ஜெம் வீரமணி : பேச்சா? செயல்பாடா? பார்க்கலாம் !
ஆகஸ்ட் 19 – போக்சோ நீதிமன்றம் மறு விசாரணைக்கு உத்தரவு. ஆகஸ்ட் 29 – ஜெம் வீரமணி கைதாகிறான். செப்டம்பர் 21 – ஜெம் வீரமணி பற்றி TVK அமைச்சர்கள் பேசுகிறார்கள். ஜெம் வீரமணி பற்றி அனைத்து ஊடகங்களும் பேசுகிறார்கள். மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரையில் CM விஜய் இந்த வழக்கு பற்றி பேசப்போகிறார் என்றும் தகவல்.
சரி, ஜெம் வீரமணி கைது செய்யப்பட்ட போட்டோ, வீடியோ ஏன் வெளியாகவில்லை? ஜெம் வீரமணி வீட்டில் சோதனை செய்த போட்டோ, வீடியோ ஏன் வெளியாகவில்லை? ஜெம் வீரமணியின் தற்போதைய போட்டோ ஏன் வெளியாகவில்லை? ஜெம் வீரமணியை காவல்துறை விசாரணைக்கு எடுத்தார்களா? சம்பவ இடங்களுக்கு அழைத்துச் சென்றார்களா? காவல் நிலைய விசாரணை நடந்ததா? அந்த போட்டோ, வீடியோ ஏன் வெளியாகவில்லை?

சாதாரணமாக ஒருவன் சிக்கினாலே டிசைன் டிசைனாக போட்டோ போட்டு சித்தரிக்கப்பட்ட காட்சிகளை போலீஸ் துணையோடு வெளியிடுவார்களே, ஜெம் வீரமணி ஹிஸ்டரி ஏன் வெளியாகவில்லை? போக்சோ வழக்கின் விசாரணை ரகசியம் காக்கப்பட வேண்டும்.
அப்போதுதான் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித்தர முடியும். ஆனால், போலீஸின் அடுத்தடுத்த நகர்வுகள் யூடியூபர்ஸ் மூலம் வெளியாவது ஏன்? பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி பெற்றுத்தர வேண்டும்.

ஆனால், அருண் IPS Vs அமல்ராஜ் IPS; DMK Vs TVK ; சமுத்ரா மைன்ஸ் Vs ஜெம் கிரானைட்ஸ் – என்று வழக்கை அரசியல்படுத்தினால் விசாரணை பாதிக்கும். பரபரப்பாக பேசுவார்கள். பரபரப்பாக பேசப்பட்ட பல வழக்குகள் நீதி கிடைக்காமல் நீர்த்துப் போய்விட்டன. ஆட்டோ சங்கர் வழக்கில் கூட அவனுக்கு மட்டுமே தூக்கு கிடைத்தது. 2003, 2019 ஆம் ஆண்டின் குற்றங்களுக்கு 2026 இல் தீர்வு கிடைக்குமா? பார்க்கலாம்.
2006 இல் உத்தரப் பிரதேசம் நொய்டா அருகே ஜெம் வீரமணி போல், தொழிலதிபர் மோனிந்தர் சிங் சிக்கினான். 19 சிறுமிகளின் எலும்புக் கூடுகள் ஆதாரங்களாக கிடைத்தன. மோனிந்தர் சிங் வீட்டு வேலையாள் சுரேந்தர் கோலிக்கு தூக்கு தண்டனை கிடைத்தது. மேல் நீதிமன்றம் விடுவித்தது. விடுதலையாகி வெளியே வந்து இயல்பு வாழ்க்கைக்கு வந்தவன் கடந்தவாரம் ஏனோ, தானே செத்துப் போனான். இந்தியா முழுக்க மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட வழக்கு அது.

டெல்லி நிர்பயா வழக்கு விசாரணை விவரங்கள் வெளிவராமல் தண்டனை கிடைத்தது. சமீபத்தில் விளாத்திகுளம் சிறுமி வழக்கில் கூட விசாரணை சத்தமின்றி நடந்து விரைவான நீதி கிடைத்தது. ஆகவே, விசாரணை செய்யுங்கள். கைது நடக்கட்டும். தண்டனை கிடைக்கட்டும். வீண் பரபரப்பு இடைத்தேர்தலுக்கு உதவலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாது.
பொள்ளச்சி சம்பவம் பேசப்பட்டதால் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், இவ்வழக்கில் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டு விட்டான். இனி போலீஸ் அமைச்சர் CM விஜய் கைகளில் நடவடிக்கையும், செயல்பாடும் உள்ளது.
பேச்சா? செயல்பாடா? பார்க்கலாம். ஜெம் வீரமணி கூட்டாளிகள் அவன் மகன் சித்தார்த் கூட்டாளிகள் எவனா இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள். பெண் குழந்தைகளைப் பெற்றவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவாரா CM விஜய்?
கப்பிகுளம் ஜெ.பிரபாகர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.