நண்பனிடமே கால் கோடியை சுருட்டிய தில்லாலங்கடி லால்குடி ராஜேஷ் தம்பதியினர் !

0

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

நண்பனிடமே கால் கோடியை சுருட்டிய லால்குடி ராஜேஷ் தம்பதியினர் !

லால்குடி ராஜேஷ் தம்பதிகள்
லால்குடி ராஜேஷ் தம்பதிகள்

”தொழிலதிபரிடம் ரூபாய் 25 இலட்சம் மோசடி. தம்பதியை வலைவீசி தேடிவரும் போலீசார்” என்ற செய்தியை சமீபத்தில் தினசரிகளில் படித்திருப்பீர்கள். ஒருநாள் கூத்தாக பத்தோடு பதினொன்றாக கடந்துபோன செய்திகளுள் ஒன்றாக மாறிப்போனது.

2

மேற்படி மோசடி தம்பதியினரிடம் 25 இலட்சத்தை இழந்த தொழிலதிபர் திருச்சி – தெற்கு தாராநல்லூரைச் சேர்ந்த நந்தகுமாரை தேடிச்சென்றோம். என்ன பிரச்சினை? எப்படி பணத்தை இழந்தீர்கள்? என்ற கேள்விகளை அவர்முன் வைத்தோம்.

“நான் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருகிறேன். திருச்சி மாவட்டம், இலால்குடியடுத்த நன்னிமங்கலத்தைச் சேர்ந்த ராஜேஷ் பிசினஸ் வழியில் அறிமுகமானவர். ரியல் எஸ்டேட் பிசினசோடு, நெருக்கமான நண்பர்களுக்கு பிசினஸ் தேவைக்காக வட்டிக்கு பணம் ஏற்பாடு செய்து கொடுத்தும் வந்தேன். அந்த வகையில் ராஜேஷுக்கும் இதற்கு முன்னர் பண உதவி செய்திருக்கிறேன். அவர் வழியில் அவர் அறிமுகப்படுத்தி வைத்த நபர்களுக்கும் பணம் கொடுத்திருக்கிறேன். பிசினஸில் அறிமுகமான பழக்கம் நாளடைவில் குடும்ப ரீதியான நண்பர்களாக எங்களை நெருக்கமாக்கியது. என்னிடம் பணம் இருப்பதை தெரிந்துவைத்திருந்த ராஜேஷூம் அவரது மனைவி பிரதிபாவும் வட்டிக்கு பணம் கொடுப்பதைவிட, ஷேர் மார்க்கெட்டிங்கில் முதலீடு செய்தால் நல்ல இலாபம் கிடைக்கும் என அட்வைஸ் செய்தனர்.

3

ஆரம்பத்தில் அவர்கள் சொன்னதை நான் நம்பவில்லை. நெருக்கமான நன்கு தெரிந்த நபர்களுக்குத்தான் அதுவும் ஒரு வியாபார உதவியாகத்தான் வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறேன். ஷேர் மார்கெட்டில் எல்லாம் அனுபவம் கிடையாது. விருப்பமும் இல்லை என்று மறுத்துவிட்டேன். நாங்கள் இருவரும் ஷேர் மார்க்கெட்டில்தான் முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பாக்கி வருகிறோம். எங்களை நம்பி பணத்தை முதலீடு செய்யுங்கள். உங்கள் பணத்துக்கு நாங்கள் உத்தரவாதம். ஆறே மாதத்தில் இரட்டிப்பாக்கி தருகிறோம் என ஆசை காட்டினர்.

ஆரம்பத்தில் மறுத்தாலும், குடும்ப ரீதியாக அவர்கள் பழகிய நட்பின் அடிப்படையில் பிறகு ஒப்புக்கொண்டேன். அதன்படி, கடந்த கடந்த 20.06.2021 அன்று 25 இலட்சத்தை வாங்கினார்கள். அவ்வளவுதான், அதன்பிறகு அந்தப் பணத்தை சொன்னமாதிரி ஷேர் மார்க்கெட்டில் போட்டார்களா? என்ன ஆச்சு? எந்த பதிலுமில்லை. பணத்தை வாங்குவதற்காக என்னைத் தேடி வந்தவர்கள் அதன்பிறகு நான் போனில் தொடர்புகொண்டாலும் சரியாக பேசுவதில்லை. ஷேர் மார்க்கெட்டில் நட்டமாகிவிட்டது, கொஞ்சம் பொறுங்கள் என சம்பந்தமில்லாத பதிலை சொல்லி தட்டிக்கழித்து வந்தனர்.

4

இதற்கிடையில் போன் நெம்பரை மாற்றிவிடுவது; வீட்டை மாற்றிவிடுவது என போக்கு காட்டி வந்தனர். தொடர்ச்சியான வற்புறுத்தலுக்குப்பிறகு, ராஜேஷின் மனைவி பிரதிபாவினுடைய அக்கவுண்டிலிருந்து இதுவரை ரூ.1,33,401.00 மட்டுமே திரும்பக் கொடுத்துள்ளனர்.

7
ராஜேஷ்
ராஜேஷ்

2023 மார்ச் மாசம் 20-ஆம் தேதி ஒருவழியாக, ஸ்ரீரங்கம் ஸ்ரீ ராகவேந்திரா நெஸ்டில் அப்பார்மென்டில் ராஜேஷ் குடியிருப்பதை தெரிந்து நேரில் சென்றேன். அப்போதும் அசராத ராஜேஷ், 20 இலட்சத்துக்கு ஒன்று, 5 இலட்சத்துக்கு ஒன்று என இரண்டு செக்குகளாக கொடுத்தார். அசலாக இதை வைத்துக்கொள்ளுங்கள். இலாபத்தொகை பற்றி அப்புறம் பேசிக்கொள்ளலாம் என சமாதானம் செய்து அனுப்பிவைத்தார்கள். அதன்படி, கரூர் வைசியா வங்கி இலால்குடி கிளையில் உள்ள அவரது அக்கவுண்டில் உள்ள செக் எண்கள் 000225 மற்றும் 000226 ஆகியவற்றை அவர் சொன்னபடியே கிளீயரன்சுக்கும் போட்டேன். மேற்படி அக்கவுண்டு பிளாக் செய்யப்பட்டிருப்பதாக தகவலோடு அந்த இரண்டு செக்குகளும் பவுண்சாகி திரும்பிவிட்டது.” என்கிறார் படபடப்பு விலகாமலேயே.

”பணத்தை கொடுத்து ஏமாந்து இவனை தேடி அலையும்போதுதான் பல விசயம் எனக்கே தெரிய வந்துச்சு. 2019-ல பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வுல முறைகேடு செஞ்சாங்கனு பெரிய பிரச்சனை ஆச்சு. அதுல, இந்த ராஜேசும் ஒரு முக்கியமான குற்றவாளி. ராஜேஷோட அண்ணன் ரமேஷ் என்பவரோட மாமனார் டாக்டர் பன்னீர்செல்வம். திருச்சி ஜி.எச்.ல டீனா இருந்தாரு. ரிட்டயர்டு ஆனதுக்கப்புறம் டி.என்.பி.எஸ்.சி.ல மெம்பரா போட்டாங்க. அவரு மெம்பரா இருந்த சமயத்துலதான் இவங்க இந்த மோசடிய செஞ்சிருக்காங்க. அதுல கைதாகி ஜெயிலுக்கெல்லாம் போயிட்டு வந்திருக்கான் இந்த ராஜேஷ்.

பாலிடெக்னிக்...வழக்கு
பாலிடெக்னிக்…வழக்கு

இப்பவும், திமுகவுல அந்த எம்.எல்.ஏ.வை தெரியும் மந்திரியை தெரியும், அவரை தெரியும் இவரை தெரியும்னு அவரை வச்சு தான் நிகழ்ச்சியே நடத்தினேன்…  பந்தாவாத்தான் இந்த வேலையை செஞ்சிருக்கான். இப்பவும் கரூர் பைபாஸ் ரோட்ல ஒரு பார் லீசுக்கு எடுத்து நடத்துறதா சொல்றாங்க. நான் தெரியாத ஆளுகிட்ட ஏமாறல. குடும்ப நண்பரா பழகி என்னை திட்டமிட்டு ஏமாத்தியிருக்கான். என்னை ஏமாத்துன மாதிரி இனி யாரையும் ஏமாத்தக்கூடாது, அவ்வளவுதான். போலீசாரின் நடவடிக்கையில எனக்கு திருப்தி இல்லை. இன்ன வரைக்கும் குற்றவாளிகள அரெஸ்ட் பன்னல. என்ன சொல்றதுனும் தெரியல. பணத்தை கொடுத்து ஏமாந்துட்டேன் பொறுத்திருந்துதான் திரும்ப வாங்கியாகனும்னு இருக்கேன்.” என்கிறார் விரக்தியாக.

வழக்கின் விசாரணை அதிகாரியான, கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் சுலோச்சனா அவர்களை தொடர்பு கொண்டோம். ”இதுபோன்ற வழக்குகளில் எடுத்தவுடனே அரெஸ்ட் செய்துவிட முடியாது. எங்களுக்கென்று சில நடைமுறைகள் இருக்கிறது. முறையாக விசாரித்துதான் வருகிறோம். நிச்சயமாக, உரிய நடவடிக்கை எடுப்போம்.” என்கிறார், அவர்.

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்

குற்றச்சாட்டுக்கு ஆளான ராஜேஷ் – பிரதிபா தம்பதியினரை தொடர்புகொள்ள முயற்சித்தோம். அவர்கள் பயன்படுத்திய தொலைபேசி எண்கள், அவர்கள் கூகுள்பே வழியே நந்தகுமாருக்கு பணத்தை அனுப்பிய எண்கள் என அவர் தொடர்பான அனைத்து எண்களும் அணைத்து வைக்கப்பட்டிருக்கின்றன.

அண்ணன் மாமனார் அரசு தேர்வாணையத்தில் உறுப்பினராக இருக்கிறார் என்று சொல்லியே பலரிடம் வசூல் வேட்டை நடத்திய ராஜேஷ் சொன்னபடி வேலையும் வாங்கித்தராமல் பணத்தையும் திருப்பித் தராமல் பலரை அலையவிட்டிருக்கிறார் என்கிறார்கள். நந்தகுமாரை போல அவர் பலரிடம் கைவரிசை காட்டியிருப்பதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது என்கிறார்கள். இவ்வளவுக்குப்பிறகும்கூட, ஆளும்கட்சியில் தனக்கு செல்வாக்கு இருப்பது போலவும், அண்ணன் மாமனார் முன்னாள் டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் டாக்டர் பன்னீர்செல்வத்தின் பக்கபலமும் இருப்பது போலவும் காட்டி வருவதாகவும் சொல்கிறார்கள். சிபாரிசுகளுக்கு இடம்தராமல், பாரபட்சமற்ற போலீசாரின் சட்ட ரீதியான நடவடிக்கையைதான் நாமும் எதிர்பார்க்கிறோம்.

– அங்குசம் புலனாய்வுக்குழு.

Leave A Reply

Your email address will not be published.