வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !
மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதி சுவாமிநாதன் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அளித்த புகார் மனு சமூக வலைதளங்களில் பரவியதால், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிபதி சுவாமிநாதன் நீதிமன்ற அவமதிப்பு புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதான நீதிமன்ற நடவடிக்கைக்கு எதிராக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம், தமிழ்நாடு – பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட நீதிமன்றம் நுழைவு வாயிலில் 100 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிமன்ற அவமதிப்பு புகார் தெரிவித்துள்ளார். நீதிபதி சுவாமிநாதன் குறித்தும், அவரது வழக்குகளின் தீர்ப்புகள் குறித்தும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வீடியோ வாயிலாக விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. வாஞ்சிநாதனுக்கு எதிராக நீதிபதி சுவாமிநாதன் நீதிமன்ற அவமதிப்பு புகார் கூறியுள்ள நீதிமன்ற அவமதிப்பு புகாரை திரும்ப பெற வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பாஸ்கர் கூறுகையில் … “”நீதிபதி சுவாமிநாதன் மீது புகார் கொடுக்கப்பட்டதால், இவ்விவாகரம் தொடர்பான அவமதிப்பு புகாரை நீதிபதிசுவாமிநாதனே விசாரிக்க கூடாது. இம்மனுவை உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்” என தெரிவித்தார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்