அங்குசம் பார்வையில் ‘திரு.மாணிக்கம்’ திரைப்படம்
தயாரிப்பு : ஜி.பி.ஆர்.கே.சினிமாஸ்’ ரேகா ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ராஜா செந்தில். டைரக்ஷன் : நந்தா பெரியசாமி. நடிகர்—நடிகைகள் : பாரதிராஜா, சமுத்திரக்கனி, அனன்யா, நாசர், இளவரசு, வடிவுக்கரசி, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், கிரேஸி, கருணாகரன், சாம்ஸ், ஸ்ரீமன், சந்துரு. ஒளிப்பதிவு : எம்.சுகுமார், இசை : விஷால் சந்திரசேகர், எடிட்டிங் : குணா. ஸ்டண்ட் : தினேஷ் காசி, காஸ்ட்யூம் : ஆர்.முருகன். பி.ஆர்.ஓ. சதீஷ் [ எய்ம் ]
மனைவி சுமதி [ அனன்யா], இரண்டு பெண் குழந்தைகளுடன் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மாணிக்கம் [ சமுத்திரக்கனி ] குமுளியில் சிறிய அளவில் லாட்டரிக்கடையுடன் வள்ளுவன் படிப்பகமும் நடத்துகிறார். இதில் இளைய பெண் குழந்தைக்கு வாய் பேச முடியாது. பேச்சு வரவைக்க சில லட்சம் செலவாகும் என டாக்டர்கள் கூறுகிறார்கள்.
வாழ்க்கைத் தேவைகளுக்காக வாங்கிய கடன் கழுத்தை நெரிக்கும் போது, லாட்டரிக் கடையையும் காலி செய்ய வேண்டிய நிலை. புதிய கடைக்கு அட்வான்ஸாக இரண்டு லட்சம் கொடுக்க வேண்டிய நெருக்கடி. இந்த நேரத்தில் மாதவ பெருமாள் [ பாரதிராஜா ] என்ற பெரியவரின் மகளை கட்டிக் கொடுத்த இடத்தில் வரதட்சணை கேட்டு, கர்ப்பிணியான அவளை துரத்திவிடுகிறான் புருஷன்காரன்.
மகளின் நிலையை எண்ணி ரொம்பவே கவலை கொள்கின்றனர் மாதவ பெருமாளும் அவரது மனைவி கற்பகமும் [ வடிவுக்கரசி ]. மனம் வெறுத்த நிலையில் குமுளி பஸ்ஸ்டாண்டில் உட்கார்ந்திருக்கும் மாதவபெருமாள், மாணிக்கத்திடம் மூன்று லாட்டரிச் சீட்டு வாங்குகிறார். வாங்கிய பின் தான் தெரிகிறது, வேட்டியில் முடிந்து வைத்திருந்த பணத்தைக் காணவில்லை என்று.
பணத்தைக் கொடுத்துட்டு வாங்கிக்கிறேன் எனச் சொல்லிவிட்டு ஊருக்கு கிளம்பிவிடுகிறார் மாதவபெருமாள். அவர் வாங்கி வைத்திருந்த லாட்டரி ஒன்றிற்கு ஒன்றரைக் கோடி ரூபாய் பரிசு விழுகிறது. மாதவபெருமாள் சொன்ன கண்ணீர்க் கதையைக் கேட்ட மாணிக்கம், அந்த லாட்டரியை அவரிடமே கொண்டு சேர்க்க கிளம்புகிறார்.
ஆனால் மனைவி சுமதி, அவரின் பெரியப்பா இளவரசு, தம்பி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் மாணிக்கத்தைப் போக வேண்டாம் போனில் கதறுகிறார்கள். வாய் பேச முடியாத பெண் குழந்தையை மாணிக்கத்திடமே திக்கித்திணறி பேச வைக்கிறார்கள்.
அதனால் மாணிக்கம் மனம் தடுமாறினாரா? இல்ல, அந்த மாதவ பெருமாளிடம் லாட்டரியைக் கொடுத்தாரா? என்பதை நேர்மைத்திறத்துடன் சொல்லியிருப்பது தான் இந்த ‘திரு.மாணிக்கம்’.
சமுத்திரக்கனிக்கு ரொம்பவும் பொருத்தமான சட்டை தான் இந்த மாணிக்கம் என்ற கேரக்டர். மற்ற சினிமாக்களைப் போல காட்சிக்கு காட்சி கருத்துக்களை அள்ளித் தெளிக்காமல், நேர்மையாக வாழ்வது தான் மனித இயல்பு என்பதை பஸ்ஸில் பயணிக்கும் சீன்களில் தனது நடிப்பால் வெளிப்படுத்தியிருக்கார் கனி.
“நான் ஏன் இவ்வளவு நேர்மையாக இருக்கேன்” என வாய் பேச முடியாத தனது இளைய மகளிடம் போனில் இஸ்லாமியர் நாசருடனான தனது இளமைக்கால ஃப்ளாஷ்பேக்கைச் சொல்லும் போது உருக வைக்கிறார் சமுத்திரக்கனி. இதனால் மனசுக்குள் ‘ஹனி’[ தேன்] யாக இனிக்கிறார். இவரின் மனைவியாக அனன்யா நடுத்தர வர்க்கத்தின் குடும்பத் தலைவியாக கணவனுக்கு ஆதரவாக நிற்பது, லாட்டரி மேட்டரில் ஆற்றாமையை வெளிப்பட்டுத்துவது என நிறைவாகவே நடிச்சிருக்கார்.
மாதவ பெருமாளாக வரும் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் நிஜத் தோற்றமே அந்த கேரக்டருக்கு இயல்பாக பொருந்தி, க்ளைமாக்ஸில் சமுத்திரக்கனியிடம் “ ஆளுக்குப் பாதி “ என சொல்லும் ஏழைகளின் இயல்பான குணத்தை தூக்கிப் பிடித்துள்ளார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அனன்யாவின் பெரியப்பாவாக வரும் இளவரசு, பாதிரியாராக வரும் சின்னி ஜெயந்த், பஸ் டிரைவர்களாக வரும் சாம்ஸ், ஸ்ரீமன், போலீஸாக வரும் கருணாகரன் என அனைவருக்குமே அங்கங்கே நல்ல வாய்ப்புக் கொடுத்துள்ளார் டைரக்டர். லண்டன் ரிட்டர்னாக தம்பி ராமையா கேரக்டர் வலிந்து திணிக்கப்பட்டுள்ளதால் எரிச்சலைத் தான் கிளப்புகிறது.
”ஏய் பொம்மக்கா…” பாடல் மனசுக்குள் ரீங்காரமிடுகிறது. கேரள பகுதிகளில் கதை நடப்பதால் அடிக்கடி செண்டை மேளத்தை பின்னணி இசையாக்கியுள்ளார் விஷால் சந்திரசேகர். ஆனால் அதுவே சில நேரங்களில் நமக்கு அன்னியமாகிப் போய்விடுகிறது. “பொழக்கிறது வேற, வாழ்றது வேற”, இப்பல்லாம் நேர்மையாக இருக்கிறத கொண்டாடுற பழக்கத்துக்கு வந்துட்டோம்”, ”உழைச்ச காசு ஒட்டுனா போதும்” போன்ற வசனங்களும் திருக்குறள், கம்யூனிசம் போன்ற குறியீடுகளும் இயக்குனர் நந்தா பெரியசாமியின் பலம்மிக்க அடையாளங்கள்.
‘திரு.மாணிக்கம்’ மனித மனங்களின் கசடுகளை நீக்கி ஜொலிக்க வைக்கும்.
— மதுரை மாறன் .