திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் வீரமா முனிவர் பிறந்த நாள் விழா !
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழ்த்துறை நடத்திய வீரமாமுனிவர் பிறந்த நாள் விழா
திருச்சி தூய வளனார் கல்லூரித் தமிழாய்வுத்துறை சார்பாக வீரமாமுனிவரின் 343ஆம் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழாய்வுத்துறை பேராசிரியர் முனைவர் ஆ.ஜோசப் சகாயராஜ் அறிமுகவுரையாற்றி அனைவரையும் வரவேற்றார். கல்லூரி துணை முதல்வர் முனைவர் ரவீந்திரன் அவர்கள் வீரமாமுனிவர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தேர்வு நெறியாளர் முனைவர் கு.அலெக்ஸ், துணை முதல்வர்கள் முனைவர் இருதயராஜ், பேராசிரியர்கள் டாமினிக், பாக்கிய செல்வரதி ஆகியோர் வீரமாமுனிவர் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.
தமிழ் சிறுகதையின் முன்னோடி, தமிழ் உரைநடையின் தந்தை எள்ளல், இலக்கிய வழிகாட்டி, உரைநடை இலக்கிய முன்னோடி, செந்தமிழ் தேசிகர், மொழிபெயர்ப்பு துறையின் வழிக்காட்டி, தமிழ் அகராதியின் தந்தை, ஒப்பிலக்கண வாயில் என்று போற்றப்படக் கூடியவர் வீரமாமுனிவர். கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி என்னும் இயற்பெயரை கொண்ட இவர், கிறிஸ்தவ மதப் பரப்புரைக்காக தமிழக வந்தவர் தமிழ் மீது தீராக்காதல் கொண்டு தேம்பாவணி என்னும் காப்பியத்தையும், திருக்காவலூர் கலம்பகம், கித்தேரி அம்மாள் அம்மானை,அடைக்கல நாயகி வெண்பா, அன்னை அழுங்கல் அந்தாதி, கருணாகரப் பதிகம் ஆகிய சிற்றிலக்கியங்களையும், உரைநடை நூல்களையும், தமிழ் அகராதிப் பணிகளையும் திறம்பட செய்து தமிழ் இலக்கண இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார்.
இவருடைய பரமார்த்த குருக் கதைகள் உலகப் புகழ் பெற்றவை. திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னரைச் சந்தித்து உரையாடுவதற்காக இரண்டே மாதங்களில் உருது மொழியைக் கற்றுக்கொண்டவர் வீரமாமுனிவர். இவருடைய எளிமையையும், துறவையும் கண்டு வியந்த சந்தாசாகிப் இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டத்தை வீரமாமுனிவருக்கு அளித்தார். அத்தகைய சிறப்புமிக்க வீரமாமுனிவருக்கு திருச்சிராப்பள்ளியில் விழா எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள் இவ்விழாவில் பங்கேற்று வீரமாமுனிவரின் படத்திற்கு மலர்தூவியும், கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வீரமாமுனிவரின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.
– ஆதன்