அங்குசம் பார்வையில் ‘கிடா’
அங்குசம் பார்வையில் ‘கிடா’.
தயாரிப்பு: ‘ஸ்ரவந்தி மூவிஸ் ‘ ரவி கிஷோர். டைரக்டர்: ரா.வெங்கட். ஆர்ட்டிஸ்ட்: ‘பூ’ ராமு, காளி வெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மாள், லட்சுமி, பாண்டி, ஜோதி. ஒளிப்பதிவு: எம்.ஜெயபிரகாஷ், இசை: தீசன், எடிட்டிங்: ஆனந்த் ஜெரால்ட். பிஆர்ஓ: சதீஷ் –சிவா( Aim)
தீபாவளிக்கு இன்னும் மூன்றே நாட்கள் தான் இருக்கு. ஊரே தீபாவளி கொண்டாட்டத்தில் திளைக்க, தனது பேரனுக்கு நல்ல துணிமணி எடுத்துக் கொடுக்க தவியாய் தவிக்கிறார் செல்லையா ( ‘பூ’ ராமு). தனது சேக்காளிகளெல்லாம் விதவிதமான டிரெஸ் எடுத்ததைப் பத்தி பெருமை பேச, .கலைஞர் கொடுத்த இலவச கலர் டி.வி.யில் வரும் ஜவுளிக்கடை விளம்பரத்தில் வரும் டிரெஸ் போல வாங்க வேண்டும் என செல்லையா வின் பேரன் கதிர்(மாஸ்டர் தீபன்) ஆசைப்படுகிறான்.
தென்னந்தட்டி முடைந்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து வயித்துப்பாட்டை சமாளிக்கும் செல்லையா, தனது பேரனின் தீபாவளி டிரெஸ் ஆசையை நிறைவேற்ற பணம் கேட்டு பலரிடமும் கெஞ்சுகிறார். வேறு வழியே இல்லாமல் கடைசி முயற்சியாக, தனது பேரன் செல்லமாக வளர்க்கும் கிடாக்குட்டி (கருப்பு)யை விற்க முடிவு செய்கிறார்.
கறி வியாபாரியான காளி வெங்கட், கிடாவை வாங்க வரும் இரவு, கிடாவை ஆட்டையப் போட்டுவிடுகிறது களவாணிக் கும்பல். அந்த கிடா கிடைத்ததா? பேரன் ஆசைப்பட்ட துணியை செல்லையா வாங்கிக் கொடுத்தாரா? என்பதை மனதில் பதியும் உணர்வுகளுடன் சொல்வது தான் இந்த ‘கிடா’. தாத்தா செல்லையாவாக வாழ்ந்திருக்கார் ‘பூ’ ராமு. அவர் வரும் காட்சிகளெல்லாம் நம்ம மனசு பூரா நிரம்பி வழிகிறார். எப்பேர்ப்பட்ட மகா கலைஞன் இவ்வளவு சீக்கிரம் ஏய்யா இந்த பூமியைவிட்டுப் போன. அதேபோல் பூ ராமுவின் மனைவியாக நடித்த அந்த பெரிய மனுஷி, கடைசி பத்து நிமிட நடிப்பில் நம்மை உலுக்கி விட்டார்.
இந்த இரண்டு கேரக்டர்களுக்கும் நடிப்பில் சவால் விட்டு ஜெயித்திருக்கார் நம் மண்ணின் கலைஞன் காளி வெங்கட். க்ளைமாக்ஸில் “அண்ணே ஒன்னோட பேரன் கேட்ட டிரெஸ் எடுத்துக் கொடுண்ணே” எனச் சொல்லி ரெண்டாயிரம் ரூபாய் கொடுக்கும் சீனில் ஏழைகளிடம் தான் இரக்கம் சுரந்துக்கிட்டே இருக்கும் என்பதை தனது நடிப்பு மொழியால் நச்சுன்னு எழுதிவிட்டார் காளி வெங்கட்.
கேமரா மேன் ஜெயப்பிரகாஷ், மியூசிக் டைரக்டர் தீசன் இருவரும் டைரக்டர் ரா.வெங்கட்டின் உள்ளத்து உணர்வுகளுடன் பயணித்துள்ளனர். விருதுகளுக்கான கலைப்படமாக எடுப்பதா அல்லது கமர்ஷியல் படமாக எடுப்பதா என டைரக்டர் ரா.வெங்கட்டுக்கு லேசான தடுமாற்றம் இருந்திருப்பது பல சீன்களில் தெரிகிறது. இருந்தாலும் இந்த ‘கிடா’ வை குறை சொல்ல மனசு ஒப்புக்கல.
-மதுரை மாறன்