தருமபுரி மாவட்ட திமுக அரசியலில் மிக முக்கியமான நபராக வலம் வந்த முல்லைவேந்தன், அதே திமுகவிற்கு எதிராக அதிமுக சார்பில் களமாட கொம்பு சீவப்பட்டு களம் இறக்கப்பட இருக்கிறார் என்பது தான் இப்போது தர்மபுரி மாவட்டத்தின் ‘ஹாட் டாபிக்’ அரசியல் செய்தி.
1989, 1996, 2006 என 3 சட்டமன்ற தேர்தல்களில் மொரப்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் முல்லைவேந்தன். 1996-ல் கருணாநிதி அமைச்சரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராகவும் இருந்தார். இந்நிலையில் ஒகேனக்கல் பகுதியில் அறநிலையத்துறை அதிகாரி ஒருவரை அவரது ஆதரவாளர்கள் தாக்கிய புகாரில் சிக்கியதால் 2001ல் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு திமுகவில் இறங்குமுகம் தொடங்க ஆரம்பித்தது.
2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், தருமபுரி தொகுதி யில் திமுக படுதோல்வியடைந்தது. தோல்விக்கான காரணம் கேட்டு திமுக தலைமை அனுப்பிய நோட்டீஸிற்கு முறையாக பதில் அளிக்காத காரணத்தால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலும் இருந்தும் நீக்கப்பட்டார்.
சிறிது காலம் அமைதியாக இருந்தவர் 2016-ம் ஆண்டு தேமுதிகவில் தன்னை இணைத்துக் கொண்டார். ஆனாலும் அங்கு நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாமல் மீண்டும் திமுக வில் தன்னை இணைத்துக் கொண்டார். என்றாலும் அவருக்கு கட்சியில் எந்த பொறுப்பும் வழங்கப்படாமல் டம்மியாகவே வைக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்தார். தர்மபுரியில் 5 தொகுதியில் அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். ஐந்திலும் அதிமுக வெற்றி பெற்றது. இப்படியான முன்கதை சுருக்கத்தை கொண்டிருக்கும் முல்லைவேந்தனின் ‘அரசியல் ப்ரைம் டைம்’ அதிமுகவில் ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த ஏப்ரல் 5ம் தேதி தமிழகம் முழுக்க அதிமுக சார்பில், சொத்துவரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தர்மபுரியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முல்லைவேந்தன் வழக்கம் போல், அதாவது திமுகவில் இருந்த போது அதிமுகவை எப்படி நாலாந்தர வார்த்தைகளால் வறுத்தெடுத்தாரோ அதே பாணியில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை வறுத்தெடுத்தார்.
“தருமபுரி மாவட்ட திமுகவில் ஆண்மை யுடையவர்கள் யாரும் இல்லை என்பதால் தான் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இந்த மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார். துபாய்க்கு மகன், மருமகன், மருமகள், மனைவி என அனைவரையும் அழைத்துக் கொண்டு குடும்ப சுற்றுலா சென்றார் ஸ்டாலின்” என ஸ்டாலினை பல இடங்களில் ஒருமையில் அவன், இவன் என பேசியதோடு தரம்தாழ்ந்த வார்த்தைகளையும் பயன்படுத்தி பேசியுள்ளார்.
இந்த பேச்சு தர்மபுரி மாவட்ட திமுகவினருக்கு எரிச்சலை கிளப்ப, தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் கட்சி நிர்வாகிகள், “முதலமைச்சரை ஒருமையில் பேசிய முல்லைவேந்தன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி” தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பலர் மீதும் சொத்து குவிப்பு வழக்கு, வருமானவரித்துறை ரெய்டு, கைது உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களை தொடுக்கும் திமுகவை எதிர்த்து துணிச்சலாக பேசக்கூடிய நபர்கள் யாரும் அதிமுகவில் தற்போது இல்லை என்பது தான் உண்மை நிலை. பத்திரிக்கையாளர்களை தேடித்தேடி பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த ஜெயக்குமாரும் வழக்கு, கைது என சிக்கியதில் அமைதியாகிவிட்டார். இந்நிலையில் தான், “திமுகவை எதிர்த்து பேசக்கூடிய நபராக முல்லைவேந்தன் இருக்கிறார்” என அதிமுகவைச் சேர்ந்த பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பி னர் கோவிந்தசாமி, அதிமுக தலைமைக்கு ஐடியா கொடுக்க, ‘முல்லைவேந்தனை தயார் செய்யும் பணியை தொடங்குங்கள்’ என கோவிந்தசாமிக்கு பச்சை கொடி காட்டியுள்ளது அதிமுக தலைமை.
தற்போதைக்கு, திமுகவில் சீனியர்களுக்கு மரியாதை இல்லை என்பதான சூழலில், திமுகவினருடனும் ஸ்டாலினுடனும், பல ஆண்டுகள் நெருக்கத்தில் இருந்த முல்லை வேந்தனிடம், திமுக தலைமையை விமர்சிக்கவும், சீனியர்களை சீண்டவும் ஏராளமான விஷயங்கள் இருக்கும். மேலும் தற்போதைய திமுகவில் செந்தில் பாலாஜி, சேகர்பாபு போன்ற அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு தரப்படும் முக்கியத்துவம் கூட திமுக சீனியர்களுக்கு தரப்படுவதில்லை என்பதால் முல்லைவேந்தனின் பேச்சை திமுக சீனியர்கள் ரசிக்கவும் மறைமுக மாக ஆதரிக்கவும் செய்வார்கள் என்றே அதிமுக தலைமை கணித்துள்ளது. மேலும் அதிமுகவில் மக்களை கவரும் வகையில் திறமையான மேடைப் பேச்சாளர் எவரும் இல்லை.
தற்போதைக்கு அதிமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லாத முல்லைவேந்தனுக்கு கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கி, தமிழகம் முழுக்க பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து முல்லைவேந்தனை பேசச் செய்தால் அது தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என திட்டமிட்டுள்ளது அதிமுக தலைமை.
இது குறித்து திமுகவின் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினரும், முல்லைவேந்தனின் நண்பருமான தங்கமணியிடம் பேசிய போது, “கன்னியாகுமரி, கடலில் உள்ள வள்ளுவர் சிலை திறப்பில் உள்ள கல்வெட்டில் முல்லைவேந்தனின் பெயரும் உள்ளது. வரலாற்றில் நீங்கா இடம் கொடுத்த திமுகவிற்கு நன்றி விசுவாசமாக நடக்க வேண்டிய முல்லைவேந்தனின் செயல் முழுக்க முழுக்க நன்றி கெட்டத் தனம் என்று தான் சொல்வேன்.
சட்டமன்ற தேர்தலின் போது கட்சித் தலைமையிலிருந்து வந்த தேர்தல் நிதியில் 25 லட்சம் ரூபாய் குறைந்துள்ளதாக திமுக தலைமையிடம் புகார் அளித்தார் முல்லைவேந்தன். இந்த விஷயத்தை முன்வைத்தே, பணத்தை பட்டுவாடா செய்த எ.வ.வேலுவை ‘திருவண்ணாமலை திருடன்’ என விமர்சிப்பார். ஆனால் தமிழகம் முழுக்க எல்லாருக்கும் பணம் சரியாக இருந்த போது இவருக்கு மட்டும் எப்படி குறைந்தது. இதிலிருந்தே தெரிந்து கொள்ளுங்கள் யார் திருடன் என்று.
அதிமுகவின் மறைந்த கட்சித் தலைவியை, ஏழு வயதில் இளநி விற்றவள்.. வேசி என்றெல்லாம் பேசிய முல்லைவேந்தனுக்கு தான் இப்போது அதிமுகவில் முக்கிய இடம் வழங்க உள்ளார்கள். என்னே உணர்ச்சியற்ற செயல்” என்றார்.
“இப்படி இரண்டாம்தரமாக பேசும் ஒருவரை நீங்கள் அதிமுகவில் இணைப்பது சரியா” என மாவட்ட அதிமுக நிர்வாகி ஒருவரிடம் நாம் கேட்ட போது, “எடப்பாடியை பார்த்து, பிறப்பில் சந்தேகம் உள்ளது என ஆ.ராசா பேசியதைவிட முல்லைவேந்தன் ஒன்றும் தரம் தாழ்ந்து பேசவில்லை” என்றார். முல்லைவேந்தனுக்கு அதிமுக தலைமை கொம்புசீவிவிடும் தகவல் அறிந்த திமுக தலைமை, முல்லைவேந்தன் தற்போது நடத்தி வரும் அனுமதியற்ற குவாரி, க்ரஸர் தொழில் குறித்து தகவல் சேகரித்து நெருக்கடி கொடுக்க தயாராகிறது.