‘மார்க்’கிற்கு எத்தனை மார்க் கிடைக்கும்?
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் கன்னட ஹீரோ கிச்சா சுதீப், மற்றும் நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா, ரோஷிணி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மார்க்’. இந்த கிறிஸ்துமஸ் வெளியீடாக வரவிருக்கும் இந்தப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு டிச.15- ஆம் தேதி மாலை சென்னையில் நடந்தது.
சிறப்பு விருந்தினர்களான தயாரிப்பாளர்கள் தனஞ்செயனும் சுரேஷ் காமாட்சியும் வாழ்த்திப் பேசிய பிறகு பேசிய படக்குழுவினர்….
நடிகர் குரு சோமசுந்தரம்,
“கன்னட சினிமாவில் மிகப்பெரிய ஹீரோ சுதீப்புடன் மிகப்பெரிய கமர்ஷியல் படத்தில் அறிமுகமாவது மகிழ்ச்சி. படத்தில் எனக்கு மிக நல்ல கதாபாத்திரமும் ஸ்டைலிஷான காஸ்ட்யூமும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் விஜய். நடனமும் ஆடியிருக்கிறேன்”.
இயக்குநர் விஜய் கார்த்திகேயா,
“இந்த மேடையில் நான் இருக்க முக்கிய காரணமே சுதீப் சார்தான். அவர் போன்ற பெரிய நடிகருடன் இரண்டாவது முறை படம் செய்வது எளிது கிடையாது. அவருடன் வேலை செய்வது என் சகோதரருடன் பணிபுரிவது போல இருக்கும். ’மேக்ஸ்’ படத்திற்கான சீக்வல் செய்ய ஒன்றும் இல்லை. அதனால், வேறு கதை என்று யோசித்தபோது சுதீப்பின் நகைச்சுவை பக்கத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தோன்றியது. அதை ‘மார்க்’ படத்தில் பார்ப்பீர்கள். சுதீப் ரசிகர்களுக்காகவே எழுதிய கதை இது. நிச்சயம் படம் அவர்களுக்குப் பிடிக்கும். இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாங்கள் மூன்றாவது முறை இணையவும் வாய்ப்பிருக்கிறது. அதை காலமும் சூழலும் முடிவு செய்யும்”.
யோகிபாபு,
“நான் சினிமாத்துறைக்கு வந்து 22 வருடங்கள் ஆகிறது. வளர்ச்சி வந்தால் பிரச்சினைகளும் கூடவே வரும் என்பார்கள். அதுபோலத்தான் என் மீது சுமத்தப்படும் பல பழிகளும். இந்தப் படத்தில் பணிபுரிந்தது நல்ல அனுபவம். படத்தில் கிச்சா சுதீப் சார் நிறைய விஷயங்கள் எனக்கு சொல்லிக் கொடுத்தார். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது”.
தீப்ஷிகா,
“இப்படம் எங்களுக்கு அற்புதமான அனுபவத்தை கொடுத்தது. சுதீப் சார் எங்களுக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தார். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.
ரோஷிணி,
“சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா சுதீப் போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து பணிபுரிந்தது மகிழ்ச்சி. இந்தப் படம் நன்றாக வர வேண்டும் என எல்லோரும் உழைத்திருக்கிறோம்”.
கிச்சா சுதீப்,
“மார்க் படத்திற்காக சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்திருப்பது பெருமையான விஷயம். நிச்சயம் அதற்கான அவுட்புட்டை திரையில் பார்ப்பீர்கள். கதை சொல்லுதல், புது காட்சிகள், நடிகர்களின் நடிப்பு என எல்லாவற்றிலும் வெரைட்டியை பார்வையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதற்கேற்ற பணியை இந்தப் படத்தில் செய்திருக்கிறோம் என நம்புகிறேன். விஜய் கார்த்திகேயாவின் கதை, இயக்கம் எனக்குப் பிடிக்கும். அதனால்தான் அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். எங்க செட்டிலேயே பயங்கர பிஸியான நடிகர் என்றால் யோகிபாபுதான். இன்ஸ்டால்மெண்ட்டில் வந்து நடித்துக் கொடுப்பார். நடிகர்கள் நாங்களாவது அவ்வப்போது ஓய்வெடுத்தோம். ஆனால், இந்தப் படத்திற்காக இரவு பகல் பாராமல் கடினமாக உழைத்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் இயக்குநர், மற்றொருவர் ஒளிப்பதிவாளர். படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்”.
— ஜெ.டி.ஆர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.