தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!
தூய்மைப் பணியாளர்களை
பணி நிரந்தரம்
செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாடு உள்ளாட்சித் துறைகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி உள்ளாட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில் தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய மூன்று இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சையில் மாநகராட்சி அலுவலம் முன்பு சங்கத் தலைவர் வெ.சேவையா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உள்ளாட்சி தொழிலாளர் குறைதீர் ஆணையம் அமைக்க வேண்டும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்களில் அவுட்சோர்சிங், தினக்கூலி மற்றும் சுய உதவிக்குழு முறைகளை ரத்துச் செய்து, பணியாற்றும் அனைவரையும் உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,
தூய்மைப் பணியாளர்களுக்கு வாரம் ஒருநாள் ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும்,
தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணை (நிலை) எண் 152, நாள் 23.01.2023 மற்றும் அரசாணை (நிலை) எண் 139, நாள் 03.01.2023 உள்ளிட்ட வெளிச்சந்தை முறையில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்;த்தும் அனைத்து அரசாணைகளையும் உடனே ரத்துச் செய்ய வேண்டும்,
இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் உடனே பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்,
குறைந்தபட்ச கூலி சட்டத்தை அமல்படுத்தி தினக் கூலியாக ரூ.650 முன் தேதியிட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஏஐடியூசி தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.சந்திரகுமார், மாவட்ட பொருளாளர் தி.கோவிந்தராஜன், மாவட்டச் செயலாளர்கள் துரை.மதிவாணன், ஆர்.பி.முத்துக்குமரன், மாநகர செயலாளர் ஆர்.பிரபாகர், ஆதித் தமிழர் பேரவை மாவட்ட இளைஞர் பேரவை பொறுப்பாளர் பிரேம்குமார் நிவாஸ், விசிறி சாமியார் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பினர்.
பின்னர், தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமாரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் வழங்கினர்.