அதிரடி காட்டும் மதுரை மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை !
நான்கு பாட்டில்களுக்கு மேல் எவர் ஒருவர் இருப்பு வைத்திருந்தாலும், அதனை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து வருகிறோம். மதுரையில் கஞ்சா எந்த வழியில் வருகிறது? எப்படி விநியோகிக்கப்படுகிறது? அதன் நெட்ஒர்க்கை கண்டறிந்து ...
அதிரடி காட்டும் மதுரை மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை !
வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக வைத்திருந்த கிலோ கணக்கிலான போதைப் பொருட்களை டெல்லியில் கைப்பற்றப்பட்டது; பொதுவில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் பயன்பாடு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திவரும் நிலையில், போதைப்பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு போலீசார் தரப்பில் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில் சென்னையிலிருந்து செங்கோட்டை நோக்கி பயணித்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரையில் மடக்கி, பல கோடி மதிப்பிலான கிலோ கணக்கிலான போதை பொருளை கைப்பற்றியிருந்தனர்.
இந்நிலையில், மதுரை மாநகர் மற்றும் புற நகரங்களில் அதிகமாக கஞ்சா மற்றும் போலி மது பாட்டில்கள் அதிகமாக புழங்குவதாக கிடைத்த தகவலையடுத்து, மதுரை காவல் ஆணையர் லோகநாதன் வழிகாட்டுதல் மற்றும் உத்தரவின் அடிப்படையில் மதுரை மதுவிலக்கு போலீசார் அதிரடியாக 32 கிலோ கஞ்சாவை கைப்பற்றியிருப்பது, மதுரையில் அடுத்த அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரை மதுவிலக்கு காவல் ஆய்வாளர் சேதுமணி மாதவன் தலைமையில், 3 எஸ்.ஐ.க்கள், 2 எஸ்.எஸ்.ஐ மற்றும் காவலர்கள் என 15 பேர் அடங்கிய சிறப்புக்குழுவினர் மதுரையில் பல்வேறு இடங்களில் நடத்திய அதிரடி சோதனையில் 32 கிலோ கஞ்சா, 9 டூவீலர்கள், ஆட்டோ, ரொக்க பணம் 70,000/- ப்ளாக்கில் வைக்கப்பட்ட மது பாட்டில் – 63 லிட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
கஞ்சாவை பாக்கெட் போட்டு சிகரெட் ஆக மாற்றி விற்பது எப்படி என்பதை ஆன்லைன் மூலம் ஆராய்ந்து அதற்கான உபகரணங்களை கொண்டு கஞ்சா சிகரெட்டாக மாற்றி விற்பணையில் ஈடுபட்டதாக, மதுரை கீரைத்துறை வாழைத் தோப்பைச் சேர்ந்த மதன் மற்றும் அவரது தாயாரை கைது செய்து சிறையிலடைத்திருக்கிறார்கள்.
மதுரை மதுவிலக்குத்துறையின் ஆய்வாளர் சேதுமணி மாதவன், இதற்கு முன்னர் மதிச்சியம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்தபோது, அவரது எல்லைக்குள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக, அடையாளம் கண்ட குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் அடைப்பது உள்ளிட்டு பல்வேறு அதிரடிகளை காட்டியவர் என்கிறார்கள்.
“மதுரையில் 92 அரசு மதுபானக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர, மற்ற நேரங்களில் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபடுபவர்களை தொடர்ச்சியாக கண்காணித்து சரக்குகளை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கையை மேற்கொள்கிறோம். நான்கு பாட்டில்களுக்கு மேல் எவர் ஒருவர் இருப்பு வைத்திருந்தாலும், அதனை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து வருகிறோம். மதுரையில் கஞ்சா எந்த வழியில் வருகிறது? எப்படி விநியோகிக்கப்படுகிறது? அதன் நெட்ஒர்க்கை கண்டறிந்து கடும் நடவடிக்கையை எடுத்து வருகிறோம் என்கிறார்.” மதுவிலக்கு ஆய்வாளர் சேதுமணி மாதவன்.
– ஷாகுல் படங்கள் ஆனந்த்