கொளுத்தும் வெயிலில் இப்படி வதைக்கலாமா?
”நூறுநாள் வேலை” என்று பரவலாக அறியப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை, வி.பி.ராம்ஜி திட்டம் என்று பெயர் மாற்றம் பெற்றிருக்கிறது. உத்தரவாதமான வேலை நாட்களை 125 ஆக உயர்த்தியும்; 15 நாட்களுக்குள் சம்பளம் வழங்கப்பட வேண்டுமென்றும்; தவறும்பட்சத்தில் இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் திருத்தங்களை மேற்கொண்டிருக்கிறது.
இத்திட்டத்தின் கீழ் வாய்க்கால்கள் வெட்டுதல், ஏரி குளங்கள் தூர்வாறுதல், மரம் கன்றுகள் நடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சில முறைகேடுகள் நடைபெறுவதாக பரவலாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், களத்திலிருந்து புகைப்படம் பிடிப்பது, பயோமெட்ரிக் பதிவை கட்டாயமாக்குவது உள்ளிட்டு வழிமுறைகளை கடைபிடித்து வருகிறார்கள்.
பெரும்பாலும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் வயதானவர்களும் பெண்களும் பங்கேற்கிறார்கள். முறைகேடுகளை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் இவர்களை உடலளவிலும் மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்திவருவதாக குற்றஞ்சாட்டுகிறார்கள். குறிப்பாக கொளுத்தும் வெயிலிலும்கூட, வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். குறிப்பாக தஞ்சை மாவட்டம், பூதலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கூத்தூர் ஊராட்சியில் விசுவநாதன் என்பவரின் மனைவி தேவகி என்பவர் வெயில் கொடுமை தாளாது மயங்கி உயிரிழந்தார். புதுக்குடி முத்தண்ணன் மகன் ராஜாங்கம் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இத்தகைய நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு, வெயில் – மழை காலங்களில் சூழலுக்கு தகுந்தாற்போல வேலை நேரத்தை மாற்றியமைத்து நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை முன் எழுந்திருக்கிறது. பரிசீலிக்குமா, அரசு?
தஞ்சை க.நடராசன்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.