரோகிணி, ஒளிப்பதிவு : ஜோமோன் டி.ஜான் & கிரிஷ் கங்காதரன், இசை : அனிருத், எடிட்டிங் ; நவீன் நூலி, ஸ்டண்ட் : யானிக் பென், சேத்தன் டி சோசா, ‘ரியல்’ சதீஷ், பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா & ஏ.அப்துல்நாசர்.

1920-ல் கதை ஆரம்பிக்கிறது. அதன் பிறகு மூன்று மணி நேரம் கண்டமேனிக்கு கதை கதையாகவிட்டு நம்மை கதறவைக்கிறார்கள். அதாவது…ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் கடல்பகுதியை ஒட்டியுள்ள மலையில் தங்கம் இருப்பதைத் தெரிந்து கொண்டு, பிரிட்டிஷ் படைகள் அங்கு வசிக்கும் பழங்குடி மக்களை விரட்டியடிக்கிறது. அந்த இன மக்களின் மன்னன் ஒருவன் கடுமையாக அவர்களை எதிர்த்துப் போராடி வீழ்கிறான். இதனால் அந்த மக்கள் கடல்மார்க்கமாக பயணித்து இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் குடியேறுகிறார்கள்.
கட் பண்ணா…1991. அதாவது 70 ஆண்டுகள் கழித்து விஜய்தேவரகொண்டா போலீஸ் கான்ஸ்டபிள் ஆகிறார். அவருக்கு ஒரு அண்ணன் இருந்தார். அப்பாவின் கொடுமை தாங்காகமல், அவரைப் போட்டுத் தள்ளிவிட்டு சின்ன வயதிலேயே வீட்டைவிட்டு ஓடிவிடுகிறார். விஜய்தேவரகொண்டா அண்ணனைத் தேடும் நேரத்தில் ‘அண்டர்கவர்’ ஆபரேஷன் எனச் சொல்லி யாழ்ப்பாணத்திற்கு அனுப்புகிறார் ஒரு உயர் போலீஸ் அதிகாரி. அங்கு தான் உனது அண்ணனும் இருக்கிறான் என்பதையும் சொல்கிறார்.

அதனால் முடியை ஒட்ட வெட்டிக்கொண்டு, அடர்தாடியுடன் யாழ்ப்பாணம் போய் அங்கிருக்கும் செண்ட்ரல் ஜெயிலுக்கும் போகிறார். அங்கே தான் அவரது அண்ணன் [ சத்யதேவ்] இருக்கிறார். விமர்சனத்தின் ஆரம்பித்திலேயே நாம் சொன்ன மாதிரி, அதன் பின் நடப்பதெல்லாம் நம்மை கதற வைக்கும் கதைகள். ரத்தச் சகதியில் நடக்கும் சங்கதிகள்.
படத்தில் விஜய்தேவரகொண்டா, அவரது அம்மாவாக நடித்திருக்கும் ரோகிணி ஆகிய இருவரைத் தவிர வேறு யாரையுமே நமக்குத் தெரியவில்லை. படம் போகும் போக்கும் புரியவில்லை. ஹீரோயின் பாக்யஸ்ரீயைக் கூட இந்தப் படத்தில் தான் நாம் பார்க்கிறோம். யாழ்ப்பாணத்தில் டாக்டராக இருக்கிறார் அவர். விஜய்தேவரகொண்டாவுக்கு மண்டையில் கட்டுப் போடுகிறார். அப்புறம் யாழ்ப்பாணத்தில் ஒரு வில்லன் கும்பல் இருக்கே.. அவய்ங்க இம்சையை நம்மால தாங்க முடியல.
பாரம் இழுக்கும் மாடுகளுக்கு கால்களில் லாடம் அடிப்பார்கள். இந்த ‘கிங்டம்’ படத்தை எடுத்து அதை துணிச்சலாக ரிலீசும் பண்ணி, நம்ம தலையில் லாடம் அடித்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள் நாகவம்சியும் சாய் செளஜன்யா, டைரக்டர் கெளதம் தின்னனூரி. போங்கப்பா…போய் வேற பொழப்பைப் பாருங்க. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கட்டும்.
–மதுரை மாறன்