குறத்திமகன் பட பஞ்சாயத்தால் திறக்கப்பட்ட புதிய பள்ளிக்கூடங்கள் !
பணி ஓய்வுக்கு பிறகு இப்போது நிறைய வாசிக்க, புத்தகங்கள் படிக்க , திரைப்படங்கள் பார்க்க, பயணம் செய்ய நேரம் கிடைக்கிறது. டூரிங்டாக்கீஸ் யூடியூப் சேனலில் சினிமா கதாசிரியர், இயக்குநர் , நடிகர், தயாரிப்பாளர் கலைஞானம் அவர்களின் பேட்டி 170 எபிசோடுகளுக்கு மேல் போகிறது. அதை பொறுமையாக பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
கலைஞானம் அவர்களுக்கு இப்போது 97 வயது. இந்த தொடர் காணொளிகளில் எண்பது வருட தமிழக வரலாறு, சினிமா , அரசியல், பூகோளம், அறிவியல் என்று ஒரு என்சைக்ளோபீடியாவை மிஞ்சும் அளவுக்கு தகவல்கள். எங்க ஊர் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் (கே.எஸ்.ஜி) பற்றிய தகவல்களை கலைஞானம் அதில் பதிவு செய்கிறார். குறத்திமகன் திரைப்படத்தை மீண்டும் பார்க்கத்தோன்றியது. குறத்திமகன் வெளியானபோது நான் பிறக்கவில்லை. ஆனால் மறுவெளியிடு 1982-வாக்கில் வந்தபோது திரையரங்கில் பார்த்தேன். கலைஞானம் நேர்காணல் பார்த்த பின்னர் மீண்டும் யூட்யூபில் படத்தை பார்க்கத்தோன்றியது.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் காங்கிரஸ்காரர். அவருக்கு ஏனோ திமுக மீது தொடர்ந்து ஒவ்வாமை இருந்துள்ளது. மதுரை தங்கம் தியேட்டரில் பணமா பாசமா நூறாவது நாள் விழா. கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்க அதைப்பார்க்கும் கே.எஸ்.ஜிக்கு தலைகால் புரியவில்லை. மேடையில் பேசும்போது தமிழ்நாட்டில் இருக்கும் வசூல் சக்கரவர்த்திகளை எல்லாம் என் படம் முறியடித்துவிட்டது என்று சொல்லியுள்ளார். கடுப்பான எம்ஜியார் ரசிகர்கள் தியேட்டர் வெளியே இருந்த கே.எஸ்.ஜியின் அம்பாசிடர் காரை சல்லிசல்லியாக நொறுக்கிவிடுகிறார்கள். திரையரங்கு உரிமையாளரின் உதவியால் அங்கிருந்து தப்பித்து சென்னைக்கு வருகிறார். சென்னைக்கு வந்தாலும் கே.எஸ்.ஜி வீட்டின் முன்னால் எம்ஜியார் ரசிகர்கள் கல் வீசி கலாட்டா செய்கிறார்கள்.

கே.எஸ்.ஜி பயந்துவிடுகிறார். நேராக முதலமைச்சர் வீட்டுக்குப் போறார். அண்ணாதான் முதல்வர். மாடியில் சட்டை இல்லாமல் உட்கார்ந்துள்ளார். அவர் முன்னாடி சென்று எம்ஜியார் ரசிகர்கள் கலாட்டா செய்றாங்க. என்னால நடமாட முடியலை என்று புகார் சொல்ல அண்ணா எதுவும் சொல்லாமல் அமைதியாக உட்கார்ந்துள்ளார். கடுப்பாகி வெளியே வந்த கே.எஸ்.ஜி என்னடா இது ? நாம எவ்வளவு பெரிய இயக்குநர். உயிருக்கே பயமா இருக்குன்னு சொல்றோம். இவரு பதிலே சொல்லாமல் இருக்காரேன்னு அவரை மனதுக்குள் திட்டியபடி சென்னையிலிருந்து தப்பித்து கொஞ்சநாள் வெளியூரில் தலைமறைவாக இருக்கலாம் என்று குற்றாலம் செல்கிறார். அங்குச்சென்று அருவியில் குளிக்கும்போது அங்குள்ள இரண்டு பேர் அவரையே குறுகுறுன்னு பார்க்க கே.எஸ்.ஜிக்கு பயம் வருது. இவங்க நம்மளை தாக்க வந்திருக்காங்க என்று துண்டோடு காரில் ஏறி லாட்ஜுக்கு செல்கிறார். அங்கும் அந்த இரண்டு பேர் வர வடிவேலு காமெடிபோல ஐயோ இதுக்கு மேல என்னால ஓடமுடியாதுப்பா.
ஒரு பேச்சுக்கு சொன்னா வீடுவரைக்கும் விரட்டிட்டு வருவீங்களானு கேட்க அந்த இரண்டு பேரும் என்ன பேசுறீங்க? நாங்க போலீஸ் சிஐடி. அண்ணா சொல்லிதான் உங்களை பாலோ செய்றோம் என்று சொல்ல கே.எஸ்.ஜிக்கு போன உயிர் வந்திருக்கு. நேராக சென்னை சென்றவர் அண்ணாவை சந்தித்து நன்றி சொல்ல. இந்தப்பா நீ போற இடத்துக்கு எல்லாம் உனக்கு பாதுகாப்பு கொடுக்க போலீசை அனுப்ப முடியாது. நாட்ல போலீசுக்கு ஆயிரம் வேலை இருக்கு. ஒண்ணு செய். நாளை காலையில நீயும், எம்ஜியாரும் சேர்ந்து ஒரு திரைப்படம் எடுக்கப்போவதாக அறிவிப்பு போடு. பிரச்சினை தீர்ந்துடும் என்று அறிவுரை சொல்லியிருக்கார். மறுநாள் அப்படி ஓர் அறிவிப்பு வந்தபின்னர்தான் எம்ஜியார் ரசிகர்களின் பயம் அவருக்கு போயிருக்கு.
இன்னொரு சம்பவம். இந்தமுறை ‘குறத்திமகன்’ பட பஞ்சாயத்து. இந்த முறை கலைஞர் முதல்வர். குறத்திமகன் படத்தை பார்த்துவிட்டு நரிக்குறவர்கள் சிலர் நேராக கே.எஸ்.ஜியோட கற்பகம் ஸ்டூடியோ சென்று உங்க படத்தை பார்த்தோம். நரிக்குறவர்கள் படிச்சு முன்னேற வேண்டும் என்று படத்துல சொல்லியிருக்கீங்க. எங்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் கட்டிக்கொடுங்க என்று கேட்டுள்ளார்கள். கே.எஸ்.ஜி அதிர்ச்சியாகிறார். பள்ளிக்கூடம் கட்டுறது சாதாரண வேலையா? பள்ளிக்கூடம்லாம் தனிமனிதரால சாத்தியப்படாது. ஒருவேளை தொடங்கினாலும் தொடர்ந்து நடத்த முடியாது. நிறைய சட்ட திட்டங்கள் இருக்குன்னு எவ்வளவோ எடுத்து சொல்லியும் அந்த மக்களும் விடுவதாக தெரியல. அது ஓர் அரசு எந்திரம் செய்ற வேலை. நீங்க போய் முதலமைச்சரை பாருங்க என்கிறார். “என்ன சாமி நீங்க நாங்கல்லாம் படிச்சி வாழ்க்கைல முன்னேறனும்னு படம் எடுத்து விட்டுட்டு இப்ப எங்களை படிக்க வைக்க முடியாதுன்னு சொன்னா எப்படி”ன்னு அவர்களும் அழ… நிலைமை ரசாபாசமானது. உடனே சுதாரித்துக்கொண்ட இயக்குநர் கே.எஸ்.ஜி நீங்க நேரா கிளம்பி கோபாலபுரம் போங்க. அங்கதான் முதலமைச்சர் வீடு இருக்கு. நாங்க குறத்தி மகன் படம் பார்த்தோம். அதுல வர்றா மாதிரி எங்க புள்ளைங்களை படிக்க வைக்க ஆசைப்படுறோம்னு முதலமைச்சர் கிட்டசொல்லுங்க. நான் தான் உங்களை அவர்கிட்ட அனுப்பி வெச்சேன்னு சொல்லிராதீங்க என்று சொல்லியுள்ளார்.
விருகம்பாக்கத்திலிருந்த கற்பகம் ஸ்டூடியோவிலிருந்து கோபாலபுரம் முதலமைச்சர் வீடு வரை அவர்களும் கூட்டமாக நடந்தே சென்று முதலமைச்சர் வீடு முன்பு அமர்ந்து விட்டனர். உதவியாளர்கள் மூலம் தகவலை அறிந்த முதலமைச்சர் கலைஞர் வெளியே வந்து அவர்களை நேரில் சந்தித்து பேசி அவர்களின் கோரிக்கையை தெரிந்து கொண்டார்.
இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காக ஒரு பள்ளி திறந்தால் அதில் நிறைய சட்டப் பிரச்சினைகள் வரும் அரசாங்கமே மக்களை பாகுபடுத்திப் பார்க்கறதா என்ற ஒரு கருத்து உருவாகிவிடும். எனவே, நீங்கள் ஏற்கெனவே ஆங்காங்கு இருக்கற பள்ளிகளிலேயே உங்க குழந்தைகளை சேர்க்கறது தான் சரி. எந்தப் பிரச்சினையும் வராம நாங்க பார்த்துக்கறோம்னு அவர் சொல்ல, ஆனா அந்த மக்களோ “சாமீய் எங்க புள்ளைங்க பள்ளிக்கூடம் பக்கமே போனதில்லை. அங்க போய் மற்ற பிள்ளைகள் ஏதாவது கிண்டல் கேலி பேசினா அதைக் கேட்டு தாழ்வு மனப்பான்மையால் பள்ளிக்கூடம் போகமாட்டோம்னு சொல்லி எங்க புள்ளைங்க நின்னுருவாங்க. இதிலெல்லாம் போய் பேசி சமாளிக்கற அளவுக்கு எங்களுக்கு அனுபவமும் அறிவும் இல்லை. எங்க மக்களின் கல்வி கனவு, கனவாகவே போய்விடும். ஆகவே எங்க புள்ளைங்க மட்டுமே படிக்க தனி பள்ளி தான் வேண்டும். அதுதான் சரியான நிவாரணம் சாமீய்” னு அவர்களும் வாதம் செய்ய கலைஞரும் அவங்க பேச்சில் இருக்கும் நியாயத்தை புரிந்து கொண்டு, சட்ட திட்ட பிரச்சினைகளை பிறகு பார்த்துக்கலாம்னு உதவியாளர்களிடம் சொல்லி அந்த இடத்திலேயே ஒரு உத்தரவு டைப் செய்து அதில் கையெழுத்து போட்டார்.
அந்த உத்தரவு தான் தமிழ்நாட்டின் முதல் நரிக்குறவர், குறும்பர், இருளர், லம்பாடிகள், பைராகிகள், குடுகுடுப்பைகாரர்கள் என இடம் பெயர்ந்து வாழும் இன மக்களின் குழந்தைகளுக்காக துவங்கப்பட்ட சைதாப்பேட்டை திருவள்ளுவர் குருகுலம் எனும் (1972இல்) ட்ரஸ்ட் உறைவிடப் பள்ளி. அதன் அங்கீகாரத்திற்கு பணம் எதுவும் அரசுக்கு செலுத்தத் தேவையில்லை என்ற சிறப்பு சட்ட உத்தரவையும் அவரே போட்டார். கலைஞர் உத்தரவால் துவங்கப்பட்ட சைதாப்பேட்டை திருவள்ளுவர் குருகுல ட்ரஸ்ட் பள்ளிக்கு தன் பொன்விழாவை முன்னிட்டு கட்டடம் கட்ட நிதியளித்தவரும் கலைஞரே.
அந்த குருகுல பள்ளியை முன்னோடியாக வைத்து 2001க்கு பிறகு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தஞ்சையில் இடம்பெயர்ந்து வாழும் இன மக்களுக்காக மேலும் ஒரு உறைவிட பள்ளி தொடங்கப்பட்டது. நரிக்குறவர், காணிக்காரர், குறும்பர் இன மக்களை மலைவாழ் பழங்குடியினர் இனத்தில் சேர்க்க பலமுறை வலியுறுத்தியவர் கலைஞர் அவர்கள் தான். அதை ஒன்றிய அரசும் சட்டமாக நிறைவேற்றியுள்ளது. இந்த அரசாணை மூலம் அவர்கள் ஒன்றிய அரசின் 19% எஸ்சி /எஸ்டி ஒதுக்கீடில் ஒன்றிய அரசு பணிகளில் சேர முடியும்.
– விநாயமுருகன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.