அப்படிலாம் உங்களை விட்ர மாட்டோம்ணா…
திருமாவளவன் தனித்து நிற்க வேண்டும் என பலமுறை ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார். ஏன் தனித்து நிற்கக் கூடாது என திருமாவளவன் பலமுறை பல சந்தர்ப்பங்களில் விளக்கம் கொடுத்துள்ளார். ஆனால் ரஞ்சித் அதையெல்லாம் கேட்பதாகவே இல்லை. ஏனென்றால் அவர்தான் பரிசுத்தமான கொள்கை குன்றல்லவா?
உச்சகட்டமாக, ஆர்ம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான ஆர்ப்பாட்டத்தில், திருமாவளவனை ஒரு துரோகி ரேஞ்சில் வைத்து “அண்ணா… தைரியமா இருங்கண்ணா… அப்படிலாம் உங்களை விட்ர மாட்டோம்ணா…” என்று ரஞ்சித் பேசியதை மறக்கவே முடியாது. அதாவது அவர் தனித்து வர வேண்டுமாம். இவர் விட்டுவிடமாட்டாராம்!

இன்று பாருங்களேன். கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் பாஜக கூட்டணிக்கு ஓட்டு கேட்டுக்கொண்டிருக்கிறார். ஏன் பொற்கொடியை தனித்து நிற்கச் சொல்ல வேண்டியதுதானே?
ரஞ்சித்தின் காலா படத்தில் வில்லன் கேரக்டர் வருமே ஹரி தாதா என்று, அந்த ஹரி தாதாவின் கூட்டணிக்குதான் இன்று ரஞ்சித் ஓட்டு கேட்டுக்கொண்டிருக்கிறார்.
நான் எப்போதும் சொல்வதுதான். மனிதனைப் போலவே அவன் சட்டங்களும் திட்டங்களும் சிக்கல்கள் நிறைந்தவை. அதில் இடர்பாடுகள் இருக்கும், சமரசங்கள் இருக்கும்.

உள்ளதில் ஒப்பீட்டளவில் எது நல்லதோ அதைத்தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர, அப்பழுக்கற்ற பரிசுத்தமான ஒன்றைத் தேடிப்போனால் அழிந்தே போவோம். ஏனென்றால் அப்படி ஒன்று மனித சமூகத்தில் இருந்ததும் இல்லை, இனி இருக்கபோவதும் இல்லை.
அதனால்தான், அப்பழுக்கற்ற அரசியலையே ஒரு லட்சியமாக மாற்றி அதை இளைஞர்களிடம் விற்கத் துடிக்கும் தூய்மைவாதிகள் மிக மிக ஆபத்தானவர்கள். கட்சிக்காரர்களைவிடவும் தூய்மைவாதிகள் இந்த சமூகத்திற்கு ஆபத்தானவர்கள். தூய்மைவாதிகளால் செழித்து வளர்வது எப்போதுமே பாஜக போன்ற வலதுசாரிகள்தான்.
அன்னா ஹசாரேவில் இருந்து பா.ரஞ்சித் வரை இது பொருந்தும். இது தொடரும். விழித்துக்கொள்ள வேண்டியது இளைஞர் கடமை.
— டான் அசோக் R








Comments are closed, but trackbacks and pingbacks are open.