மாட்டு வண்டிகளில் வந்து குவிந்த
இலக்கிய சீர் வரிசை…
மணமகளுக்கு பொன்னும் பொருளும் சீர் வரிசையாகத் தருவார்கள். அவ்வளவு ஏன்? மிக மிக வசதியான பணக்காரர்கள் வீடு தோட்டம் துரவு கூட சீர் வரிசையாகத் தருவார்கள். பெண்ணோட அப்பா அம்மா தர இருக்கிற சீர் வரிசை இருக்கட்டும். பெண்ணோட அப்பாவுக்கு நண்பர்கள் நாம். வழக்கமாக எல்லோரும் தருவதுபோல ஆளுக்கொரு அன்பளிப்புப் பெட்டி சுமந்து சென்று தந்து விட்டு வந்துவிடக் கூடாது. தமிழினி புலனம் என்கிற மொபைல் வாட்ஸ் அப் குழுவினர் வித்தியாசமாகச் சிந்தித்து உள்ளனர். அவர்களது சீரிய செயல்பாடு தான் கட்டுரையின் மேற்கண்ட தலைப்பு.
கவிஞர் தங்கம் மூர்த்தி. புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேனிலைப்பள்ளியின் தாளாளர். சாகித்திய அகாடமியின் முன்னாள் ஆலோசனைக் குழு உறுப்பினர். தங்கம் மூர்த்தி – அஞ்சலிதேவி ஆகியோரின் மகள் காவியா மூர்த்தி. ஆவுடையார்கோயில் குருங்களூர், ராமச்சந்திரன் -லீலாவதி ஆகியோரின் மகன் சுதர்சன்.
கடந்த மாதம் புதுக்கோட்டை நகரில் காவியா மூர்த்தி &சுதர்சன் ஆகியோரின் திருமணம் இனிதே நிறைவேறியது. அந்தத் திருமணத்தின் போது தான் மணமகளுக்கு இலக்கிய சீர் வரிசைகள் மாட்டு வண்டிகளில் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு வந்து குவிந்தன. புதுக்கோட்டை நகர மக்கள் சாலையோரமாக நின்று அதிசயித்து வேடிக்கை பார்த்தனர். தமிழினி புலனம் எனும் வாட்ஸ் அப் குழுவில் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், காவல் துறையினர் என்று பலரும் உறுப்பினர்களாக உள்ளனர். அதன் அட்மின்களில் ஒருவர் தங்கம் மூர்த்தி. அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சுபாஷ்காந்தி. நாம் அவரிடம் பேசினோம்.
“திருமண அழைப்பிதழ்கள் அச்சடித்து வரும்போதே, எங்கள் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மணமகளுக்கு அன்பளிப்பு தருவது தொடர்பாக வெவ்வேறு விதமாகப் பேசிக் கொண்டோம். வெவ்வேறு சிந்தனைகள் வெளிப் பட்டன. அதில் புத்தகங்களாகத் தருவது சிறந்த பரிசாக எங்களுக்குத் தோன்றியது. அதனையும் எப்படித் தரலாம் என்று ரொம்பவே யோசித்தோம். தற்போது விழாக்களில் புத்தகங்களும் அன்பளிப்பாகத் தந்து வருகிறார்கள். சரி. நாம் அதிலும் ரொம்பவும் வித்தியாசமாக இதுவரை யாரும் தந்திடாத வகையில் இருக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கலந்து பேசினோம். அப்போது தான் எங்களுக்குள் உருவானது, “மாட்டு வண்டிகளில் வந்து குவிந்த இலக்கிய சீர் வரிசை” எனும் சீரிய திட்டம். பின்னர் இலக்கிய சீர் வரிசை எனில் எது குறித்து என்றெல்லாம் சற்றே ஆழமாக யோசிக்கத் தொடங்கினோம். திருவள்ளுவர், ஔவையார், கம்பர், இளங்கோவடிகள் போன்றோர் மனதுக்குள் வந்து நின்று, நாங்கள் இருக்கிறோம் என்று எங்களுக்கு நம்பிக்கையும் தைரியமும் தந்தனர். உடனே செயலில் இறங்கி விட்டோம்.
சென்னை புத்தகக் காட்சிக்கு சென்று புத்தகங்கள் வாங்கி சேகரிக்கத் தொடங்கினோம். திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் நூல்கள், திருக்குறள் மூலம் தெளிவுரை, ஔவையாரின் ஆத்திச்சூடி, கம்பரின் கம்ப ராமாயணம், இளங்கோவடிகளின் சிலப்பதி காரம், பாரதியார் கவிதைகள், கட்டுரைகள். பாரதிதாசன் கவிதைகள். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் திரையிசைப் பாடல்கள். கண்ணதாசன் கவிதைகள். வாலி கவிதைகள். செம்மொழியின் செம்மாந்த படைப்பாளர்களின் படைப்புகளை வாங்கிக் குவித்தோம்.
ஒன்பது மாட்டு வண்டிகள். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு படைப்பாளர்களின் படைப்புகள் பட்டுத் துணிகளில் சுற்றி. அந்தந்த மாட்டு வண்டிகளில் அதனதன் படைப்பாளர்களின் திருவுருவங்கள் ஓவியங்களாக வரையப்பட்ட வண்ணப் பதாகைககள். முத்தமிழையும் வெளிப்படுத்தும் விதமாக இயல் துறைக்கு புத்தகங்கள். இசைக்கு தாரை தப்பட்டைகள் முழங்க உறுமி மேள இசை. நாடகத்துக்கு மாட்டு வண்டிகளின் ஊர்வலத்துக்கு முன்பஇலக்கிய சீர் வரிசை மாட்டு வண்டிகள் ஊர்வலத்துக்கு முன்பாக, முக்கனிகளின் சீர் வரிசையும். ஒன்பது பெண்கள். ஒன்பது தாம்பாளங்கள். அவை களில் முக்கனிகள். இதற்கு முன்பாக தாரை தப்பட்டை உறுமி மேள இசையுடன் ஆடல் பாடல்கள். புதுக்கோட்டை பாரத் நகர் தங்கம் மூர்த்தி வீட்டு வாசலில் இருந்து தொடங்கியது, மாட்டு வண்டிகளில் இலக்கிய சீர் வரிசை ஊர்வலம். ராம் நகர் வழியாக திருமண மண்டபத் தை வந்தடைந்தது.
அந்த ஊர்வலம். திருவள்ளுவர், ஔவையார், கம்பர், இளங்கோவடிகள், பாரதியார், பாரதி தாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன், வாலி ஆகியோரின் படைப்புகளை மணமகளுக்கு சீர் வரிசைப் புத்தகங்களாகக் கொடுத்து மகிழ்ந்தோம்.” என்கிறார் மருத்துவர் சுபாஷ்காந்தி. “என் வாழ்நாளில் எனக்குக் கிட்டியப் பெரும் பேறு இது. நானே நினைத்துப் பார்த்திடாத பரிசு. எல்லோரும் வியந்து பார்க்க வைக்கும் வினோதமான வித்தியாசமான சீர் வரிசை இது. பொன்னும் பொருளும் கூட ஏதேனும் ஒரு கால கட்டத்தில் ஏதேனும் ஒரு நாளில் உருமாறிப் போய்விடும். இந்த நூல்கள் எதுவுமே எந்தக் காலத்திலும் உருமாறிப் போகாது. அதன் உள்ளடக்கம் மாறிப் போகாது. ஒரு தந்தையாக நான் என் மகளுக்கு தந்திருக்கும் சீர் வரிசையில், என் நண்பர்கள் தமிழினி புலனம் வாட்ஸ் அப் குழுவினர் தந்திருக்கும் இலக்கிய சீர் வரிசைதனை என் வாழ்நாளில் மறக்க இயலாது.’” என்கிறார் கவிஞர் தங்கம் மூர்த்தி.
– ஶ்ரீரங்கம் திருநாவுக்கரசு