17,000 லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் உதவியாளர் கைது ! குளித்தலை பகீர்
இரண்டாம் நிலை பேரூராட்சியில் இருந்து முதல்நிலை பேரூராட்சி செயல் அலுவலராக பதவி உயர்வு பெற்று இன்று திண்டுக்கல் கன்னிவாடி பேரூராட்சிக்கு செல்ல இருந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் சிக்கிய செயல் அலுவலர் ராஜகோபால். மற்றும் அலுவலக உதவியாளர் சிவக்குமார்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் 2 ஆம் நிலை பேரூராட்சி செயல் அலுவலராக இருந்தவர் ராஜகோபால் வயது 45. இவர் திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதி பண்ணைக்காட்டை சேர்ந்தவர் ஆவார்.
இவர் தற்போது பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் 2 ஆம் நிலை பேரூராட்சி செயல் அலுவலராக இருந்து வந்தார்.
பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி அலுவலக உதவியாளராக இருந்தவர் சிவக்குமார் வயது 44. இவர் கரூர் அருகே உள்ள உப்பிடமங்கலம் வடக்கு கேட்டைச் சேர்ந்தவர் ஆவார்.

செயல் அலுவலர் ராஜகோபாலுக்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி முதல் நிலை பேரூராட்சி செயல் அலுவலராக பதவி உயர்வு பெறுவதற்கான ஆணை வந்துள்ளது.
இந்நிலையில் இன்று 12 ஆம் தேதி திங்கட்கிழமை மதியம் பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியிலிருந்து, கிளம்பி, திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி முதல் நிலை பேரூராட்சி செயல் அலுவலராக இன்று மாலை பொறுப்பு ஏற்ப்பதாக இருந்தார்.
இந்நிலையில், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பகுதி பூவம்பாடியை சேர்ந்தவர் குமரேசன். இவர் கரூரில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது வீட்டிற்கு வீட்டு வரி ரசீது கேட்டு பேரூராட்சி அலுவலகத்திற்கு கடந்த சில மாதங்களாகவே சென்று வந்ததாகவும்,
பேரம் பேசிய நிலையிலேயே இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அலுவலக உதவியாளர் சிவக்குமார் மூலமாக தூது அனுப்பிய செயல் அலுவலர் ராஜகோபால் 17 ஆயிரம் பணத்தை இறுதியாக கொண்டு வரும்படி கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத, குமரேசன் கரூர் வடிவேல் நகரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை நாடி உள்ளார்.
இதனை அடுத்து பவுடர் தடவிய ரூபாய் 17 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குமரேசனிடம் இன்று 12.08.2024 திங்கட்கிழமை காலை கொடுத்து அனுப்பினர்.குமரேசன் இன்று பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி அலுவலகத்திற்கு சுமார் 12 மணி அளவில் வந்தார்.
லஞ்ச பணத்தை பெறுவதற்காக அலுவலகத்தில் காத்திருந்த செயல் அலுவலர் ராஜகோபால் மற்றும் அலுவலக உதவியாளர் சிவக்குமார் ஆகியோர் பேரூராட்சி அலுவலகத்திலேயே காத்திருந்தனர்.

ஏற்கனவே கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி (பொ) திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில்,
இன்ஸ்பெக்டர்கள் சுவாமிநாதன், தங்கமணி ஆகியோர் அடங்கிய 10 க்கும் மேற்பட்ட போலீசார், இரண்டு கார்களில் வந்து, அலுவலகத்தை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் குமரேசன் லஞ்சப் பணம் ரூபாய் 17 ஆயிரத்தை செயல் அலுவலர் ராஜகோபால் மற்றும் உதவியாளர் சிவக்குமார் ஆகியோரிடம் கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர்.
இதனை அடுத்து அலுவலகத்தில் இருந்து யாரும் வெளியில் செல்லக்கூடாது என்ற போலீசார் அலுவலகத்தில் இருந்த அனைவரது செல் போன்களை வாங்கினர். அலுவலகத்தை பூட்டி இருவரிடமும் தொடர் விசாரணை மேற்கொண்ட நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பண்ணைக்காட்டு உள்ள செயல் அலுவலர் ராஜகோபாலின் வீடு மற்றும் உப்பிடமங்கலம் வடக்கு கேட்டில் உள்ள சிவக்குமார் வீடு ஆகியவற்றிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய நிலையில் இருவரிடமும்
தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் இரண்டாம் நிலை பேரூராட்சி செயல் அலுவலர் பதவியில் இருந்து முதல் நிலை பேரூராட்சி செயல் அலுவலர் பதவி உயர்வு பெற்று இன்று திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி முதல் நிலை பேரூராட்சியில் பொறுப்பேற்க இருந்த நிலையில் ராஜகோபால், ரூபாய் 17 ஆயிரத்திற்காக ஆசைப்பட்டு பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சியில் காத்திருந்து லஞ்சம் பெற்ற நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நௌஷாத்