எசகுபிசகா ஏலத்தை ஏற்றிவிட்டு கம்பி நீட்ட பார்த்த ஆசாமி ! சிறையில் தள்ளிய மதுரை போலீசார் !
எசகுபிசகா ஏலத்தை ஏற்றிவிட்டு கம்பி நீட்ட பார்த்த ஆசாமி ! சிறையில் தள்ளிய மதுரை போலீசார் !
தமிழ் திரைப்படம் ஒன்றில், நடிகர் பயில்வான் ரங்கநாதனுடன் கமிஷனுக்காக ஏலம் எடுத்துக் கொடுக்கும் ஏஜெண்டாக வருவார் நகைச்சுவை நடிகர் வடிவேலு. பத்து பத்து பைசாவாக ஏலத்தை ஏற்றிவிட்டு எட்டு இலட்சத்தில் நிறுத்திவிட்டு பதறாமல் விலகி செல்வார் நடிகர் பார்த்திபன். அந்தக்கதையாக, பாக்கெட்டில் பத்து பைசா கூட இல்லாமல் ஏலத்தில் பங்கேற்றதோடு, 19 கோடியே ஒரு இலட்சத்துக்கு ஏலத்தொகையை ஏற்றிவிட்ட நபரை அலேக்காக தூக்கி சிறையில் தள்ளியிருக்கிறார்கள் மதுரை போலீசார்.
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலப்பாதுகாப்பு சட்டத்தின் கீழான சிறப்பு நீதிமன்றத்தின் C.C.06/2019 என்ற வழக்கில் கைப்பற்றப்பட்ட சொத்துக்கள் தொடர்பான ஏலத்தில்தான் இந்தக்கூத்து நடைபெற்றுள்ளது. சென்னை மதுரை உயர்நீதிமன்றக்கிளை உத்தரவின் கீழ் முறையான பத்திரிகை விளம்பரம் எல்லாம் கொடுத்து மதுரையில் கடந்த 18.08.2023 அன்று ஏலமும் நடைபெற்றது. அந்த ஏலத்தில், கன்யாகுமரி மாவட்டம், கோழிப்போர்விளை – செல்வமணித் தோட்டத்தைச் சேர்ந்த தா.ஜெயசந்திரசேகர் என்பவரும் பங்கேற்றிருக்கிறார்.
ஏலம் ஆரம்பித்ததிலிருந்து, நடிகர் பார்த்திபனும் வடிவேலுவும் போட்டி போட்டுக்கொண்டு ஏலத்தை ஏற்றி கேட்டதைப்போலவே, இவரும் ஏலத்தொகையை படிப்படியாக ஏற்றிவந்திருக்கிறார். ஒருகட்டத்தில் போனால் போகிறதென்று, 19 கோடியே ஒரு இலட்சத்தில் ஏலத்தொகையை நிறுத்தியிருக்கிறார். ஏல நடைமுறையின்படி, இறுதி செய்யப்பட்ட ஏலத்தொகையிலிருந்து 25% கட்டணத்தை உடன் செலுத்த வேண்டும். பாக்கி, 75% தொகையை செப்டம்பர் -01 ஆம் தேதிக்குள் செலுத்தி பொருளை பெற்றுக்கொள்ள வேண்டும். அதன்படி, 25% தொகையான, 4 கோடியே 75 இலட்சத்து 25 ஆயிரத்தை கட்டச் சொல்லி கேட்டிருக்கிறார்கள். அப்போதுதான், கையில் ஒன்றுமில்லை ராசா என்பதை போல, பாக்கெட்டை பிதுக்கி காட்டியிருக்கிறார்.
வேலைவெட்டி இல்லாமலா, பணம் செலவு பண்ணி பத்திரிகையில விளம்பரம் கொடுத்து, இம்பூட்டு பேரு கூடி இந்த ஏலத்தை நடத்திட்டிருக்கோம்… பிக்காலி பயலேனு … மதுரை பாஷையில் வஞ்சியதோடு, அண்ணாநகர் உதவி காவல் ஆணையர் சூரக்குமார் உத்தரவின் பேரில், அண்ணாநகர் சட்டம் ஒழுங்கு சார்பு ஆய்வாளர் சுபா கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார், ஜெயசந்திரசேகர்.
”இது சாம்பிள்தான், கவர்மெண்டு ஏலத்துல இதெல்லாம் சகஜம்தான். ஏலம் எடுக்கிறதவங்களே அவங்களுக்குள்ள சிண்டிகேட் அமைச்சிக்கிறது. முதல் முறை ஏலம் விடுறப்போ, சொல்லிவச்ச மாதிரி எசகுபிசகா ஏத்திவிடுறது. ஏலம் கேட்டவன் காசு கட்டமாட்டான். திரும்ப ஏலம் அறிவிப்பு வரும். முதல் அனுபவத்தை வச்சி அதவிட கம்மியா ஏலத்தொகையை தீர்மானிப்பாங்க. இல்லையா, சத்தம் போடாம பெயருக்கு பத்திரிகையில விளம்பரத்த கொடுத்துட்டு கமுக்கமா முடிச்சிட்டு போயிடுவாங்க.”னு சொல்கிறார்கள் ஏல நடைமுறையின் உள்விவரம் அறிந்தவர்கள்.
எது, எப்படியோ? அடுத்த முறை எவனாவது, இந்தமாதிரி குண்டக்க மண்டக்க ஏலத்தை ஏத்திவிட நினைச்சா கம்பி எண்ண வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கையை கொடுத்திருக்கிறார்கள், மதுரை போலீசார்!
– ஷாகுல்.