ஆளுநர் பதவியிலிருந்து ஆர்.என்.ரவியை தூக்கு!
ஆளுநர் பதவியிலிருந்து ஆர்.என்.ரவியை தூக்கு !
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்க வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார், அக்கட்சியின் முதன்மைச்செயலர் துரை.வைகோ.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றார். தமிழக மாணவர்களின் எதிர்காலத்தையும் வேலை வாய்ப்பையும் பாதிக்கும் வகையில் பட்டமளிப்பு விழாவை தாமதப்படுத்தி தற்போது 9 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டப்படிப்பு சான்றிதழை எதிர்நோக்கி காத்திருக்கும் அவல நிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியே காரணம்.
உலகப் பொதுமறை நூலான திருக்குறளுக்கு காவி சாயம் பூசும் வகையில் தொடர்ந்து பேசி வருவதும், ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிப்பெயர்த்த ஜி.யு.போப்பை விமர்சனம் செய்வதும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வாடிக்கை. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் தமிழ்நாட்டில் பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தும், 45 -க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தும் உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த ஆன்லைன் ரம்மி அவசர தடைச் சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய பெருமைக்குரியவர் ஆர்.என்.ரவி அவர்கள். ஆளுநரை கண்டித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகே அவசர அவசரமாக ஒப்புதல் அளித்தார்.
இப்படி, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஜனநாயக விழுமியங்களை குழி தோண்டி புதைக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகின்றார். தனக்கு இல்லாத அதிகாரங்களை இருப்பதாக கற்பனை செய்து கொண்டு ஒன்றிய அரசின் ஏஜெண்ட் போல அவர் நடந்து கொள்வதும், தனக்கு கிடைத்த மேடைகளை பயன்படுத்தி மத பிரச்சாரத்தில் ஈடுபடுவதும் அரசியல் சட்டம் வலியுறுத்தும் மதசார்பின்மைக்கு எதிரானது ஆகும்.” என குறிப்பிட்டுள்ளார்.
ஜூன்-06 அன்று தென்சென்னையில் இந்த கையெழுத்து இயக்கத்தை தானே, தொடங்கி வைக்க இருப்பதாகவும் தமிழகம் முழுவதும் ஜூலை 07 ந்தேதி வரை இந்த கையெழுத்து இயக்கம் நடைபெறும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.