அய்யயோ இந்தப் பக்கம் வந்துராதீங்க ! மு.க. அழகிரி ஆதரவாளர்களுக்கு ரெட் கார்டு !
திமுகவில் ஐக்கியமாக காத்திருக்கும் அழகிரி ஆதரவாளர்கள் ! கண்டுகொள்ளாத கட்சித் தலைமை – அய்யயோ இந்தப் பக்கம் வந்துராதீங்க ! மதுரையில் அ-னா ஆதரவாளர்களுக்கு ரெட் கார்டு ! ஆட்டத்துல சேர்த்துக்கிற மாட்றாங்க … அய்யயோ இந்தப் பக்கம் வந்துராதீங்க … அனல் பறக்கும் மதுரை பாலிடிக்ஸ் !
ஒரு காலத்தில் மத்திய இணையமைச்சர் பதவியில் இருந்தபோது, ஆட்சியிலும் கட்சியிலும் தனக்கென தனிசெல்வாக்குடன் கோலோச்சியவர் மு.க. அழகிரி. கட்சிப்பஞ்சாயத்து, குடும்ப பஞ்சாயத்து காரணங்களால் குடும்பத்திலிருந்தும் கட்சி – அரசியல் செயல்பாட்டிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்தவர், கடந்த ஆண்டு தனது பிறந்தநாளின் போது, கோபாலபுரம் சென்று தாயார் தயாளு அம்மாளை சந்தித்து சமாதானப் புறா பறக்கவிட்டிருந்தார்.
இந்நிலையில், பல்வேறு காரணங்களால் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டும், ஒதுங்கியுமிருந்த ’அ’ – னா ஆதரவாளர்களான உடன்பிறப்புகள் சிலர் மீண்டும் கட்சியில் ஐக்கியமாக தூது அனுப்பியிருக்கிறார்கள். தலைமையில் தலை அசைத்தும், லோக்கல் பாலிடிக்ஸ் பார்ட்டிகள் சிலர் முட்டுக்கட்டையாக நிற்பதாக விசனப்படுகிறார்கள் அ – னா ஆதரவாளர்கள்.
என்னதான் பிரச்சினை ? என்ற கேள்வியோடு, மதுரை மாநகர் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர், வடக்கு, கவுன்சிலர், மண்டலத் தலைவர் இசக்கி முத்துவை அங்குசம் சார்பில் சந்தித்து பேசினோம்.
“எனக்கு தற்போது 77 வயதாகி விட்டது. தலைவர் கலைஞரின் கையால் பல பரிசுகளை பெற்றிருக்கிறேன். போராட்டம், மறியல், ஜெயில் தண்டனை கட்சிக்காக நிறைய சந்தித்திருக்கிறேன். 1986 இல் அப்போதைய மாநகர் மாவட்ட செயலாளர் தாவூது தலைமையில் மதுரையில் முதன்முறையாக திமுக தலைமை கழகத்திற்காக சொந்த கட்டிடத்தை கட்டினோம். அப்போதைய மேயர் முத்துதான் இந்தக் கட்டிடத்தை திறந்து வைத்தார்.தொடக்கத்தில் நான் வட்டச் செயலாளர் பொறுப்பில் ஆரம்பித்து படிப்படியாக, கவுன்சிலர், மண்டல தலைவர், மாநகர் மாவட்ட துணை செயலர் என பல பொறுப்புகளை வகித்திருக்கிறேன். அண்ணன் அழகிரியின் தீவிர ஆதரவாளர் என்ற என்னையும் என்னுடன் கட்சிப்பணியில் பயணித்தவர்களையும் புறக்கணித்துவிட்டனர். ஆனாலும், இன்று வரை நாங்கள் கட்சிப் பணியில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.
தற்போதுகூட, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எனது புதூர் ஏரியாக்களில் உள்ள பொதுமக்களிடம் நான் திமுகவுக்காக மதுரை மாநகர் மாவட்ட கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெங்கடேசனின் வெற்றிக்காக களப்பணியாற்றியிருக்கிறோம்.
அப்போது தான், அண்ணன் அழகிரி என்னை அழைத்து, ”சென்னையில் ஆர்.எஸ்.பாரதியை நேரில் சென்று சந்தித்து விட்டு வா” என்றார். நானும் ஆர்.எஸ்.பாரதியை நேரில் சந்தித்து சில விசயங்களை பரிமாறிவிட்டு வந்தேன். அதன்படி, ”மார்ச்-22 அன்று மதுரைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக முதல்வர் வரும்போது, அழகிரியின் ஆதரவாளர்களை திரட்டி கட்சியில் இணைத்துக்கொள்ளுங்கள்” என்றார். மதுரைக்கு முதல்வர் வந்தார். ஆனால், எங்களுக்கு அழைப்பு மட்டும் வரவில்லை. ஆர்.எஸ்.பாரதியிடமும் மீண்டும் பேசினோம். முதல்வரிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்றார். ஆனால், இப்போது வரை எந்த தகவலும் வரவில்லை. வேதனையாக இருக்கிறது.” என விரக்தியோடு பேசுகிறார், இசக்கி முத்து.
இவர்களுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக சொல்லப்படும் மற்றொரு தரப்பினரிடம் பேசினோம். ” உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சராக அழகிரி இருந்தபோது மதுரையில் அழகிரியின் ஆதரவாளர்கள் என்ற பெயரில் தென் மாவட்டம் முழுவதையும் கையில் வைத்துக் கொண்டார்கள். தற்போது திமுக ஆட்சி நடப்பதால் அழகிரி ஆதரவளர்கள் இந்த பொறுப்பு கொடு அந்த வேலை காண்ட்ராக்ட் கொடு என கட்டாயப்படுத்துவார்கள். இது சரிபட்டு வராது. மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு இருக்கும் நல்ல பெயரை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை.” என்கிறார்கள் தடாலடியாக, பெயர் வெளியிட விரும்பாத அந்தக் கட்சி நிர்வாகிகள்.
என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை என்பது போல, அதிரடி அரசியலுக்குப் பேர் போன அழகிரிக்கு வந்த சோதனை என அவரது ஆதரவாளர்களை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது, இந்த விவகாரம்.
ஷாகுல், படங்கள் : ஆனந்த்.