காற்றில் நிறைந்திருக்கிறது தேவா கானா எனும் தேவகானம் – கோவி.லெனின்

தமிழ்த் திரையிசைப் பயணத்தில் தேவாவின் தடம் -கோவி.லெனின்

தமிழ்த் திரையிசையில் யுகங்கள் உண்டு. ஜி.இராமநாதன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் ரவிச்சந்தர் என்று அது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இனியும் தொடரலாம். இதில் இரண்டு யுகங்களுக்கு நடுவே உருவாகி தனது தனித்தன்மையை நிலைநாட்டிய இசையமைப்பாளர்தான் தேனிசைத் தென்றல் தேவா.

ஹார்மோனியப் பெட்டியுடன் அவர் திரையுலகில் தனக்கான வாய்ப்பைத் தேடிக் கொண்டிருந்தபோது, திரையிசையில் இளையராஜாவின் கொடி உச்சத்தில் பறந்து கொண்டிருந்தது. தனக்கு முன்னதாகத் திரை இசையில் பிரபலமாகியிருந்த எம்.எஸ்.வி, கே.வி.மகாதேவன், சங்கர்-கணேஷ் போன்றவர்களைக் கடந்து இசைஞானி இளையராஜா ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருந்தார். சந்திரபோஸ், டி.ராஜேந்தர், எஸ்.ஏ.ராஜ்குமார், ஷ்யாம், சிவாஜிராஜா, கங்கை அமரன், வி.எஸ்.நரசிம்மன், மனோஜ்-கியான் (ஆபாவாணன்) உள்ளிட்ட பலர் இளையராஜாவின் சமகாலத்தில் திரை இசையில் தங்களுக்கான வாய்ப்புகளில் முத்திரை பதித்து வந்தனர். எஸ்.பி.பாலசுப்பிரமணியன், மலேசியா வாசுதேவன் போன்ற பின்னணிப் பாடகர்களும் சில படங்களுக்கு இசையமைத்தார்கள். இயக்குநர் பாக்யராஜ் போன்றவர்களும் இசையமைத்தார்கள்.

தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலிருந்து ரவீந்திரன், தேவேந்திரன், அம்சலேகா, ஆகியோர் தமிழ்த் திரைக்கு வந்தனர். இந்தி இசையமைப்பாளர்களான பப்பிலஹரி, ஆர்.டி.பர்மன், லஷ்மிகாந்த்-பியாரேலால் ஆகியோரும் சில தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தனர். இப்படிப்பட்ட 80களின் நடுப்பகுதியில்தான் ஹார்மோனியத்துடன் தனக்கான வாய்ப்பையும் இடத்தையும் தேடிக் கொண்டிருந்த தேவாவுக்கு 1986ல் மாட்டுக்கார மன்னாரு என்ற படத்திற்கு இசையமைக்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன்பே அவருக்குக் கிடைத்த படங்கள் வெளியாகாமல் நின்றுவிட்டன. வாகை சந்திரசேகர் கதாநாயகனாக நடித்த இந்தப் படத்தில் டி.எம்.எஸ்., சுசீலா, எஸ்.பி.பி, வாணிஜெயராம், எஸ்.ஜானகி ஆகியோரைப் பாட வைத்திருந்தார் தேவா.

இசை அமைப்பாளர் தேவா ஆர்மோனியம்
இசை அமைப்பாளர் தேவா ஆர்மோனியம்

கம்ப்யூட்டர் தொழில்நுட்ப இசையிலான புன்னகை மன்னன் உள்ளிட்ட படங்கள் வெளியான 1986ல், தேவாவின் இயல்பான இசை பெரிதாகக் கவனிக்கப்படவில்லை. படமும் சரியாக ஓடவில்லை. அடுத்த வாய்ப்புக்காக மீண்டும் முதலிலிருந்து தன் முயற்சியை மேற்கொண்டிருந்தார் தேவா. கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன்-கனகா நடித்த கரகாட்டக்காரன் படம் 1989ல் வெளியாகி சக்கைப் போடு போட்டது. அதற்கு முக்கியமான காரணம், இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல்கள்தான். ராமராஜனின் திரையுலக வாழ்க்கையில் அந்தப் படம் பெரும் திருப்பமாக அமைந்ததையடுத்து, தொடர்ச்சியாக அவருக்குப் பட வாய்ப்புகள் அமைந்தன.

ராமராஜன் படங்களுக்கு இளையராஜா இசைதான் முதன்மையானது. இளையராஜா இசையமைக்க நேரம் ஒதுக்காவிட்டாலோ-மறுத்துவிட்டாலோதான் மற்ற இசையமைப்பாளர்களை நாடுவார்கள். இசையமைப்பவர் யாராக இருந்தாலும் இசையும் பாடல்களும் இளையராஜாவின் சாயலிலேயே இருக்க வேண்டும் என்பதே தயாரிப்பாளர்-இயக்குநர்களின் விருப்பம் மட்டுமல்ல, கதாநாயகனான ராமராஜன் விரும்பியதும் அதைத்தான்.

1989 டிசம்பரில் ராமராஜன்-சீதா நடிப்பில், ‘மனசுக்கேத்த மகராசா’ என்ற படம் வெளியானது. பாடல்கள் பிரபலமாயின. பட்டிதொட்டியெங்கும் ராமராஜன் பாட்டு என்ற பெயரில் அவை ஒலித்தன. குறிப்பாக இரண்டு பாடல்கள் எல்லாரையும் ஈர்த்தன. ஒன்று, ஆறெங்கும் தானுறங்க.. ஆறுகடல் மீனுறங்க என்பதாகும். மற்றொன்று, ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே.. அந்தி சாயும் நேரத்திலே என்பதாகும்.

“பாட்டுன்னா இளையராஜாதான்” என்றனர் கேட்டவர்கள். ஆனால், அது இளையராஜா இசையில் உருவானவையல்ல. தேவா இசையமைத்த படம். 3 ஆண்டுகளாக செய்த முயற்சியின் நல்விளைவு. தமிழ்த் திரையுலகிற்குத் தேவா தேவைப்படத் தொடங்கினார். புதுத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், குறைந்த முதலீட்டில் படம் எடுப்பவர்கள், இளையராஜாவின் நேரம் கிடைக்காதவர்கள் எனப் பல தரப்பினரும் தேடிய மாற்று இசையமைப்பாளர்கள் வரிசையில் தேவா இடம்பெற்றார்.

தேவா - இளையராஜா
தேவா – இளையராஜா

நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக அறிமுகமான ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்திற்கு தேவாதான் இசை. அந்தப் படத்தில் அவரது பாடல்கள் பள்ளி மற்றும் கல்லூரிப் பருவத்தினரை ஈர்த்தன. தேவாவுக்கான ரசிகர் வட்டத்திற்குப் புள்ளி வைத்துத் தொடங்கிய படம் அது. வைகாசி பொறந்தாச்சு படத்திற்காக தமிழ்நாடு அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதினையும் பெற்றார் தேவா.

வேறுவேறு கதையம்சங்கள் கொண்ட படங்களில், காட்சியமைப்புக்கேற்ற இசையில் பாடல்களை மெட்டமைத்துத் தந்தார். சில பாடல்கள் இளையராஜா இசையமைத்த பாணியில் இருக்கும். சில பாடல்கள் இளையராஜாவின் மெட்டைத் தழுவியிருக்கும். எடுத்துக்காட்டாக, ‘எங்க ஊரு காவக்காரன்’ என்ற படத்தில், ‘ஆசையில பாத்தி கட்டி, நாத்து ஒண்ணு நட்டு வச்ச’ என்ற இளையராஜாவின் மெட்டின் சாயல் அப்படியே, ‘என் ஆசை மச்சான்’ படத்தில், ‘ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்சி’ என்ற தேவா இசையில் அமைந்த பாடலில் இருக்கும். எப்படி இருந்தாலும் பாட்டு ஹிட் ஆகிவிடும். படக்குழுவினருக்குத் தேவை அதுதான்.

“இளையராஜா பாணியிலேயே உங்க இசை இருக்கிறதே?” என்று பத்திரிகை நிருபர் கேட்டபோது, “தயாரிப்பாளரும் இயக்குநரும் சின்னதம்பி மாதிரி பாட்டுப் போடுங்கன்னு கேட்குறாங்க. அவங்க விருப்பத்தை நிறைவேத்துறேன்” என்று வெளிப்படையாகவே சொன்னார் தேவா. சின்னதம்பி படத்தின் இயக்குநர் பி.வாசு அதே கதநாயகர்களான பிரபு-குஷ்பு ஆகியோரை வைத்து இயக்கிய மற்றொரு படமான கிழக்குக் கரை படத்திற்கு இசை தேவாதான் என்பது அவரது இசையின் மீது படக்குழு வைத்த நம்பிக்கைக்கான சான்று.

தேவா -ஏ.ஆர். ரகுமான்
தேவா -ஏ.ஆர். ரகுமான்

1992ல் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகமானார். ஆகஸ்ட் 15 அன்று அவரது முதல் படமான ரோஜா வெளியானது. அதே நாளில் சூரியன் படமும் வெளியானது. அதற்கு இசை தேவா. ரோஜாவில் ரஹ்மானின் இசை இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சூரியனில் தேவாவின் இசையில் ‘லாலாலுக்கு டோல் டப்பிமா’ உள்ளிட்ட பாடல்கள் தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன. படத்தின் வணிகரீதியான வெற்றி, தேவாவின் பயணத்திற்கும் துணையாக இருந்தது.

ரஜினி நடித்த அண்ணாமலை படத்திற்கு தேவா இசையமைத்தார். அது, ரோஜா படத்தைத் தயாரித்திருந்த கே.பாலசந்தரின் கவிதாலயா பட நிறுவனத் தயாரிப்பு. அண்ணாமலை படமும் பாடலும் பெரியளவில் வெற்றி பெற்றதால் தமிழ்த் திரையுலகில் தேவாவுக்கான இடம் உறுதியானது. தேவா தன் அடையாளத்தை வெளிப்படுத்தும் ‘ஆசை’யை நிறைவேற்றும் வாய்ப்பு நெருங்கி வந்தது.

ஆசை படத்தில் தேவாவின் இசை முற்றிலும் மாறுபட்டதாக அமைந்தது. திரையிசையில் அறிமுகமாகியிருந்த தொழில்நுட்பங்களை நேர்த்தியாகக் கையாளும் வகையில் அவரது இசைக்குழு இருந்தது. ஆசை படத்தின் பாடல்கள், படம் வெளியாவதற்கு முன்பே எல்லா இடங்களிலும் ஒலித்தன. படமும் வெற்றி பெற்றது. இனி தனக்கான வழியில் பயணிப்பது என்பது தேவா தீர்மானிக்கும் காலம் அமைந்தது.

காதல் கோட்டை படத்தில் அனைத்துப் பாடல்களும் அருமையாக அமைந்தன. அதில், ‘கவலப்படாத சகோதரா’ என்று தேவாவே பாடிய பாடல் படத்தின் கதையோட்டத்திற்கு உயிரோட்டம் தந்ததுடன், திரையரங்கில் ரசிகர்களை ஆட வைத்தது. சென்னையின் உடலுழைப்புத் தொழிலாளர்கள் வாழும் இடங்களில் பாடப்படும் ‘கானா’ வகைப் பாடல் அது. அதற்கு முன்பும் சில படங்களில் தேவா அதை முயற்சித்திருக்கிறார். எனினும், காதல் கோட்டைக்குப் பிறகு, தேவாவின் அடையாளம் கானா என்றானது.

காதலே நிம்மதி படத்தில் தேவா இசையமைத்து பாடிய ‘விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி’ என்று பாடல் தேவாகானமாக அமைந்துவிட, அதன்பின் முன்னணி நட்சத்திரங்களின் படங்களிலும் ஒரு கானா நிச்சயம் இருப்பதும், அது தேவா தன் இசையில் பாடிய பாடல் என்பதும் திரையிசையின் புது இலக்கணமானது.

தமிழ் சினிமாவில் சென்னை வட்டார வழக்குப் பாடல்கள் என்பவை பொழுதுபோக்கானதாக, நகைக்சுவைக் காட்சிகளுக்குரியதாக, ஏளனத் தொனி கொண்டதாகவே இருந்து வந்தன. கதையம்சத்துடனான கானா என்பதை தேவா நிறுவினார். கானா என்றால் தேவா, தேவா என்றால் கானா என்ற நிலை உருவானது.

கானாவைத் தாண்டியும் பல்வேறு வடிவங்களில் தேவாவின் இசை வெளிப்பட்டது. நாட்டுப்புற, மேற்கத்திய, கர்நாடக இசை வகைகளையும் அவர் நேர்தியாகக் கையாண்டதற்கு, கமல்ஹாசனுடன் அவர் முதன் முதலில் இணைந்து பணியாற்றிய ‘அவ்வை சண்முகி’ படம் சான்றாகும். சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற டைட்டில் இன்றுவரை வெளியாகும் ரஜினிகாந்த்தின் படங்கள் எதுவாக இருந்தாலும் அதன் பின்னணி இசை என்பது அண்ணாமலை படத்தில் தேவா இசையமைத்ததுதான். ஏறத்தாழ 36 ஆண்டுகளாக நிலைத்திருக்கும் வகையிலான இசையைத் தந்திருக்கிறார் தேவா. அதனால்தான் அனிருத் உள்ளிட்ட இன்றைய தலைமுறை இசையமைப்பாளர்கள் தேவாவின் குரலைத் தங்கள் படப் பாடல்களில் பயன்படுத்துகின்றனர்.

படக்குழுவினரும் ரசிகர்களும் விரும்பும் எந்தப் பாடலையும் எந்த மெட்டிலும் தன்னால் வழங்க முடியும் என்பதை மெய்ப்பித்து, தன்னுடைய தனித்துவமான அடையாளத்தையும் பதிவு செய்ததே தமிழ்த் திரை இசைப் பயணத்தில் தேனிசைத் தென்றல் தேவாவின் தடமாகும். மறைந்தாலும் காற்றில் நிறைந்திருக்கிறது தேவா கானா எனும் தேவகானம்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.