பெண் வழக்கறிஞர்களுக்கு – சிரிப்பு யோகா பயிற்சி!
பெண் வழக்கறிஞர்களுக்கு சிரிப்பு யோகா பயிற்சி!
திருச்சிராப்பள்ளி பெண் வழக்கறிஞர்கள் சங்க படிப்போர் வட்ட இருபத்தொன்பதாவது நிகழ்வாக வழக்கறிஞர்களுக்கு சிரிப்பு யோகா சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பெண் வழக்கறிஞர்கள் சங்க செயலர் ஜெயந்திராணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் செல்லம் தமிழரசன் முன்னிலை வகித்தார்.
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும் யோகா ஆசிரியருமான விஜயகுமார் சிரிப்பு யோகா குறித்து பேசுகையில், வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும். சிரிப்பே ஒரு மாமருந்து ஆகும். நவநாகரிக உலகில் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள்.பலர் மன அழுத்தமான வாழ்க்கையை வாழ்கின்றனர். மன அழுத்தமானது உலக அளவில் மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்சனையாக உள்ளது.
தற்பொழுது சிரிப்பு யோகா குழுக்கள் உலகளாவிய இயக்கமாக உருவெடுத்து உள்ளது. மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு பொழுதுபோக்கு அம்சங்களையும் தொலைக்காட்சிகளையும், அலைபேசிகளையும் நாடுகிறார்கள். மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு அச்சு, காட்சி ஊடகங்களில் நகைச்சுவை துணுக்குகள் மற்றும் நிகழ்ச்சிகளையும் கண்டுக்களிக்கின்றனர்.

நண்பர்களுக்காக நேரம் ஒதுக்கி கலந்துரையாடி நகைச்சுவையாக சிரித்து பேசி மன அழுத்தத்தை போக்குகின்றனர்.
அசட்டு சிரிப்பு, அதிகார சிரிப்பு, ஆணவச் சிரிப்பு, அன்பு சிரிப்பு, அமைதிச் சிரிப்பு, வெற்றி சிரிப்பு, சாதனை சிரிப்பு, மழலைச் சிரிப்பு, ஆரவார சிரிப்பு, கருணைச் சிரிப்பு, அருள்பொழியும் சிரிப்பு, நய வஞ்சக சிரிப்பு,நையாண்டிச் சிரிப்பு, கம்பீரச் சிரிப்பு, கருணை சிரிப்பு, தெய்வீக சிரிப்பு என பல்வேறு சிரிப்புகளை மனிதர்கள் சூழலுக்கு ஏற்ப கையாண்டு வருகிறார்கள்.
ஆனால் தினமும் ஒரு உடற்பயிற்சியாக தன்னார்வமாக எப்படி சிரிப்பது எவ்வாறு உற்சாகமாக இருப்பது என அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். மே மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச சிரிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. “உலக சிரிப்பு தினத்தை” கொண்டாடுவது ஒவ்வொருவரும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்ற நேர்மறையான நோக்கம் தான். சிரிப்பு யோகா என்பது நீண்ட தன்னார்வ சிரிப்பை உள்ளடக்கிய ஒரு பயிற்சியாகும். சிரிக்க எந்த வித நகைச்சுவை காரணமும் இல்லாமல நிகழ்த்தப்படுவது ஆகும்.
சிரிப்பு யோகா அமர்வுகனில் கைதட்டல், கண் தொடர்பு, வெவ்வேறு உடல் அசைவுகள் கொண்ட உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி உடன் ஹஹஹ என சிரிக்கும் பயிற்சி ஆகும்.இப்பயிற்சி ஒவ்வொருவருடைய இறுக்கத் தன்மையை, நடைமுறை தடைகளை உடைக்க உதவுகிறது மற்றும் விளையாட்டுத்தனமான உணர்வை ஊக்குவிக்கிறது.
சிரிக்கும் ஒரு எளிய செயல் மனச்சோர்வு மனநிலையை மகிழ்ச்சியாக மாற்றுகிறது. தினமும் 10 நிமிடங்கள் சிரிப்பது உங்கள் மன அழுத்தம்/துக்கங்கள் அனைத்தையும் மறக்க உதவுகிறது. சிரிப்பு யோகாவை குழுவாகச் செய்தால் வேடிக்கையாக இருக்கும். ஒருவர் சிரிக்க ஆரம்பித்தால், மற்றவர்களுக்கும் சிரிப்பு அலைகள் பரவி சிரிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
கைதட்டி, ‘ஹோ, ஹோ, ஹோ’ மற்றும் ‘ஹா, ஹா, ஹா’ என்று கோஷமிடுவதால் மன இறுக்கத்தை உடைக்க உதவும்.
உற்சாகமான கைதட்டல் மற்றும் கோஷமிடுதல் உதரவிதானத்தைத் தூண்டுகிறது மற்றும் நேர்மறை ஆற்றலை உருவாக்குகிறது.
ஹா ஹா’ என தன்னார்வமாக சிரிப்பது தான் சிரிப்பு யோகாவின் மந்திரமாகும் என்றார்.
தொடர்ந்து வணக்க சிரிப்பு, தேனீர் ஆற்றும் பாவனைச் சிரிப்பு, விவாத பாவனைச் சிரிப்பு, நேரமாவதை குறிக்கும் வகையில் கைக்கடிகாரத்தை பார்த்து சிரிப்பது,நாக்கை நீட்டி, கண்களை விரித்து, கைகளை நீட்டி கர்ஜனை சிரிப்பு குழந்தைச் சிரிப்பு, இளைஞர்களின் சிரிப்பு, வயோதிக சிரிப்பு என பல்வேறு சிரிப்பு பயிற்சிகளை மேற்கொண்டனர். வழக்கறிஞர் விஜயலட்சுமி வரவேற்று, நன்றி கூறினார்.