மனநல மருத்துவமனையில் முளைத்த காதல் ! 🧐😱

எவிடன்ஸ் கதிர்

0

மனநல மருத்துவமனையில் முளைத்த காதல்

சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மனரீதியான பாதிப்பிற்கு உள்ளான தன் தாயார் தேன்மொழியை கடந்த 2021 டிசம்பர் மாதம் உள்நோயாளியாக சிகிச்சைக்காக சேர்த்த சரண்யா கூடவே இருந்து தன் அம்மாவை பார்த்துக் கொண்டார். சரண்யாவிற்கு வயது 27. பிஎஸ்சி நர்சிங் படித்திருப்பவர். தன் அம்மாவிற்கு அருகாமையில் உள்ள படுக்கையில் பரமேஸ்வரி என்கிற பெண்மணியும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு உறுதுணையாக அவரது மகன் மோகன் இருந்துள்ளார். சரண்யாவும் மோகனும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி நட்புடன் பேசி பழகி காதலிக்க தொடங்கியுள்ளனர்.

இருவரது காதலும் அம்மாக்களின் சிகிச்சைக்காக வந்த மனநல மருத்துவமனையில் ஆரம்பித்திருக்கிறது. ஐந்து மாத கால சிகிச்சை. இரண்டு அம்மாக்களும் நன்கு தேறிவர அவர்களது காதலும் நேசத்துடன் வளர்ந்திருக்கிறது.

- Advertisement -

- Advertisement -

இரண்டு வீட்டிலும் பெரிய எதிர்ப்பும் இல்லை. மோகனுக்கு உடன் பிறந்தவர்களும் இல்லை, தந்தையும் இல்லை. சரண்யா வின் மூத்த அண்ணன் சக்திவேல் இக்காதலுக்கு உடன்பட மறுத்தார். ஆகவே சங்கடங்களை தவிர்க்க இருவரும் 09.06.2022 அன்று காஞ்சிபுரம் அருகாமையில் துர்க்கையம்மன் கோவிலில் திருமணம் செய்திருக்கின்றனர்.

இந்நிலையில் விருந்திற்கு அழைக்கப்பட்டிருந்த மோகனும் சரண்யாவும் கடந்த 13.06.2022 அன்று சரண்யாவின் மூத்த அண்ணன் சக்திவேல் மற்றும் அவரது மைத்துனர் ரஞ்சித் ஆகியோரால் அரிவாளால் வெட்டி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.  சரண்யா பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்தவர். மோகன் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இது சாதி ஆணவக் கொலை என்று ஒரு தரப்பினரும் இது ஆணாதிக்க ஆணவ கொலை என்று மற்றொரு தரப்பினரும் இன்னும் சிலரோ இது குடும்பரீதியான கொலை என்றும் கூறி வருகின்றனர். இந்த கொலையை எப்படி பார்க்க வேண்டும் என்பதை பிறகு பார்க்கலாம். முதலில் என்ன நடந்தது என்பது குறித்து எவிடன்ஸ் அமைப்பு சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டது.

கும்பகோணம், சோழ புரம் அருகில் உள்ள துலுக்கவெளி கிராமத்தைச் சேர்ந்த சேகர்-தேன்மொழி தம்பதியருக்கு சக்திவேல், சதிஸ், சரவணன் ஆகிய மகன்களும், சரண்யா என்கிற மகளும் உள்ளனர்.

மூன்று மகன்களுக்கும் திருமணம் ஆகியுள்ளது. இரண்டாவது மகன் சதிஸ் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மகள் சரண்யா சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வந்திருக்கிறார்.  மூத்த அண்ணன் சக்திவேலின் மனைவி அபிநயா. இவரது தம்பிதான் ரஞ்சித். இவருக்கு சரண்யாவை திருமணம் செய்து வைக்க சக்திவேலும் அவரது மனைவியும் விரும்பியிருக்கின்றனர்.

இந்த புரிந்துணர்வு அடிப்படையில் ரஞ்சித்தும் சரண்யாவும் பழகி வந்துள்ளனர். ஒருகட்டத்தில் ரஞ்சித்தின் நடத்தையும் சேர்க்கையும் சரியில்லை என்று சரண்யாவின் குடும்பத்தினருக்கு தெரிய வருகிறது. இளைய அண்ணனும் தம்பியும் சரண்யாவிடம் நீ ரஞ்சித்தை திருமணம் செய்து கொள்ள வேண்டாம். அவனது சேர்க்கை சரியில்லை. தவறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறான் என்று கூறியிருக்கின்றனர். சரண்யாவிற்கும் ரஞ்சித்தின் மோசமான நடவடிக்கை பிடிக்கவில்லை. அதனால் அவரிடம் பேசுவதை சரண்யா தவிர்த்து வந்துள்ளார். இதனால் மூத்த அண்ணன் சக்திவேலுக்கும் அவரது தம்பிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடும் இருந்து வந்துள்ளது.

ரஞ்சித்தின் குடும்பத்தினர் சக்திவேலிடம் உன் தங்கச்சியை ரஞ்சித் விரும்புகிறான். அவளைத் தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுத்துள்ளனர். இதற்கிடையே மோகனிடம் நட்பு ஏற்பட சரண்யா அவரை காதலித்து வந்துள்ளார்.

4 bismi svs

இந்த காதல் விவகாரம் சரண்யாவின் குடும்பத்தினருக்கு தெரிய வர அவரது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இளைய அண்ணனும் தம்பியும் உன் விருப்பப்படி திருமணம் செய்து கொள். நீ நன்றாக இருக்க வேண்டும். ஆனால் உன் திருமணத்தில் நாங்கள் கலந்து கொண்டால் அண்ணன் சக்திவேலுக்கு பிடிக்காது. இதனால் தேவையில்லாத பிரச்சனை ஏற்படும் என்று கூறியிருக்கின்றனர்.

கடந்த 12.05.2022 அன்று சரண்யாவின் தாத்தா கலியபெருமாள் இறந்தபோது ஊருக்கு வந்த சரண்யாவை மறுநாள் 13.5.2022 அன்று இளைய அண்ணனும் தம்பியும் அவசர அவசர மாக ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர். தன் தங்கையை அண்ணன் சக்திவேல் வலுக்கட்டாய மாக ரஞ்சித்திற்கு திருமணம் செய்து வைத்து விடுவார் என்கிற பதட்டத்தில் தான் அவசரப்படுத்தியிருக்கின்றனர்.

இளைய அண்ணன் சதிஸ், தம்பி சரவணன் ஆகிய இருவரும் திருப்பூரில் வேலை பார்க்கின்றனர். இந்த நிலையில் தான் 09.06.2022 அன்று சரண்யாவிற்கும் மோகனுக்கும் திருமணம் நடந்துள்ளது.  திருமணம் நடந்ததை அறிந்த சக்திவேலும் அவரது மனைவியும் சரண்யாவை அலைபேசியில் அழைத்து, “உன் மீது கோபம் இல்லை. உன் பெயரில் நகை அடகு வைத்திருக்கிறோம். அதை மீட்க வேண்டும். உனக்கும் மோகனுக்கும் விருந்து வைக்க வேண்டும் வாருங்கள்..” என்று அழைத்துள்ளனர். அதனடிப்படையில் தான் 13.06.2022 அன்று காலை 8.00 மணியளவில் துலுக்கவெளி கிராமத்திற்கு சரண்யாவும் மோகனும் சென்றுள்ளனர்.

சரண்யாவை அழைத்துக் கொண்டு கும்பகோணம் சென்ற சக்திவேல் நகையை மீட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார். வீட்டில் அவரது மனைவி, அப்பா, அம்மா ஆகியோர் இருந்துள்ளனர். தம்பிகள் இருவரும் திருப்பூரில் இருந்துள்ளனர். மதிய விருந்து முடிந்த பிறகு பிற்பகல் 3.00 மணியளவில் சரண்யாவும் மோகனும் ஊருக்கு கிளம்ப வீட்டைவிட்டு வெளியே வந்துள்ளனர். அப்போது சக்திவேல் வீட்டை தாழ்ப்பாள் போட்டுவிட்டு, நீங்கள் எப்படி ஊரைவிட்டு கிளம்புவீர்கள் என்று பேசிக் கொண்டே அலைபேசியில் ரஞ்சித்திற்கு அழைப்பு விடுக்க அடுத்த ஒரு நிமிடத்தில் ரஞ்சித் அங்கே வந்துள்ளான். நிலைமை தீவிரமடைவதை அறிந்த சரண்யாவின் பெற்றோர் வீட்டிலிருந்து ‘ஒன்றும் செய்யாதே’ என்று கத்தியிருக்கின்றனர்.

ரஞ்சித்தும் சக்திவேலும் மோகனை கழுத்தில் வெட்ட மோகன் அதே இடத்தில் இறந்து போகிறார். தப்பித்து ஓட முயற்சித்த சரண்யாவை விரட்டிச் சென்று கொடூரமான முறையில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

மனரீதியாக பாதிக்கப்பட்ட மோகனின் அம்மா தற்போது யாரும் இல்லாமல் தனித்து விடப்பட்டிருக்கிறார். சரண்யாவின் தந்தை எங்களிடத்தில், “என் சரண்யா மகள் மட்டுமல்ல.. அவள் சாமி. என் மனைவியை 5 மாதம் மருத்துவமனையில் வைத்து காப்பாத்தி கொண்டு வந்தவ. அவளுக்கு பிடித்த வாழ்க்கையை அவள் தேர்ந்தெடுத்துக் கொண்டாள். எங்களுக்கு அதில் எந்த வருத்தமும் இல்லை. மச்சினன் பேச்சை கேட்டுக் கொண்டு அவனோடு சேர்ந்து என் மகளை கொன்றுவிட்டானே சக்திவேல்” என்று கதறினார்.

இளைய அண்ணனும் சதிசும், தம்பி சரவணனும் எங்களிடத்தில், “இது என் தங்கையின் முடிவு. அவளது திருமண முடிவு சரியானதுதான். என் அண்ணன் சக்திவேலின் மனதை மாற்றி என் தங்கையை ரஞ்சித் கொன்றுவிட்டான்” என்று கூறினார்கள்.  மோகனின் உறவினர்களான பாலஅருண், ரவிகோபால் ஆகிய இருவரும், மோகன் தன் வாழ்நாள் முழுவதும் தன் அம்மாவிற்காக வாழ்ந்தான். மிகவும் அமைதியான இளைஞன். இந்த குடும்பத்தில் இப்போது யாரும் இல்லை என்பது வருத்தமளிக்கிறது என்று பகிர்ந்து கொண்டனர்.  இது அப்பட்டமான ஆணாதிக்க ஆணவப்படுகொலைகள். சாதி, ஆணாதிக்கம், வர்க்கம் மூன்றும் பின்னிபிணைந்திருப்பவை. ஆயினும் சரண்யா – மோகன் திருமணத்திற்கு எதிராக சாதிரீதியான நேரடி வன்மம் இல்லை. அதே நேரத்தில் ஆணாதிக்கம் என்கிற அடிப்படையில் அதன் கூறுகள் உள்ளடக்கி இருப்பதையும் நாம் பார்க்க வேண்டும். இந்த ஆணவப் படுகொலையை மற்ற ஆணவப் படுகொலையோடு ஒப்பிட முடியாது.

தலித்துகள் மீதும் அல்லது தலித்துகளை விரும்புகிற பெண்கள் மீதும் பெண்களின் குடும்பத்தினர் நடத்தப்படுகிற ஆணவப் படுகொலையில் ஒட்டுமொத்த குடும்பமும், உறவினர்களும் சாதி ஆதரவு என்கிற நிலையில் இருந்து இத்தகைய வன்மத்தை நடத்தியிருப்பார்கள். இந்த படுகொலையில் நேரடியாக சாதி இல்லை என்றாலும் இது ஆணவக்கொலைகள் தான். ஒரு பெண்ணின் இணைந்து வாழக்கூடிய அல்லது திருமணம் செய்து கொள்ளும் முடிவிற்கு எதிராக குறுக்கீடு செய்தாலோ அல்லது வன்முறையில் ஈடுபட்டாலோ அவை ஆணவக் குற்றங்கள் என்று தான் பார்க்க வேண்டும். இதில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது.

ஆணவக் கொலை என்பது பெரும்பாலும் சாதி ரீதியாகத்தான் நடத்தப்படுகிறது. அதே நேரத்தில் ஆணாதிக்கம், வர்க்கம், அந்தஸ்து, பாலினம், இனம், மொழி, தொழில், எல்லை போன்ற காரணங்களின் உட்கூறுகளையும் கொண்டது. இப்படி பரந்துபட்ட அர்த்தத்தில் தான் ஆணவக் குற்றங்களின் வரையறை உள்ளது.  மற்ற ஆணவக் கொலைகளுக்கு கள்ள மௌனம் காத்துவிட்டு, தலித்துகள் நடத்துகிற ஆணவக்கொலையில் மட்டும் குரல் கொடுப்பது, ஒருவிதமான சாதிய மனநிலை தான். அதே நேரத்தில் இவற்றை ஆணவக் கொலையாக பார்க்க முடியாது என்று தலித் தரப்பில் சொல்வது ஏற்புடையதல்ல. எல்லா நிலையிலும் ஆணாதிக்கம் புரையோடிக் கிடக்கிறது. ஆகவே இவற்றை பெண்ணின் நிலையில் இருந்தும் பார்க்க வேண்டும்.  சிலர் இத்தகைய கொலைகளை நியாயப்படுத்தி வருவது வேதனை அளிக்கிறது. கொல்லப்பட்டது ஒரு தலித் பெண், அதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். யார் கொல்லப்பட்டாலும் நாம் குரல் கொடுக்க வேண்டும். அதை கடந்து சமூகத்தின் கடைசி விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய ஒரு தலித் பெண்ணை, அவரது குடும்பத்தினரே கொல்வதை அனுமதிக்க முடியாது.

இதுபோன்ற ஆணவக்கொலைகளை கண்டிப்பது நாம் ஒவ்வொருவரின் கடமை. இதில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது. தனித்துவிடப்பட்ட மோகனின் தாயாருக்கு நாம் என்ன சொல்லப்போகிறோம்?  மகளை இழந்த தந்தை சேகருக்கும், தாயார் தேன்மொழிக்கும் எப்படி ஆறுதல் சொல்வது? தலித்துகள் என்றாலே சாதி அற்றவர்கள் தான். ஆனால் நம்மையும் சாதி வட்டத்திற்குள் கொண்டு வர சதி நடக்கிறது. இந்த சதியின் கருத்தியல் நிலைப்பாட்டையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  ஒன்று மட்டும் உண்மை. சரண்யாவும் மோகனும் இப்போது இல்லை.

-எவிடன்ஸ் கதிர்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.