கும்பகோணம் தீவிபத்தில் உயிர் தப்பிய சிறுமி … இன்று டெபுடி கலெக்டர் !
2004-ம் ஆண்டு ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கிய கும்பகோணம் பள்ளி தீ விபத்தை யாராலும் எளிதில் மறந்துவிட முடியாது. அந்த கோர விபத்தில் சிக்கி, நூலிழையில் உயிர் தப்பி பிழைத்த சிறுமி ஜெனிபர், இன்று தன் விடாமுயற்சியால் தமிழகத்தின் துணை_மாவட்ட_ஆட்சியராக பதவியேற்க உள்ளார்.
கும்பகோணம் பள்ளித் தீ விபத்தை யாராலும் மறக்க முடியாது. அந்தக் கோர விபத்தின் பிடியில் இருந்து தப்பிப் பிழைத்த ஒரு சிறுமி, தன் விடாமுயற்சியால் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில், மாநில அளவில் 15-வது ரேங்க் பெற்று, துணை மாவட்ட ஆட்சியராக (Deputy Collector) பதவியேற்கத் தயாராகியிருக்கிறார்.

கும்பகோணத்தைச் சேர்ந்த ஜெனிபர், 2004-ம் ஆண்டு அங்குள்ள கிருஷ்ணா நர்சரி அண்ட் பிரைமரி பள்ளியில் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அந்த ஆண்டு ஜூலை 16-ம் தேதி காலை சுமார் 10.30 மணியளவில் பள்ளியின் சத்துணவு சமையற்கூடத்திலிருந்து பரவிய தீ, பள்ளியின் ஒட்டுமொத்தக் கூரையையும் ஆக்கிரமித்தது.
அன்று நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ஜெனிபர், விபத்து நடந்த நேரத்தில் தரைத்தளத்திற்கு வந்ததால் தம்பியுடன் உயிர் தப்பினார். எனினும், அவரது நெருங்கிய தோழிகள் பலர் அந்தத் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் அவரது மனதில் ஆழமான வடுவையும் குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்தியது. விபத்துக்கு பின், அப்போதைய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் செய்த உதவிகளும், அவர் காட்டிய ஆறுதலும் ஜெனிபரின் மனதில் சிவில் சர்வீஸ் கனவை விதைத்தன.
குடும்ப வறுமை காரணமாக இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து படிக்க வசதி இல்லாததால், ஹோம் டியூஷன் எடுத்து சம்பாதித்த பணத்தை கொண்டு போட்டி தேர்வுகளுக்குத் தயாரானார். மாதாந்திர வருமானம் ரூ.3,000 மட்டுமே இருந்த நிலையிலும், ஜெனிபரின் அட்மினிஸ்ட்ரேட்டர் கனவுக்கு அவரது தாய் சுஜாதா பெரும் அரணாக நின்றார்.
ஐந்து ஆண்டுகால நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் மாநில அளவில் 15-வது ரேங்க் பெற்று ஜெனிபர் சாதனை படைத்துள்ளார். எதிர்காலத்தில் எந்தப் பள்ளியிலும் இது போன்ற தீ விபத்துக்கள் நடக்காமல் இருக்க விழிப்புணர்வை ஏற்படுத்துவதே தனது முதன்மை நோக்கம் என்று ஜெனிபர் கூறியுள்ளார்.
வாழ்த்துகள் ஜெனிபர் !






Comments are closed, but trackbacks and pingbacks are open.