பள்ளி வினாத்தாள் பெயரில் கட்டணக்கொள்ளை சர்ச்சையில் சி.இ.ஓ.! ( CEO )
வினாத்தாள் பெயரில் கட்டணக்கொள்ளை சர்ச்சையில் மதுரை சி.இ.ஓ.!
மதுரை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்கான வினாத்தாளுக்காக என்று கட்டணம் வசூலித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு ஏற்கெனவே பொது வினாத்தாள் நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர் களைப் பொறுத்தமட்டில் மாவட்ட அளவில் வினாத்தாட்கள் தயாரிக்கும் நடைமுறைக்கு மாற்றாக, SCERT மூலம் அனுப்பி வைக்கப்படும் பொது வினாத்தாளை அந்தந்த பள்ளிகள் அளவிலேயே தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதற்கேற்ப, பிரிண்டர்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.
ஆனாலும், SCERT மூலம் அனுப்பி வைக்கப்படும் வினாத்தாளை தரவிறக்கம் செய்து பயன்படுத்துவதற்கு பதிலாக, தனியே மாவட்ட அளவில் வினாத்தாள் அச்சிட்டு விநியோகிக்கும் நடைமுறையை பின்பற்றுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டிருப்பதுதான் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.
6,7,8 வகுப்புகளுக்கு 60 ரூபாய்; 9,10 வகுப்புகளுக்கு 80 ரூபாய்; 11, 12 ஆம் வகுப்புகளுக்கு 100 ரூபாய் என மாணவர்களிடமிருந்து வசூலித்திருக்கிறார்கள். வினாத்தாளுக்கான கட்டணத்தை செலுத்துவதற்கு வசதியாக வங்கி கணக்கு விவரங்களையெல்லாம் அக்கறையாக தெரிவித்தவர்கள், அதே அக்கறையை SCERT அனுப்பி வைக்கும் வினாத்தாளை தரவிறக்கம் செய்து பயன்படுத்துவதில் ஏன் காட்டவில்லை என்ற கேள்வியை எழுப்புகிறார்கள், கல்வியாளர்கள்.
இதுதொடர்பாக, மதுரை சி.இ.ஓ. கார்த்திகாவை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்தோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. வினாத்தாள் அச்சிட்டு வழங்கும் காண்ட்ராக்ட்காரர்கள் தரும் கமிஷனுக்கு ஆசைப்பட்டுத்தான் இந்த நடைமுறையை பின்பற்றுவதாக குற்றஞ்சாட்டுகிறார்கள். பள்ளிக்கல்வித்துறை தலையிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா?
வீடியோ லிங்:
– ஷாகுல், படங்கள் ஆனந்த்
கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களில் உள்ள மெல்ல கற்கும் மாணவர்களின் நலன் கருதி அம்மாணவர்களின் நிலைக்கேற்ப அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் எளிமையான வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை தாங்களே அச்சிட்டு வழங்கி அம்மாணவர்களை கல்வியில் முன்னேற செய்கின்றனர்,இதில் எந்த உள்நோக்கத்தையும் கற்பித்து மிகக் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கும் முதன்மை கல்வி அலுவலர்களை இழிவு செய்ய வேண்டாம்.