’சட்டப்பூர்வ அனுமதி’யும் சட்டவிரோத கனிமவளக் கொள்ளையும் !
’சட்டப்பூர்வ அனுமதி’யும் சட்டவிரோத கனிமவளக் கொள்ளையும் !
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா முதலக்கம்பட்டியில் தனிநபர் ஒருவருக்குச் சொந்தமான பட்டா இடத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் அனுமதி பெறப்பட்ட அளவைவிட ஆழமாக கனிம வளங்கள் தோண்டி எடுக்கப்படுவதாகவும், அவை கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
பொதுப்பணித்துறையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றிவரும் அரசு பணியாளரான சரவணன் என்பவருக்குச் சொந்தமான பட்டா இடத்தில்தான் இந்த கனிமவளக் கொள்ளை நடைபெற்று வருகிறது. பட்டா இடமும் அவருடையதே. பட்டா இடத்தில் செயல்படும் குவாரியும் அவருடையதே. அதாவது, அரசின் அனுமதியோடு அவருடைய பட்டா இடத்தில் அவரே கனிம வளத்தை வெட்டி எடுத்து வருகிறார். இதில் என்ன பிரச்சினை என்கிறீர்களா?
பொதுவாகவே, இதுபோன்று கல்குவாரி உள்ளிட்டு கனிம வளங்களை வெட்டி எடுப்பதற்கான நடைமுறை எவற்றிலும் வெளிப்படைத்தன்மை இருப்பதில்லை என்பதுதான் ‘உலக நடைமுறை’! ”பத்து சென்ட் பட்டா இடத்தை காட்டி அனுமதி வாங்கிவிட்டு, பத்து ஏக்கர் பரப்பளவுக்கு முடிந்தவரை மொட்டையடிப்பது” என்பதுதான் ’சட்டப்பூர்வ’ அனுமதியின் இலட்சணம். முதலக்கம்பட்டியிலும் இதே கதைதான்.
இரவு பகலாக வெடி வைத்து வெட்டி எடுக்கப்படும் கனிம வளங்கள் கனரக வாகனங்களான டாரஸ் வண்டிகளில் குடியிருப்புப் பகுதிகள் வழியாக எடுத்துச் செல்லப்படுகிறது. அதிக ஆழத்தில் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுவதால் அப்பகுதியைச் சுற்றியுள்ள விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதாக குற்றஞ்சுமத்துகின்றனர், விவசாயிகள்.
”வெடி வைக்காம பாறைய எடுக்கமுடியாது. தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவராக இருக்கிறேன். அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அரசு அனுமதி பெற்று குவாரி நடத்தி வருகிறேன். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ, மைன்ஸ் ஆபீசிலயோ எந்த ஒரு புகாரும் இல்லை.” என்கிறார், குவாரியை நடத்தி வரும் சரவணக்குமார்.
”சம்பந்தபட்ட குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவு மட்டுமே கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை உறுதிபடுத்த இயலுமா?” என்ற கேள்வியுடன், தேனி மாவட்ட, புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் வினோத் தமிழரசனை அங்குசம் சார்பில் தொடர்புகொண்டோம். “சார் அங்கே குவாரி செயல்படுவது தெரியும். விதிமீறல் இருக்கிறதா? அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக எடுத்திருக்கிறார்களா? என்பதை உறுதியாக இப்போது சொல்ல முடியாது. ஆய்வு செய்துதான் சொல்ல முடியும். நான் பார்த்து சொல்கிறேன். இதுவரை, அந்த குவாரி குறித்து எந்தப் புகாரும் இல்லை.” என்றார்.
”அனுமதி கொடுத்ததோடு இருந்துவிடுவீர்களா? குவாரியை ஆய்வு செய்வீர்களா?” என்ற அடுத்தக்கேள்விக்கு, “குறிப்பான புகார் ஏதும் வந்தால் ஆய்வு செய்வோம். நான் புதுசு சார். விசாரிச்சிட்டு சொல்றேன்” என்று அடுத்த கேள்விகளுக்கு இடம்தராமல், அவசரமாக இணைப்பைத் துண்டித்துவிட்டார், அதிகாரி வினோத் தமிழரசன்.
அனுமதிக்கப்பட்ட அளவுகளில்தான் கனிமவளங்கள் வெட்டி எடுக்கப்பட்டிருக்கிறதா? என்பதை ’அதிகாரி’ அளந்துப் பார்த்து உறுதிப்படுத்துவரா? பொறுத்திருந்து பார்ப்போம்!
– ஜெ.ஜெ.