கோவில்பட்டியில் காணாமல் போன ஐந்தாம் வகுப்பு சிறுவன் சடலமாக மீட்பு !
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்திக் முருகன். இவரது மனைவி பாலசுந்தரி. இவர் தீப்பெட்டி ஆலையில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு மணிகண்டன், கருப்பசாமி என்ற 2 மகன்கள் உள்ளனர்.
மணிகண்டன் அங்குள்ள நகராட்சி பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். அதே பள்ளியில் கருப்பசாமி 5ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கருப்பசாமிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் கடந்த சில தினங்களாக பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
திங்கட்கிழமை காலையில் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட, சகோதரன் பள்ளிக்கு சென்று விட கருப்பசாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மேலும், சிறுவன் கருப்பசாமி கழுத்தில் ஒன்றை பவுன் தங்க செயின் மற்றும் கையில் 1கிராம் தங்க மோதிரம் அணிந்து இருந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வீட்டில் இருந்த சிறுவன் மாயமாகியுள்ளார். இதையடுத்து சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை எனவே, கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசாரும் அப்பகுதிக்கு விரைந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்தும், அங்குள்ள வீடுகளில் சோதனையும் நடத்தி சிறுவனை தேடி வந்தனர்.
இதையடுத்து மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் சிறுவனை தேடி வந்த நிலையில் இன்று காலையில் சிறுவன் வீடு அருகே இருந்த பக்கத்து வீட்டு மாடியில் மயக்கம் அடைந்த நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் சிறுவன் இறந்து விட்டதாகவும், இறந்து பல மணி நேரம் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நேற்று காலையில் காணாமல் போன சிறுவன் பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.
— மணிபாரதி.