கொண்டாடப்பட வேண்டிய தலைவர் கலைஞர்!
ஜூன்-03, 2023 கலைஞரின் நூறாவது பிறந்தநாள். கலைஞர் நூற்றாண்டை ஓராண்டு முழுவதும் கடைபிடிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது, தி.மு.க. தலைமை.
திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சிக்கு மட்டுமா சொந்தக்காரர் முத்து வேலர் கருணாநிதி. தி.மு.க.வின் தலைவர்; தமிழக முதல்வர்; சட்டமன்ற உறுப்பினர் என்ற அடையாளங்களையெல்லாம் தாண்டி, தமிழினத்தின் தலைவர் அவர்; நவீன தமிழகத்தின் சிற்பி அவர். இந்திய அரசியல் அரங்கில் தமிழகம் தனித்துவமாக தனித்து நிற்பதற்கு அடித்தளமிட்டவர்களுள் முக்கியமானவர் மு.க. என்றழைக்கப்படும் முத்துவேலர் கருணாநிதி.
ஈராயிரம் ஆண்டு இருள் நீக்கும் பேரொளியாய் திராவிடம் என்றொரு போர்வாளை இந்திய அரசியல் அரங்கிற்கு கொடையாக கொடுத்த தமிழ்நாடு. அண்ணாவும், பெரியாரும் முன்வைத்த சமூக சீர்திருத்தக் கருத்துக்களை சட்டங்களாக ஆக்கியவர் ”முதல்வர் மு.கருணாநிதி”.
நாடகம், கவிதை இலக்கியங்களில் ஆர்வம் கொண்டு, நீதிக்கட்சியின் அரசியலால் ஈர்க்கப்பட்டு, மீசைக்கூட அரும்பிடாத 14 வயதிலேயே சமூக இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்; பேச்சாளர், கவிஞர், திரைப்பட வசனகர்த்தா, பத்திரிக்கையாளர் என பல்கலை வித்தகர்; பின்னாளில் கலைஞர் கருணாநிதி என்றழைக்கப்பட்ட ”தட்சிணாமூர்த்தி”. ஐந்துமுறை தமிழகத்தின் முதல்வர்; 13 முறை சட்டமன்ற உறுப்பினர்; தான் போட்டியிட்ட 13 முறையும் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் என்ற பெருமைகளையெல்லாம் தாண்டி, ”இந்தியாவிலேயே முதன் முறையாக” என்று மார்தட்டி சொல்லும்படியாக முன்மாதிரியாக சாதனைத் திட்டங்களை கொண்டுவந்தவர் என்பதில்தான் தனித்து நிற்கிறார், கலைஞர்.
கைரிக்ஷா ஒழிப்பு; சமத்துவப்புறங்கள்; அனைத்து சாதியினரும் அர்ச்சக ராகும் சட்டம்; மகளி ருக்கு சொத்தில் சம உரிமைச் சட்டம்; அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% உள்ளாட்சி அமைப்புகளில் 33% உரிமை; இட ஒதுக்கீட்டு உரிமையின் அளவை (ஙிசி – 31%, ஷிசி – 18 %) உயர்த்தியது; அருந்ததியினருக்கு பழங்குடியினருக்கு தனி இட ஒதுக்கீடு; விதவைகளையும் மாற்றுத் திறனாளிகளையும் மூன்றாம் பாலினத்தவர் களையும் அரவணைத்து, அவர்களின் உணர்வு களுக்கு மதிப்பளித்து சமூகத்தில் அவ ர்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுத்தந்தவர் சமூகநீதியின் காவலர் “கலைஞர் கருணாநிதி.
தமிழோடு ஒன்று கலந்தவர்; பெரியாரின் பங்களிப்போடு தமிழ்மொழிக்கே சீர் திருத்தங்களை கொண்டு வந்தவர்; தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தும்; தமிழுக்கு ஆட்சி மொழி உரிமையும்; காண்போர் புருவம் உயர்த்திப் பார்க்கும் விதமாய் உலக அரங்கில் தமிழையும் தமிழனையும் தலைநிமிர்ந்து நிற்கச்செய்தவர் மு.கருணாநிதி; தெற்கில் உதித்த சூரியன் அவர். தி.மு.க. என்றொரு தனிப்பட்ட கட்சியின் விழாவாக அல்லாமல், ஒட்டுமொத்த தமிழர்களின் திருவிழாவாக கொண்டாடப்பட வேண்டிய ஒன்று கலைஞரின் நூற்றாண்டு .
-டெல்டாகாரன்