“இசைஞானியின் பெருந்தன்மை” –‘நினைவெல்லாம் நீயடா’ இயக்குனர் ஆதிராஜன் !
லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் 1417வது படமாக உருவாகியுள்ள படம் “நினைவெல்லாம் நீயடா”. ‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’, ‘அருவா சண்ட’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்..
பிரஜின் கதாநாயகனாக நடிக்க, மனீஷா யாதவ் ஹீரோயினாக நடிக்கிறார். “அப்பா” படப்புகழ் யுவலட்சுமி இளம் நாயகியாக அறிமுகமாகிறார். சினாமிகா இன்னொரு நாயகியாக அறிமுகமாகிறார். இளம் நாயகனாக ரோஹித் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் மனோபாலா, மதுமிதா, இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், முத்துராமன், பி.எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பை கவனித்திருக்கிறார். முனிகிருஷ்ணன் கலை அமைக்க சண்டை காட்சிகளை பிரதீப் தினேஷ் அமைக்க, நடன காட்சிகளை தினேஷ் மற்றும் தீனா மாஸ்டர்கள் வடிவமைத்திருக்கின்றனர்.
இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தயாரிப்பாளர்கள் கே.ஆர், கே.ராஜன், பி.எல்.தேனப்பன், இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, கவிஞர் சினேகன், நடிகைகள் கோமல் ஷர்மா, மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
இயக்குநர் ஆதிராஜன் பேசும்போது, “இந்த படத்தில் முதன்முறையாக இளையராஜா சாருடன் பணியாற்றியுள்ளேன். இசைஞானியை அணுகுவதே கடினம் என்றும் அவருடன் எளிதாக பணியாற்ற முடியாது என்றும் சொல்வார்கள். ஆனால் அவருடன் இணைந்து பணியாற்றியபோது மிகவும் சவுகரியமாக உணரும்படி எனக்கு இசையமைத்துக் கொடுத்தார் இளையராஜா. ஐந்து பாடல்களும் அற்புதமான பாடல்கள். யுவன் சங்கர் ராஜாவும் ஒரு பாடல் பாடியிருக்கிறார். மதுரையில் என்னுடைய நண்பரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து தான் இந்த காதல் கதையை உருவாக்கி உள்ளேன். இதில் 70 சதவீதம் உண்மை மற்றும் 30 சதவீதம் கற்பனை கலந்து கொடுத்திருக்கிறேன். எல்லோரும் பள்ளி பருவத்தைத் தாண்டி தான் வந்திருப்பார்கள். மண்ணுக்குள் போகும் வரை யாராலும் மறக்க முடியாத ஒரு விஷயம் முதல் காதல். அதை வைத்து தான் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறேன்” என்று கூறினார்.
இளம் நாயகி யுவலட்சுமி பேசும்போது, “நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ‘நினைவெல்லாம் நீயடா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்திருப்பது ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது. இசைஞானியின் இசையில் நான் நடிக்கும் மூன்றாவது படம் இது. அதை பெருமைக்குரிய விஷயமாக நினைக்கிறேன். பள்ளிக் காதல் என்பது மறக்க முடியாத ஒரு விஷயம் தான். எல்லாருமே அதைக் கடந்து வந்திருப்போம். இதை மையப்படுத்தி ஆதிராஜன் இந்தக் கதையை உருவாக்கியுள்ளார். அதில் நானும் ஒரு பாகமாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறினார்.
நடிகை மதுமிதா பேசும்போது, “’நினைவெல்லாம் நீயடா’ படம் வாழ்நாள் நாள் முழுவதும் என் நினைவில் இருந்து கொண்டே இருக்கும். அதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. என்னுடைய பிரசவத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு வரை கூட இதன் படப்பிடிப்பில் நடித்து வந்தேன். இயக்குநர் ஆக்சன் என்று மைக்கில் சொல்லும்போது அந்த அதிர்வை கேட்டு என் வயிற்றில் உள்ள குழந்தை என்னை எட்டி உதைப்பான். அதை மறக்கவே முடியாது. பத்திரிகையாளரும் நடிகருமான தேவராஜ் என்னோடு நடிக்கும்போது, எத்தனையோ டெடிக்கேசனான நடிகைகளைப் பார்த்திருக்கேன். ஆனா மூணு நாள்ல டெலிவரியை வச்சிக்கிட்டு நடிக்கிற ஒரு நடிகையை இப்போதான் பார்க்கிறேன் எனப் பாராட்டினார். எனக்குக் கிடைத்த முக்கியமான வாழ்த்தாக அதைப் பார்க்கிறேன்.
ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு படம் உருவாகி வெளியாகும் வரை ஒரு பேறுகாலம் போலத்தான். பெண்களுக்கு உள்ள அத்தனை அவஸ்தைகளும் அவர்களுக்கும் உண்டு. அந்த வகையில் இயக்குநர் ஆதிராஜனுக்கு நல்ல வெற்றியைத் தரக்கூடிய ஒரு குழந்தையாக இப்படம் இருக்கும் என மனதார வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.
இரண்டாவது நாயகன் ரோஹித் பேசும்போது, “2013ல் இருந்து சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தேன். 2021ல் இயக்குநர் ஆதிராஜன் என்னை அழைத்து இதில் கதாநாயகனாக நடிக்கிறாயா என்று கேட்டார். அந்த விதமாக இப்போதுதான் ஒரு மெயின் கேரக்டரில் நடித்துள்ளேன்” என்று கூறினார்.
இரண்டாம் நாயகி சினாமிகா பேசும்போது, “இளையராஜா இசையில் நடிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் ஒரு கனவாக இருக்கும். என்னுடைய ஆசையும் இந்த படத்தில் தான் நிறைவேறி இருக்கிறது. அவருடைய இசைமேல் எனக்கு அவ்வளவு காதல் இருக்கிறது. அவரது பாடல்களைக் கேட்டுத்தான் நான் வளர்ந்திருக்கிறேன். என்னுடைய முதல் படமே இசைஞானி இசையில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ஆதிராஜனுக்கு நன்றி” என்று கூறினார்.
நடிகை கோமல் ஷர்மா பேசும்போது, “உலகத்தில் உள்ள நல்ல விஷயங்கள் எதையும் தொட முடியாது, கண்ணால் பார்க்க முடியாது என அமெரிக்காவைச் சேர்ந்த ஹெலன் கெல்லர் என்பவர் கூறியுள்ளார். இசையும் காதலும் அதுபோலத்தான். இசைஞானியின் இசையும் காதலும் என இரண்டு அற்புதமான விஷயங்கள் இப்படத்தில் இருக்கின்றன. இப்போது காதல் படங்கள் அதிகம் வருவதில்லை. அந்தக் குறையை இப்படம் போக்கும்” என்று கூறினார்.
தயாரிப்பாளர் கே ராஜன் பேசும்போது, “ஆதிராஜன் நீண்ட நெடுங்காலமாகவே என்னுடைய தம்பியாக உடன் வருபவர். அவர் பத்திரிகையாளராக இருக்கும்போது சில புரட்சிகள் செய்தவர். நான் சில முறை ஜெயிலுக்கு போவதற்கும் அவர்தான் காரணம். ஒரு பத்திரிகையாளராக இருந்ததால் ஒரு படத்தின் தோல்விக்கான அம்சங்கள் என்ன என்பதைத் தெரிந்து ‘சிலந்தி’ படத்தை இயக்கி வெற்றி பெற்றார்.
‘நினைவெல்லாம் நீயடா’ படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க ஒப்புக்கொண்டிருக்கும்போதே படம் எப்படி இருக்கும் என்பது பற்றி சொல்லத் தேவையில்லை. மரியாதை குறைவான டைட்டிலாக இருந்தாலும் காதலின் நெருக்கத்தை சொல்வதற்கு பொருத்தமான டைட்டில் தான். இப்படத்தில் இளம் ஜோடிகளைப் பார்க்கும்போது ‘அலைகள் ஓய்வதில்லை’ கார்த்திக், ராதாவை பார்ப்பது போல இருக்கிறது.
இப்போது வரை சூப்பர் ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய் ஒரு புதிய கட்சியைத் தொடங்கி இருக்கிறார். தமிழ் திரையுலகம் சார்பில் அவரை வாழ்த்துகிறேன். அவர் வெற்றி பெற வேண்டும் என்றால் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் செய்த தொண்டுகளில் 15 சதவீதமாவது செய்ய வேண்டும். மக்களிடம் இறங்கி வர வேண்டும். மேடையில் இருந்து கொண்டு புஷ்ஸி ஆனந்தை அறிக்கை விடச் சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 200 கோடி சம்பளத்தையும் வேண்டாம் எனக் கூறி மக்களுக்காக இறங்கி இருக்கிறார் என்றால் உண்மையிலேயே அவர் நல்லது செய்வார் என நம்புவோம்” என்று கூறினார்.
இயக்குநர் கே.ஆர் பேசும்போது, “இந்த விழாவில் கலந்து கொண்ட எல்லோரும் ஏதோ பேச வேண்டும் என்று நினைத்து தங்களை அறியாமல் உண்மையை பேசி உள்ளார்கள். ஒரு பட்டிமன்றம் ஆகவே இந்த விழா மாறிவிட்டது. ஆதிராஜனை எனக்கு ஆதி காலத்திலிருந்தே தெரியும். பத்திரிகை துறையில் இருந்து அவர் இயக்குநராக வந்திருந்தாலும் பல போராட்டங்களைத் தாண்டித்தான் இந்த இடத்தில் நிற்கிறார். இளையராஜாவால் தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல.. தமிழ் நாட்டுக்கே பெருமை. அப்படி ஒரு இசை மேதை இல்லை என்றால் இன்று நம் சினிமா எப்போதோ செத்துப் போய் இருக்கும்” என்று கூறினார்.
நாயகன் பிரஜின் பேசும்போது, “முதல் காதல், முதல் முத்தம் என எல்லாமே ஞாபகம் இருக்கும். வரும் பிப்ரவரி 14 வந்தால் எங்களது காதலுக்கு பதினாறு வருடம். எனக்கு இரண்டு குழந்தைகள் (ட்வின்ஸ்) உள்ளனர். என் அம்மா அப்பாவைத் தாண்டி இந்த இடத்திற்கு நான் வர மிகவும் ஆதரவாக இருந்தவர் என் மனைவி சாண்ட்ரா. இந்தப் படத்தில் இயக்குநர் ஆதிராஜன் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாகப் பார்த்துப் பார்த்து செதுக்கியுள்ளார். முதல்முறையாக இந்த படத்தின் பூஜையின் போது தான் நான் இளையராஜா சாரை பார்த்தேன். அவரைப் பார்த்த போது பேச்சே வரவில்லை. எப்போதும் காதல் தோல்வி அடைந்தது இல்லை.. அதே போல காதல் படமும் தோல்வி அடையாது” என்று கூறினார்.
தயாரிப்பாளர் ராயல் பாபு பேசும்போது, “ஆதிராஜன் என்னிடம் இப்படத்தின் கதையை சொல்லும்போதே முதல் காதலை கொண்ட ஒரு திரைப்படம் என்று சொன்னார். எனக்கு ரொம்பவே கதை பிடித்து இருந்தது. படத்திற்கு பூஜை போடுவதற்காக எங்கெங்கோ இடம் தேடி அலைந்தபோது இசைஞானி இளையராஜா எங்களை அழைத்து எங்கேயும் போக வேண்டாம் என்னுடைய இடத்திலேயே பூஜையை நடத்துங்கள் என்று கூறி இடம் கொடுத்தார்.
ஒரு புது தயாரிப்பாளராக எனக்கு அவர் கொடுத்த மரியாதை மிகப் பெரிய சந்தோஷம்” என்று கூறினார்.