சிறைக்கைதிகளைப் போலவே, அவர்களின் பாதுகாப்புக்காக பணியமர்த்தப்பட்ட சிறைக்காவலர்களும் காக்கி கைதிகளாகவே பாவிக்கப்பட்டுவரும் அவலங்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம்.
பதவி உயர்வில் பாரபட்சம்; சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட நிர்வாக ரீதியான சிக்கல்களையும் தாண்டி, மனரீதியில் பெரும் அழுத்தத்திற்கு மத்தியில்தான் பணியாற்றி வருகிறார்கள் என்பதுதான் யதார்த்தம்.
மிக முக்கியமாக, கல்வியாண்டின் தொடக்கத்தில் அதுவும் பிள்ளைகளை தங்களது தற்போதைய பணியிடத்திற்கு அருகிலேயே ஒரு பள்ளி – கல்லூரியில் பணம் கட்டி சேர்த்துவிட்டபிறகு, அதிரடியாக வந்த பணியிட மாறுதல் உத்தரவு அதுவும் கண்டம் விட்டு கண்டம் என்ற கதையாக தொலைதூர மாவட்டங்களுக்கு பலவந்தமாக பந்தாடப்பட்ட துயரம் சிறைப்பணியாளர்களின் பொண்டாட்டி பிள்ளைகளையும் சேர்த்தே தண்டனைக்குள்ளாக்கியிருக்கிறது. அந்த வலியையும் வேதனையையும் இன்றளவும் எதிர்கொண்டு வருகிறார்கள்.
குடும்பத்தையும், பெற்ற தாய் தந்தையரையும், குழந்தைகளையும் பிரிந்து தொலைதூர மாவட்டங்களில் பணியில் சேர்ந்த சிறைப்பணியாளர்களுக்கு தங்கும் இட வசதிகூட இல்லாமல், சிறைக்கைதிகளைப் போலவே சிறையின் ஓய்வறைகளில் அடைந்து கிடந்த துயரங்களை பதிவு செய்திருக்கிறோம்.
இந்த பின்னணியில்தான், தற்போதைய சிறைத்துறை தலைமை இயக்குநர் சந்தீப்ராய் ரத்தோரின் சீரிய முன்னெடுப்பில் சிறைப்பணியாளர்களின் மன வேதனைகளுக்கு மருந்திடும் பணியின் தொடக்கமாக, கேண்டீன் வசதியை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்.
தமிழ்நாடு சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் தலைமையகத்தின் 5-வது தளத்தில், பணியாளர்களுக்கான உணவகத்தை கடந்த செப்-15 அன்று சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைத் தலைவர் (Director General) டாக்டர் சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைத் தலைவர் (Inspector General) ஆர். கனகராஜ் ஆகியோர் திறந்து வைத்திருக்கிறார்கள்.
”இது நல்ல தொடக்கம்தான். அதேசமயம் இந்த சேவை தமிழகத்தின் 9 மத்திய சிறைச்சாலைகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். கடந்த காலங்களில் ஒவ்வொரு மத்திய சிறைகளிலும் இதுபோன்ற கேண்டீன் வசதி பணியாளர்களுக்கென்று செயல்பட்டுவந்தது. நாளடைவில் அந்த வசதி நிறுத்தப்பட்டுவிட்டது. அவ்வாறு நடத்தப்பட்டுவந்த சிற்றுண்டிச்சாலைகளில் அப்போது சலுகை விலையில் தேனீர், காலை சிற்றுண்டி, மதிய உணவு, மாலைநேர தேனீர் என வழங்கப்பட்டு வந்தது. நாளடைவில் சில அதிகாரிகள் சுய இலாபத்திற்காக, முறைகேடாக பயன்படுத்திய காரணத்தால் பணியாளர்களின் கேண்டீன் வசதி நிறுத்தப்பட்டுவிட்டது.
ஒவ்வொரு மத்திய சிறைச்சாலைகளிலும் 600-க்கும் அதிகமான சிறைத்துறை பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். மனு போட்டு கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் எப்படியும் 500-க்கு குறையாமல் வந்து செல்கிறார்கள். கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல ஏ.ஆர். போலீசார் வந்து செல்கிறார்கள். இவர்கள் எல்லோரும் பயன்பெறும் வகையில் சிறை வளாகத்திற்குள்ளேயே கேண்டீன் வசதி கண்டிப்பாக ஏற்படுத்தித்தர வேண்டும்.
ஏற்கெனவே, சிறைக்கைதிகள் தயாரிக்கும் தின்பண்டங்களை விநியோகம் செய்யும் பொறுப்பில் குறிப்பிட்ட சிறை பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கும் நிலையில், கூடுதலாக பணியாளர்களை நியமிக்க முடியாது. அதேநேரம் சிறைக்கைதிகளையும் கேண்டீனில் வேலை செய்ய அனுமதிக்க முடியாது. ஆகவே, ஒன்று மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் அந்த பொறுப்பை ஒப்படைக்கலாம். சிறை வளாகத்திற்குள்ளேயே வசிக்கும் சிறைக்காவலர்களின் மனைவிமார்களை கொண்டு ஒரு சுய உதவிக்குழுவை ஏற்படுத்தலாம். அல்லது ஓய்வுபெற்ற சிறைப்பணியாளர்கள் சங்கத்தின் பொறுப்பில் கேண்டீன் நடத்தும் பொறுப்பை ஒப்படைக்கலாம். அல்லது குறைந்பட்சம் ஆவின் – டான் டீ போன்ற அரசு துறை நிறுவனங்களிடமே இத்தகைய பொறுப்பை ஒப்படைக்கலாம். இப்படி ஏதேனும் ஒரு மாற்று வழியை நிச்சயம் மேற்கொள்ள முடியும்.” என்பதாக முன்வைக்கிறார், சிறைத்துறை பணியாளர்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஓய்வுபெற்ற சிறைக்காவலர் கருணாமூர்த்தி.
சிறைத்துறை தலைமையின் இந்த முன்னெடுப்பு முதற்கட்ட ஆசுவாசத்தை வழங்கியிருந்தாலும், நிர்வாக ரீதியிலான மாற்றம் என்ற பெயரில் உறவுகளை பிரித்து தூக்கியடிக்கப்பட்ட பணியிட மாறுதல் விவகாரத்தில் எப்போது தலைமையின் பார்வை திரும்பும் என்றே ஏங்கிக்கிடக்கிறார்கள், சிறைத்துறை பணியாளர்கள்.
– அங்குசம் புலனாய்வுக்குழு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.