மாநகராட்சியின் அதிரடி அறிவிப்பு!
திருச்சி மாநகர பொதுமக்கள் தங்கள் கோரிக்கை, புகார்களை தெரிவிக்க மொபைல்ஃபோன் எண்களை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திருச்சி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி அறிக்கை: திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதற்காக மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
அதன்டி தற்போது பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க கோட்டம் வாரியாக தனித்தனி மொபைல்ஃபோன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரீரங்கம் கோட்டம் 76395-11000, அரியமங்கலம் கோட்டம் 76395-22000, பொன்மலை கோட்டம் 76395-33000, கோ.அபிஷேகபுரம் கோட்டம் 76395-44000 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு அந்தந்த கோட்ட மக்கள் புகார் தெரிவிக்கலாம்.
காலை 7 – இரவு 7 மணி வரை புகார் தெரிவிக்கலாம். குறிப்பாக பொதுமக்களின் மிக முக்கிய அத்தியாவசிய தேவையான குடிநீர் தேவை, தெரு விளக்கு பழுதுகள், திடக்கழிவு அகற்றுதல், பாதாள சாக்கடை அடைப்பு, பிறப்பு-இறப்பு சான்று பெறுதல், வரிகள் தொடர்பான புகார்கள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் உடனக்குடன் பதிவேடுகளில் பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்களால் நடவடிக்கை எடுக்கப்படும். புகார்கள் மீதான நடவடிக்கை விவரங்கள் அந்தந்த உதவி கமிஷனர்கள் மற்றும் மாநகராட்சி கமிஷனர் மூலம் ஒவ்வொரு நாளும் கண்காணிக்கப்படும். இந்த வசதிகளை மாநகராட்சி மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.