மதுரை மீனாட்சியம்மன் கோவில்…!சித்திரை திருவிழா திருத்தேரோட்டம்…!
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா ஏப்ரல் 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு தினமும்காலை, மாலை வேளைகளில் சுவாமி- அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக்விஜயத்தை தொடர்ந்து சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
இதனை தொடர்ந்து விழாவின் முத்தாய்ப்பாக இன்று காலை திருத்தேரோட்டம் தொடங்கியது. திருத்தேரோட்டத்தை முன்னிட்டு கீழமாசி வீதியில் உள்ள தேரடி பகுதிக்கு மீனாட்சி அம்மனும் சுந்தரேசுவரர் பிரியாவிடை சமேதராக கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வந்தடைந்தனர். அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான பெரிய தேரில் சுந்தரேஸ்வர் பிரியாவிடை சமேதராகவும், சிறப்பு அலங்காரத்திலும், மீனாட்சியம்மன் சிறிய தேரிலும் சிறப்பு அலங்காரத்திலும் எழுந்தருளினர்.
காலை 6.30 மணிக்குபல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஹர ஹரசங்கர மீனாட்சிசுந்தரர் என்ற பக்தி முழக்கத்தோடு சுவாமி அம்மன் தேர்களை வடம் பிடித்து இழுக்க தொடங்கினர். கயிலாயவாத்தியங்கள்,முழங்க,சங்கொலிவிண்ணைப்பிளக்க பிரமாண்டமாக திருத்தேரோட்டம் நடைபெற்று வருகிறது.
சிவ பக்தர்கள் ருத்ராட்சையால் ஆன சிவலிங்கத்தை தோளில் சுமந்த படியும், பெண் சிவ பக்தர்கள் கயிலாயவாத்தியங்கள்,சங்குகளை ஊதியபடி திருத்தேரின் முன்பாக செல்கின்றனர். சுவாமி, அம்மனின் திருத்தேர்களானது மதுரை நகரவீதிகளான கீழமாசி வீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி,வடக்குமாசி வீதிகளில் வலம் வரவுள்ளது.இதன் காரணமாக மாசி வீதிகள் முழுவதும் பல்லாயியரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
தேரோட்டத்தை காண மதுரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ள நிலையில் மதுரை மாநகரகாவல் துறை சார்பில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சீருடை அணியாத காவல் துறையினர் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு மாசி வீதிகள் முழுவதிலும் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாசி வீதிகளில் உயரமாக செல்லும் மின்வயர்கள் தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர ஊர்திகள் பாதுகாப்பிற்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 4மாசி வீதிகளிலும் தேரோட்டத்தை முன்னிட்டு மதுரை மாநகர மே விழாக்கோலம் பூண்டுள்ளது.








Comments are closed, but trackbacks and pingbacks are open.