வறுமையோடு போராடி நேர்மையைத் தின்று வாழும் கூட்டம் !
பத்திரிகைத்துறைக்கு என்னைப் போன்ற பலர் லட்சியங்களுடன் தான் வந்தோம். என்னைப் போன்ற பலரும் நடுத்தர வர்க்கம். ஜர்னலிசம் படிக்காமல் வேறு எதெதோ படித்து இந்தத் துறைக்கு வந்தோம்.
என்னைப் போன்ற பலரும் மிகக்குறைவான சம்பளத்துக்குத்தான் மீடியாவுக்கு வந்த புதிதில் வேலைக்கு சேர்ந்தோம். நான் international NGOவில் வேலை பார்த்தபோது வாங்கிய சம்பளத்துக்கு அன்றைய தங்கம் விலைக்கு மாதத்துக்கு 3 1/2 பவுன் வாங்கலாம். அந்த வேலையிலிருந்து விலகி நான் மீடியாவுக்கு வந்த போது அந்த சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்குதான் என் சம்பளம். ஆனால், எதோ ஒரு நிறைவு இருந்தது.
சமூகத்துக்கு பயன்படும் பல விஷயங்களை எழுதினோம் என்கிற திருப்தி இப்போதும் உண்டு. ஆனால், என் பிள்ளையின் தலைமுறை பத்திரிகையாளர்களை / மீடியா ஆட்களை சுயநலவாதிகள்/ corrupted people என்றே நினைக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.
நான் விகடனில் சேர்ந்த காலகட்டத்தில் தான் சுகுணா திவாகர், சமஸ், கவின்மலர் எல்லாரும் சேர்ந்தார்கள். சுகுணா பெரியாரிய சித்தாந்தவாதியாக அறியப்படுகிறார். கவின் கம்யூனிஸ்டாக அறியப்படுகிறார். சமஸ் … இன்று விஜய் ஆட்சிக்காகவே புதிய தலைமுறைக்கு கொண்டுவரப்பட்டார் என்கிறார்கள்.
கோட் சூட் போட்ட நெறியாளர்கள் பலர் கடந்த அரசில் lobbyist ஆகிப்போனார்கள். டெல்லி போராட்டத்தில் அர்னாப் உள்பட பல ஊடகவியலாளர்கள் போட்டோக்களை Gen Z காலால் மிதிக்கிறது; காறித்துப்புகிறது. அதற்கு தகுதியானவர்கள் தான் அவர்கள்.

இங்கு நேர்மையாக செயல்பட்டவர்கள் கடனில் தவிக்கிறார்கள். 60 வயதுக்கு மேற்பட்டும் குடும்பத்துக்காக எதோ வேலை செய்து பிழைக்கிறார்கள். லாபியிஸ்டுகள் ஈ.சி.ஆர் பங்களா, கோடி ரூபாய் மதிப்புள்ள கார்கள் என வாழ்கிறார்கள். இவர்களையும் gen z மிதிக்கலாம். யார் கண்டார்கள்? நேர்மையாக இருந்தவர்கள் இன்னும் வறுமையோடு போராடி நேர்மையைத் தின்று தின்று மகிழ்கிறார்கள்.
லட்சியவாத பத்திரிகையாளக் கூட்டம் இனி உருவாகும் வாய்ப்பு இருக்குமா? தெரியவில்லை!
— நாச்சியாள் சுகந்தி











Comments are closed, but trackbacks and pingbacks are open.