முருகனும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும்… !
முருகனும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும்…
‘னும்’ என்ற எழுத்துகள் தலைப்பில் இருப்பதால் இரண்டு பெயர்களையும் ஒப்பிட்டு எழுதப்படும் கட்டுரை என நினைக்க வேண்டாம். முருகன் என்பது சங்க இலக்கியங்களில் முருகு என்ற பெயரில் இடம்பெற்றுள்ளது. அழகு என்ற அர்த்தம் அதற்கு உண்டு. மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத் தலைவரின் பெயர். அதனால் குன்றுகள் தோறும் கோயில் கொண்டிருப்பவர்.
குலதெய்வங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டு மக்களால் பெருமளவில் போற்றப்படுபவர். குறவர் சமூகத்தைச் சேர்ந்த வள்ளியைக் காதலித்து, போராடி, திருமணம் செய்து கொண்டவர். மயில் வாகனத்தில் உலகை சுற்றி வந்தவர். அவரை ஸ்கந்தன் என்றும் சுப்ரமணியம் என்றும் கார்த்திகேயன் என்றும் வேறு மொழிகளில் பெயர் மாற்றம் செய்தாலும் முருகன் என்ற பெயரே நிலையானது. அதுவே தமிழ்நாட்டின் அடையாளமாகத் திகழ்வது. தமிழர்களின் அடையாளங்கள் பலவும் ஆரியத்தால் வீழ்த்தப்பட்டது. பண்பாட்டுப் படை யெடுப்பு நிகழ்த்தப்பட்டது. வடமொழி ஆதிக்கம் அதிகமானது.
முருகன் உள்பட யாரும் தப்ப முடியவில்லை. கோயில்கள் தொடங்கி குடும்பங்கள் வரை இந்த ஆதிக்கம் பரவியது. இன்றும் நீடிக்கவே செய்கிறது. ஆரிய ஆதிக்கத்திற்கும் வேத பண்பாட்டிற்கும் எதிராகத் தமிழ்ப் பெருநிலப்பரப்பில் பல எதிர்ப்புக் குரல்கள் தோன்றியுள்ளன. வள்ளுவரின் குறள் ஓர் எதிர்ப்புக் குரல்தான். நாயன்மார்கள்-ஆழ்வார்கள் பாடியதிலும் அந்த எதிர்ப்புக் குரலைக் கேட்கலாம். சித்தர்கள் அமைதி வழிக் கலகக்காரர்கள். திருமூலர் எதிரியின் ஆயுதத்தை அடையாளம் கண்டு அதற்கேற்ற சரியான ஆயுதத்தை ஏந்திய போராளி. வள்ளலார் சித்தாந்தப் புரட்சியாளர். அய்யா வைகுண்டர் சளைக்காமல் போராடி வென்றவர். அயோத்திதாசர் மறுமலர்ச்சியை விதைத்தவர். இந்தப் பட்டியலில் இன்னும் பலர் உண்டு.
இத்தகைய எதிர்ப்பு மரபின் தொடர்ச்சியாக உருவானதுதான் திராவிட இயக்கம். ஆரியத்தை நேர் எதிர் நின்று ஜனநாயக வழியில் களம் கண்டது திராவிட இயக்கம். எவையெல்லாம் ஆரியத்தால் அடக்கப்பட்டதோ, எவரெல்லாம் ஆரியத்தால் ஒடுக்கப்பட்டார்களோ அவர்கள் பக்கம் நின்று, அடக்குமுறைகளை எதிர்கொண்டு, உரிமை மீட்பு இயக்கமாக செயல்பட்டது. திராவிடத்தின் முதல் அரசியல் இயக்கம் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனும் நீதிக்கட்சி.
பிரிட்டிஷ் இந்தியாவில் நடைபெற்ற தேர்தலில் வென்று குறைந்தபட்ச அதிகாரத்துடன் சென்னை மாகாணத்தில் அரசு அமைத்த நீதிக்கட்சிதான் முதன்முதலில் அரசு நிதியில் பள்ளிகளில் மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 1921ல் சென்னையில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், பிற்காலத்தில் மதிய உணவுத் திட்டமாக மாநிலம் முழுவதும் விரிவடைந்தது. அதன்பின் சத்துணவு, முட்டை யுடன் கூடிய சத்துணவு என வளர்ச்சிபெற்ற நிலையில், முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியில் காலை உணவுத் திட்டமும் தொடங்கப் பட்டுள்ளது. நீதிக்கட்சி ஆட்சியில்தான் பெண்களுக்கு முதன்முதலில் வாக்குரிமை அளிக்கப்பட்டது.
பிரிட்டிஷ் அரசுகூட தர முன்வராத இந்த உரிமையைத் தந்தது திராவிட இயக்கம். அதன் தொடர்ச்சியாக, பெண்களுக்கு சொத்துரிமை, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, சுயஉதவிக்குழுக்கள் என பெண்களுக்கான உரிமை மேலோங்கியது. அவர்கள் தற்சார்புடன் இருக்க வேண்டுமென்றால், சுயசம்பாத்தியம் வேண்டும். தயக்கமின்றி வெளியில் செல்ல வேண்டும். அதற்கு கட்டணமில்லா பேருந்து வசதி தந்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அரசுப் பள்ளி மாணவிகளின் உயர்கல்விக்கு புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஏழைகளுக்காக அரசு வழங்கும் வீடுகள் குடும்பத்தில் உள்ள பெண்களின் பெயர்களிலேயே பதிவு செய்யப்படும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
திராவிட அரசியல் இயக்கமான நீதிக்கட்சி ஆட்சியில், மாகாண அரசின் உரிமைகளுக்கான குரல்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டன. சமூக நீதிக்கானத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கல்வி, வேலைக்கான இடஒதுக்கீட்டு முறை உள்ளிட்ட நடைமுறைகள் செயல்பாட்டுக்கு வந்தன.
இந்திய அளவில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான மருத்துவக் கல்விக்கான மத்திய அரசு தொகுப்பில் உள்ள இடங்களில் உரிய இடஒதுக்கீடு கிடைப்பதற்கு சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டிருக்கிறார் தமிழ்நாட்டு முதலமைச்சர். இதனால், இந்தியா முழுவதும் ஓ.பி.சி. வகுப்பு மாணவர்களுக்கு பலன் கிடைத்துள்ளது. பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடியின் குஜராத்தில் உள்ள அவரது உறவுக்கார மாணவர்கள் மருத்துவப் படிப்பு சேர்வதற்கும் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் சட்டப் போராட்டம் துணை நின்றிருக்கிறது.
சட்டங்களை நிறைவேற்றுவதற்கு பிரிட்டிஷ் கவர்னர்களின் உத்தரவு தேவை என்ற நிலையில், அதற்கான வழிமுறைகளுக்காகத் தொடர்ந்து போராடியது நீதிக்கட்சி. சட்ட மன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக் களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம்கடத்தும் இன்றைய ஆளுநரின் வரம்புமீறல்களுக்கு எதிராக சட்டமன்றத் திலேயே தீர்மானம் கொண்டு வந்து, ஆளுநர் உரையின்போதே ஆளுநரை வெளியேற்றச் செய்த சம்பவக்காரராக இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு பெருமளவு நிதியுதவி அளித்தும், சூத்திரர் என்பதால் நீதிக்கட்சியின் தலைவர் பிட்டி.தியாகராயரை அன்றைக்கு கோயிலின் குறிப்பிட்ட பகுதிக்கு மேல் அனுமதிக்கவில்லை. நீதிக்கட்சி ஆட்சியில் அறநிலையச் சட்டம் கொண்டு வரப்பட்டு, கோயில் நிர்வாகம் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதே மயிலாப்பூர் கோயில் மண்டபத்தில் தனது ஆட்சியின் நூறாவது நாளில், சூத்திரர்-பஞ்சமர் என ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இன்றைய தலைமுறையினருக்கு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தின் கீழ் பணி நியமன ஆணை வழங்கி அமைதிப் புரட்சி ஏற்படுத்தியவர் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். கோயில் கருவறை வரை அவர்கள் செல்லும் அதிகாரம் கிடைத்துள்ளது. பெண்களும் கோயிலில் ஓதுவார்களாக நியமிக்கப்படும் காலம் மலர்ந்துள்ளது. ஆகமம் பயின்ற அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சனை செய்யலாம். ஆண்-பெண் பேதமின்றி கருவறை வரை திருப்பதிகங்களை ஓதலாம். முருகன் சன்னதியிலும் அதைக் கேட்கலாம்.
கோயிலிலிருந்து வெளியே வந்து தெருவில் நடந்தால் எங்கேனும் ஒரு ஸ்பீக்கர் சத்தம் கேட்கலாம். அதில் முதல்வர் ஸ்டாலினை யாரேனும் விமர்சிக்கலாம். செல்போனில் குவியும் வாட்ஸ்ஆப் குறுஞ்செய்தியில் அவரைக் கலாய்த்து மீம்ஸ் வெளியிடப்பட்டிருக்கலாம். பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் அரசின் மீதான அதிருப்தி குறித்த செய்திகள் வெளியாகியிருக்கலாம். அன்றன்றைக்கு அதைப் பார்த்துவிட்டு மக்கள் கடந்து விடுவார்கள். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினால் அப்படிக் கடக்க முடியாது.
அவருக்கு 70 வயது. 50 ஆண்டுகளுக்கு மேல் பொதுவாழ்வில் உள்ளவர். சிறையையும் கண்டவர். சிம்மாசனத்தையும் ஏற்றவர். விமர்சனங்களின் தன்மையை உணர்ந்து கொள்ளக்கூடியவர். எதை சரிசெய்ய வேண்டும். எதை அலட்சியப்படுத்த வேண்டும் என்பதுதான் இப்போது அவர் முன் உள்ள சவால். உடனடியாக கவனிக்கப்பட வேண்டியதும், உள்ளார்ந்த கவனம் செலுத்த வேண்டியதும் நிறைந்துள்ளன.
அதனால், அவர் எல்லாவற்றையும் உற்று நோக்கி செயல்படவேண்டியவர். ஓயாத உழைப்பாளி. களத்தில் நேரடியாக கவனம் செலுத்துபவர். கண்ணுக்குத் தெரியாமல் உள்ள பிரச்சினைகளையும் கண்டறிய வேண்டிய பொறுப்பில் இருக்கிறார். அவரது செயல்பாடுகளை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவே இன்று உற்றுநோக்கி எதிர்பார்ப்புடன் இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பு நிறைவேறும்போது, அவருக்கான பிறந்தநாள் பரிசு அற்புதமாக மலர்ந்திருக்கும்.
– திருமொழி